வாரிசு, துணிவு: பொங்கல் போட்டியில் வெற்றி பெற்றது யார்?

ajith

பட மூலாதாரம், TWITTER/BONEYKAPOOR

வாரிசு – துணிவு ஆகிய இரு படங்களும் வெளியாகி ஒரு நாள் கடந்துள்ள நிலையில் யார் வெற்றிப் பெற்றார்கள் என விஜய், அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதித்து வருகின்றனர்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஜய் நடிப்பில் வாரிசு மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய இரண்டு படங்கள் நேற்று ஒரே நாளில் வெளியாகின.

நேற்று நள்ளிரவு ஒரு மணியளவில் துணிவு வெளியான நிலையில், அதிகாலை 4 மணியளவில் வாரிசு வெளியானது.

இதனை தொடர்ந்து இரண்டு படங்களும் எப்படி இருக்கின்றன என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

vijay

பட மூலாதாரம், VARISU - OFFICIAL TRAILER

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் அஜித் மற்றும் விஜய். ஜில்லா- வீரம் படங்கள் வெளிவந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே நேரத்தில் அஜித் -விஜய் நடித்த திரைப்படங்கள் நேற்று வெளியாகின.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழில் வேறு எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், துணிவு- வாரிசு ஆகிய படங்களுக்கான நேரடி போட்டியாக அமைந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் தொடரும் விவாதம்

இந்நிலையில் வெளியாகி ஒருநாள் கடந்துள்ள நிலையில் வெளியான இருபடங்களில் எது சிறப்பாக அமைந்துள்ளது, அதிக வசூலைப் பெறப்போவது யார் என சமூக வலைத்தளங்களில் இருதரப்பு ரசிகர்களும் விவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வழக்கம்போல இருதரப்பிலும் ஹாஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இன்று காலை முதல் டிவிட்டரில் சென்னை டிரண்டிங் பட்டியலில் ‘#VarisuPongalWinner’ என்றும் ‘#Pongal2023WinnerTHUNIVU’ என்றும் இடம்பெற்று வருகிறது.

இந்த ஹாஷ்டேகில் இருதரப்பு ரசிகர்ளும் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

திரையரங்குகள் ஒதுக்கீடு சர்ச்சைக்கு பிறகு இருப்படங்களும் ஒரே நாளில் வெளியான நிலையில், வசூல் ரீதியாக எந்த படம் அதிக வரவேற்பை பெற்றது என இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதற்கிடையில் வாரிசு படத்தில் விஜய் பேசிய “5 நிமிடத்தில் ஆட்சியே மாறும்” என்ற வசனமும் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது.

vijay

பட மூலாதாரம், VARISU - OFFICIAL TRAILER

இருதரப்பு ரசிகர்கள் மோதல்

இந்நிலையில் நேற்று சிறப்பு காட்சிகளை பார்ப்பதற்காக நள்ளிரவிலேயே இருதரப்பு ரசிகர்களும் திரையரங்குகள் முன்பு திரண்ட நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் துணிவுப் படம் நள்ளிரவு ஒரு மணிக்கும் வாரிசுத் திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் திரையிடப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு ரசிகர்களும் அதிகளவில் திரண்டனர். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் கூடியதால் திடீர் தேனீர் கடை, பிரியாணி கடை போன்றவையும் முளைத்தன.

தளபதி என விஜய் ரசிகர்களும் தல, ஏ.கே என அஜித் ரசிகர்களும் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். ஒருகட்டத்தில், திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த அஜித், விஜய் ஆகியோரின் பேனர்கள் கிழிக்கப்பட்டதால் இருதரப்பு ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திரையரங்கில் அசாதாரண சூழல் நிலவியதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதேபோல், கோவை மாநகர் பூ மார்க்கெட் வீதியில் அமைந்துள்ள அர்ச்சனா - தர்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட இருந்தது. இதனையொட்டி நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தியேட்டர் முன்பு திரண்டிருந்தனர்.

ajith

பட மூலாதாரம், THUNIVU OFFICIAL TRAILER

காவல்துறையினர் கூட்டத்தை தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்றும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்கள் தியேட்டர் கதவை உடைத்துவிட்டு திரையரங்குக்குள் நுழைந்தனர். இந்த நெரிசலில் முகப்பில் இருந்த கண்ணாடியும் படிக்கட்டு கம்பிகளும் உடைக்கப்பட்டன. காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய தடியடியிலும் கூட்ட நெரிசலிலும் சில ரசிகர்களுக்கு மண்டை உடைந்து ரத்த காயமும் ஏற்பட்டது.

அஜித் ரசிகர் மரணம்

துணிவு படம் பார்ப்பதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு 10ஆம் தேதி இரவு வந்திருந்த நடிகர் அஜித்தின் ரசிகர், பிற ரசிகர்களோடு ஆடிப்பாடி கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு இருந்தார். கொண்டாட்டத்தில் ஈடுப்பட்டு இருந்த 19 வயதான பரத் குமார், அந்த வழியாக சாலையில் சென்ற கண்டெய்னர் லாரி மீது ஏறி ஆடியுள்ளார்.

நடனமாடியவாறே கண்டெய்னர் லாரியில் இருந்து கீழே குதித்த பரத் குமார் தவறி விழுந்ததில், அவருக்கு முதுகில் அடிப்பட்டது. உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பரத் குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு முதுகு தண்டுவடத்தில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும், அதற்கு சிகிச்சை வழங்க வேண்டும் என்று கூறினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரத் குமார் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் நடிகர்களுக்காக கண்மூடித்தனமான கொண்டாட்டங்களிலும் சண்டைகளிலும் ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு திரைப்படங்களை திரைப்படங்களாக மட்டுமே அணுக வேண்டும் என்றும் இதுகுறித்து பலர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: