தொகுதி மறுவரையறை: 7 மாநில முதல்வர்களை ஒன்றிணைக்கும் ஸ்டாலினின் முயற்சிக்கு பலன் கிடைக்குமா?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தொகுதி மறுசீரமைப்பு குறித்து விவாதிப்பதற்காக பல மாநிலங்களின் முதல்வர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். அவரது இந்த முயற்சிகள் தேசிய அளவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த விவகாரம் குறித்துப் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

மார்ச் 22ஆம் தேதி இது தொடர்பாக நடக்கவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்திருக்கிறார் மு.க. ஸ்டாலின்.

இந்தியாவில் மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டிற்கு ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்து விவாதிக்க கடந்த மார்ச் 5ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தினார்.

அந்தக் கூட்டத்தில், இந்தப் பிரச்னையினால் பாதிக்கப்படக் கூடிய மாநிலங்களில் உள்ள கட்சிகளின் முக்கியப் பிரதிநிதிகளைக் கொண்டு 'கூட்டு நடவடிக்கைக் குழு' அமைத்து, இது தொடர்பான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்னை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தற்போது 7 மாநில முதலமைச்சர்களுக்கும் முன்னாள் முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வரின் சார்பில் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அந்தக் கடிதத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பைச் செய்வதால் ஏற்படப் போகும் இழப்பு குறித்தும் இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவை உருவாக்க இருப்பதாகவும், அந்தக் குழுவில் பணியாற்றவும் ஒருங்கிணைந்த செயல் திட்டத்தை வகுக்கவும் ஒவ்வொரு கட்சியிலிருந்து ஒரு மூத்த பிரதிநிதியை நியமிக்க வேண்டுமெனவும் இந்தக் கட்சிகளிடம் கோரப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக விவாதிக்க மார்ச் 22ஆம் தேதி சென்னையில் நடக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ள வேண்டுமென்றும் அந்தக் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தக் கடிதம் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ஒடிசா மாநில முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான், ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த வேறு சில கட்சித் தலைவர்களுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமையன்று (மார்ச் 11) தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் அடங்கிய குழு ஒன்று ஒடிசா மாநிலத்திற்குச் சென்று நவீன் பட்நாயக்கை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.

தி.மு.க. தீவிரமாகச் செயல்பட என்ன காரணம்?

"இதுபோன்ற விவகாரங்கள் ஒரு கட்சியின் பிரச்னையாக, ஒரு மாநிலத்தின் பிரச்னையாக இருந்தால் தீர்வு கிடைக்காது என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக் கல்வி, ஆளுநர்களின் அதிகாரம், நிதி ஒதுக்கீடு போன்ற விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து மிக மோசமான அதிகார மீறல்களை எதிர்கொள்கின்றன. அம்மாதிரி சூழலில், எங்களுக்காக மட்டுமல்ல, பாதிக்கப்படும் இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்காகவும் போராடுவோம் என மற்ற மாநிலங்களை இணைக்க நினைக்கிறது தி.மு.க. இது மாதிரி விஷயங்களில் தனித்துப் போராடினால் தீர்வு கிடைக்காது. ஆகவேதான் இணைந்து போராட நினைக்கிறார்கள்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தி.மு.க. முக்கியமான விவாதப்பொருளாக்கியிருந்தாலும் சில மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலங்களில் இந்த விவகாரம் இன்னும் சூடுபிடிக்கவில்லை.

பஞ்சாபில் காங்கிரசைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரான பர்தாப் சிங் பஜ்வா, அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறார்.

மார்ச் 13ஆம் தேதி பூபேஷ் பாகல் தலைமையில் டெல்லியில் நடக்கவிருக்கும் காங்கிரசின் அரசியல் விவகாரக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எழுப்பப் போவதாகவும் பஞ்சாப் காங்கிரஸ் தெரிவித்திருக்கிறது.

"தன்னால் தென்னிந்தியாவில் வெல்ல முடியாத காரணத்தால், அம்மாநிலங்களை இதன் மூலம் பா.ஜ.க. பழிவாங்குவதாக" குற்றம்சாட்டியிருக்கிறார் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி.

இதுதொடர்பாக மத்திய அரசு அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்ட வேண்டுமென்றும் அவர் கூறியிருக்கிறார். தென் மாநிலங்களில் உள்ள தொகுதிகள் குறையாது எனக் கூறியதைச் சுட்டிக்காட்டியிருக்கும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழி நம்பகத்தன்மையற்றது. துல்லியமான தகவல் இல்லாததன் காரணமாக அவர் இவ்வாறு பேசியிருக்கலாம். அல்லது கர்நாடகா, தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களை குறைத்து மதிப்பிடும் திட்டமிட்ட முயற்சியாக இருக்கலாம்" எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒடிசா மாநிலத்தைப் பொருத்தவரை, பிஜு ஜனதா தளத்தின் தலைவர் நவீன் பட்நாயக்கை தி.மு.க. பிரதிநிதிகள் சந்தித்து, 22ஆம் தேதி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தபோது அக்கட்சி மார்ச் 22ஆம் தேதி கூட்டத்தில் பங்கேற்க ஒப்புதல் தெரிவத்திருக்கிறது.

இருந்தபோதும், இந்த விவகாரம் அம்மாநிலத்தில் இன்னமும் முக்கியப் பேசுபொருளாகவில்லை. தி.மு.க. பிரதிநிதிகளின் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிஜு ஜனதா தளத்தின் துணைத் தலைவர் தேவி பிரசாத் மிஸ்ரா, கட்சிக்குள் இதுதொடர்பாக முழுவதுமாக கலந்தாலோசித்து விட்டுத் தான் கருத்துத் தெரிவிப்போம் எனக் கூறியிருக்கிறார்.

"தொகுதி மறுசீரமைப்புக்கான வழிமுறைகள் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பும் செய்ய வேண்டும். இந்தச் சூழலில் இது முக்கியமான விஷயம்தான் என்றாலும் கட்சிக்குள் கலந்தாலோசித்து இது தொடர்பாக கருத்துகளை வெளியிடுவோம்" என்று அவர் கூறியிருக்கிறார்.

கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் இந்த விவகாரம் இன்னும் பேசுபொருளாகவில்லை.

அதேபோல, ஆந்திர மாநிலத்திலும் இதுதொடர்பாக பெரிய விவாதம் ஏதும் இல்லை. முதல்வர் சந்திரபாபு நாயுடுவோ, ஒய்எஸ்ஆர் காங்கிரசோ இதுகுறித்து குறிப்பிடத்தக்க கருத்துகள் எதையும் தெரிவிக்கவில்லை.

ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் மக்களின் மத்தியில் தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கவில்லை என்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான பண்டாரு ஸ்ரீநிவாஸ ராவ்.

"ஆந்திராவில் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் பா.ஜ.கவுக்கு இணக்கமாக இருக்க நினைக்கிறார்கள். ஆகவே அவர்கள் அதைப் பேச மாட்டார்கள். தெலங்கானாவில் முதல்வர் இதைப் பற்றிப் பேசுகிறார். ஆனால், இந்த இரு மாநிலங்களிலுமே பொதுமக்கள் மட்டத்திற்கு இந்த விவகாரம் பேசுபொருளாகவில்லை. அதனால், இதைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்க வேண்டுமென எந்த அரசியல் தலைவரும் நினைப்பதில்லை" என்கிறார் ஸ்ரீநிவாஸ ராவ்.

ஆனால், இந்த விவகாரத்தை முன்வைத்து தேசிய அளவில் தமிழக முதல்வர் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார் என்ற எண்ணம் சில அறிவுஜீவிகள் மத்தியில் இருக்கிறது என்கிறார் அவர்.

ஆனால், இதற்கு முன்பாகவும் தி.மு.க. இதுபோன்ற தேசிய முன்முயற்சிகளை எடுத்திருக்கிறது என்கிறார் ஏ.எஸ். பன்னீர்செல்வன்.

தொடர்ந்து பேசிய அவர், "மத்திய - மாநில அரசுகளுக்கு இடையிலான உறவுகள் குறித்து ஆராய தி.மு.க.தான் ராஜமன்னார் கமிஷனை அமைத்தது. அதேபோல, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமலாக்கம் செய்ததில் தி.மு.கவின் ஆதரவு மிக முக்கியமானது. அந்த விவகாரத்தில் இந்தியாவிலேயே தடையற்ற ஆதரவை வழங்கிய மாநிலம் தமிழ்நாடுதான். காரணம், எப்போதுமே சமூக நீதி, கூட்டாட்சி போன்ற விவகாரங்களில் தனித்து போராடினால் வெற்றி கிடைக்காது என்பதைப் புரிந்துகொண்டிருப்பதால் தேசிய அளவில் ஆதரவைத் திரட்டுகிறது தி.மு.க." என்றார்.

இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான உறவுகளை ஆராய்ந்து, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவது குறித்து பரிந்துரைக்க 1969-இல் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார்.

1971-இல் இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை அளித்தது. மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில் ஒன்றை அமைப்பது, நிதிப் பகிர்வு உள்ளிட்ட பல விஷயங்களை இந்த ஆணையம் ஆராய்ந்து பரிந்துரைகளை அளித்திருந்தது. இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்க வேண்டுமென 1974 ஏப்ரலில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதனை ஏற்கவில்லை. இருந்த போதும், விரிவான விவாதங்களை இந்தப் பரிந்துரைகள் உருவாக்கின. இதில் முன்வைக்கப்பட்ட ஒரு பரிந்துரையான 'இன்டர் - ஸ்டேட் கவுன்சில்' வி.பி. சிங் பிரதமராக இருந்த போது 1990ல் உருவாக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, 1989ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி தமிழகச் சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1990-இல் இந்தப் பரிந்துரைகளை வி.பி. சிங் அரசு அமல்படுத்த முடிவுசெய்தபோது, வட இந்திய மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் சட்டமன்றத்தில் இதனை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"ஆகவே, ஒரு விஷயத்தை முதலில் சொல்பவர்கள் முட்டாள்கள் அல்ல" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

"மற்ற மாநிலங்களில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து இன்னும் பேச ஆரம்பிக்கவில்லை என்பது ஒரு பிரச்னையில்லை; தி.மு.க. இந்த விஷயத்தை முன்னெடுப்பதன் மூலம், மத்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை பிற மாநிலங்களுக்குத் தரக்கூடும். தி.மு.க.வினர் மீதும் வழக்குகள் இருக்கின்றன. இருந்தாலும் துணிச்சலுடன் இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். இது பிற மாநிலங்களில் உள்ள தலைவர்களுக்கு உத்வேகமளிக்கலாம்.

இதன் காரணமாக தேசிய அளவில் தி.மு.கவுக்கு ஒரு கவனம் கிடைக்கும் என்பது உண்மைதான். ஆனால், தொகுதி மறுசீரமைப்பு குறித்தும், மும்மொழிக் கொள்கை குறித்தும் தமிழ்நாட்டின் பார்வை தேசிய அளவில் பரவுவதுதான் முக்கியம். இப்போது வட இந்திய ஊடகங்களில் இந்தப் பிரச்னையை பாசிட்டிவான பார்வையோடு பார்க்கிறார்கள். அது முக்கியமான விஷயமல்லவா?" என்கிறார் ஷ்யாம்.

விரைவில், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தி.மு.கவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை அமைச்சர் எ.வ. வேலுவும் நேரில் சென்று அழைப்பு விடுக்கவிருக்கின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)