You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நடிகர் சித்தார்த் விளக்கம்: "இந்தி புரியுமில்ல? நாங்க எதை அகற்ற சொல்றோமோ அதுதான் விதி" - மதுரை விமான நிலைய சம்பவம் முழு விவரம்
மதுரை விமான நிலையத்தில் தனது பெற்றோர் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகவும் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இந்தியிலேயே பேசியதாகவும் நடிகர் சித்தார்த் சமூக ஊடகத்தில் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளான நிலையில், விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற விரிவான விளக்கத்தை நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது பெற்றோருடன் விமானப் பயணத்திற்காக மதுரை விமான நிலையம் சென்றிருந்தபோது அங்கு பாதுகாப்பு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் குறித்து தனது முந்தைய பதிவில் சாடியிருந்தார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “மதுரை விமான நிலையத்தில் சிஆர்பிஎஃப் அதிகாரிகளால் 20 நிமிடம் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம். அவர்கள் வயதான எனது பெற்றோரின் பைகளில் இருந்து நாணயங்கள் வரை அனைத்தையும் அகற்றுமாறு கூறினார்கள்.
அதோடு, ஆங்கிலத்தில் பேசுமாறு கூறிய பிறகும் எங்களிடம் பலமுறை இந்தியில் பேசினார்கள். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்தபோது இந்தியாவில் இப்படித்தான் நடக்கும் எனக் கூறினர். வேலையற்றவர்கள் தங்கள் அதிகாரத்தைக் காட்டுகின்றனர்,” என தெரிவித்திருந்தார்.
மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையான சிஐஎஸ்எஃப் கையாளுகிறது. இருப்பினும், சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சிஆர்பிஎஃப் பிரிவுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அவருடைய பதிவுக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உட்படப் பலரும் எதிர்வினையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் என்ன நடந்தது என்பதை விவரமாக விவரித்து, சித்தார்த் இன்ஸ்டாகிராமில் மீண்டுமொரு பதிவை இட்டுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் என்ன நடந்தது என்ற சித்தார்த்தின் விளக்கமான பதிவின் சாராம்சம் கீழே.
“விமான நிலைய சம்பவத்துக்கு பின்னர், தங்களின் அனுபவம் குறித்து பலரும் என்னிடம் தகவல்களைப் பகிர்ந்து வருகின்றனர். பல்வேறு ஊடகங்களும் என்னைத் தொடர்புகொண்டு வருகின்றன. எனது அனுபவத்தை இங்கு தெரிவிப்பது சரியாக இருக்கும் என்று நான் எண்ணுகிறேன். என் மீது வெளிச்சம் பாய்ச்சுவதை விட இந்த விவகாரத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறேன். தேவையில்லாத கவனக் குவிப்பு என் குடும்பத்தினரை மேலும் கவலை அடையச் செய்யும்.
மதுரை விமான நிலையத்திற்கு இதற்கு முன்னரே பலமுறை சென்று வந்துள்ளேன். ஆனால், இதுவரை இப்படி ஓர் அசௌகர்யமான சூழலை எதிர்கொண்டதில்லை.
மூன்று முதியவர்கள், இரண்டு குழந்தைகள் மற்றும் சில பெரியவர்கள் என இந்த முறை எனது குடும்பத்தினருடன் நான் பயணித்தேன். விமான நிலையத்தில் கூட்டம் இல்லாததால் போர்டிங் நேரத்திற்கு முன்பாகவே பாதுகாப்பு தொடர்பான செயல்முறைகளை முடிக்கச் சென்றோம்.
பாதுகாப்பு வரிசையும் ஆளின்றி இருந்தது. அந்த நேரத்தில் நாங்கள் மட்டுமே இருந்தோம். கண்ணாடிக்குப் பின்னால் அமர்ந்திருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படையைச் சேர்ந்த நபர், குழந்தைகளின் பாஸ்போர்ட் உட்பட எங்களின் அடையாள அட்டைகளை சோதனை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, எனது முகத்தையும் ஆதார் அட்டையிலிருந்த என் புகைப்படத்தையும் பார்த்துவிட்டு ‘ யே தும் ஹோ’ என்று கூச்சலிட்டார்.
"நான்தான் அது என்றும் ஏன் இப்படிக் கேட்டீர்கள்?" என்றும் அவரிடம் கேட்டேன். அப்போது சந்தேகம் இருப்பதாக அவர் கூறினார்.
பின்னர், அடுத்த நபர், "ஹிந்தி சமஜ்தே ஹை நா? (இந்தி புரியுமில்ல?) " என்று கூச்சலிட்டார். நாங்கள் பதிலளிக்கும் முன்னரே, அவர் கண்ணில் பட்ட ஐபாட், ஐஃபோன் ஆகியவற்றை வெளியே விசிறினார். பின்னர், எனது இயர்போனை எடுத்து வீசினார். ஏற்கெனவே பல்வேறு விமான நிலையங்களில், இயர்போன் போன்ற மின்சார கருவிகளை நாங்கள் திருட்டு சம்பவம் காரணமாக இழந்துள்ளதால், அவற்றை ட்ரேவில் வீச வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு இது மதுரை என்றும் இவைதான் விதிகள் என்றும் எங்களிடம் கூறப்பட்டது.
முதியவர்கள் இருப்பதால் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்படி அவரிடம் கூறினேன்.
பின்னர், அவர்கள் எனது அம்மாவின் பர்ஸை வெளியே எடுத்து அதன் உள்ளே நாணயங்கள் உள்ளதா என்று கேட்டனர். அவர் ஆம் என்று கூறியபோது, அவற்றையெல்லாம் வெளியே எடுக்கும்படி கூறினர்.
நாணயங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு ஸ்கேனர் கருவியில் அவை தெளிவாகத் தெரியும் என்பதால், ஏன் அவற்றை வெளியே எடுக்க வேண்டும் என்றும் நான் அவர்களிடம் கேட்டேன்.
"நாங்கள் எதை அகற்றக் கூறுகிறோமோ அதை அகற்ற வேண்டும். அதுதான் இந்தியாவில் விதி" என்று அவர்கள் பதில் அளித்தனர்.
70 வயதைக் கடந்தவரிடம் இவ்வாறு கூறுவது சரியில்லை என்றும் ஏதாவது தவறு நடந்து விட்டதா, ஏன் இப்படி அடாவடியாகப் பேசுகிறீர்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.
ஸ்கேனர் கண்காணிப்பில் இருந்த மற்றொரு நபர் என் சகோதரியிடம் சிரிஞ்சுகளை எடுத்துச் செல்கிறீர்களா என்று சத்தமாகக் கேட்டார்.
மருத்துவ விவரங்களையெல்லாம் ஏன் அவர்கள் கேட்கிறார்கள்.
மக்களின் தனிப்பட்ட தகவல்களை இப்படி வெளியிடுவது சரியானது தானா?
இவை 'துன்புறுத்தல்' என்று நான் எதிர்ப்பு தெரிவித்தேன். மேலும், "வந்ததில் இருந்து நீங்கள் கத்திக்கொண்டே இருக்கிறீர்கள்" என்று கூறியதோடு ஆங்கிலத்தில் உரையாடுமாறு கேட்டேன்.
அப்போது, இந்தியாவில் விதிகள் மற்றும் வரைமுறைகள் உள்ளன என்று எனக்கு பதில் கிடைத்தது.
இதிலேயே 20 நிமிடங்கள் கடந்துவிட்டன.
மூத்த அதிகாரியிடம் பேசுமாறு என்னிடம் கூறப்பட்டது. நான் முக கவசத்தைக் கழற்றியதும் என்னை அடையாளம் கண்டுகொண்ட அவர் ‘நான் உங்கள் ரசிகன். தயவுசெய்து நீங்கள் போகலாம்’ என்றார்.
என்னை அடையாளம் தெரிந்து நீங்கள் காட்டும் கரிசனம் எனக்குத் தேவையில்லை என்று அவரிடம் கூறினேன்.
என்னை அடையாளம் தெரிந்ததால் நீங்கள் மன்னிப்பு கூறினீர்கள்.
இதுபோன்ற இன்னல்களை எதிர்கொள்ளும் சாதாரண மக்களின் நிலை என்ன? பெரியோரை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
விமான நிலையத்தைப் பாதுகாப்பது என்பது கடினமான காரியம். அதை யாரும் மறுப்பதில்லை. ஆனால் அவர்கள் செயல்பட்ட விதம் சரியல்ல.
இந்த விவகாரத்தில் எனக்கு எதிராகவோ யாருக்கும் எதிராகவோ எவ்வித கொள்கைகளையும் சுமத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சிறப்பு கவனிப்பு வழங்குங்கள் என்றூ நான் கேட்கவில்லை. நான் எதிர்பார்ப்பது எல்லாம் பெரியவர்களிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே" என்று சித்தார்த் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்