கர்நாடக அரசியலில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாதது ஏன்? அவர்களது பிரச்னைகள் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழ் பேசக்கூடிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களும் தங்களைத் தமிழர்கள் என அடையாளப்படுத்திக்கொள்வதில்லை. கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு என தனித்துவமான பிரச்சனைகள் உள்ளனவா?

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம் கர்நாடகம்தான். இதற்கு அடுத்த நிலையில்தான் ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் வருகின்றன. 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம்.

கர்நாடக மாநிலத்தில் பெங்களூர், மைசூர், ஷிவமோகா, உடுப்பி, கோலார், பத்ராவதி, கொள்ளேகால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

கர்நாடகத் தமிழர்களுக்கென பிரத்யேகமான பிரச்சனைகள் உள்ளனவா?

இந்தக் கேள்விக்கு பெரும்பாலான தமிழர்கள் 'இல்லை' என்றே பதிலளிக்க விரும்புகிறார்கள். தனியாக நிறுத்திக் கேட்டால்கூட, "அப்படி ஏதும் சொல்ற மாதிரி இல்லை. எல்லோருக்கும் இருக்கும் பிரச்சனைதான் நமக்கும்" என்கிறார்கள்.

சிலர், அரசுப் பள்ளிக்கூடங்களில் தமிழ் ஆசிரியர் பதவிகள் நிரப்பப்படாதது குறித்துப் பேசுகிறார்கள்.

"40 ஆண்டுகளுக்கு முன்பாக பெங்களூரில் மட்டும் சுமார் 300 பள்ளிகளில் தமிழ் படிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால், இப்போது அது வெறும் 10 பள்ளிக்கூடங்களாகக் குறைந்துவிட்டது" என்கிறார் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான தாமோதரன்.

இது தவிர, வேறு எந்தப் பிரச்சனையையும் பிரத்யேகப் பிரச்சனைகளாக இங்கிருக்கும் தமிழர்கள் சொல்வதில்லை.

ஆனால், அரசியல் களத்தில் தங்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்த வருத்தம் பலருக்கும் இருக்கிறது. காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி, மதச் சார்பற்ற ஜனதா தளம் ஆகிய மூன்று பிரதான கட்சிகளிலும் மாநில அளவில் அறியப்பட்ட தலைவர்களாக தமிழர்கள் யாரும் கிடையாது.

இத்தனைக்கும் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழர்களின் வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளன. குறிப்பாக மத்திய பெங்களூர் மக்களவை தொகுதியில் உள்ள சுமார் 14 லட்சம் வாக்காளர்களில் சுமார் 5 லட்சம் வாக்காளர்கள் தமிழர்கள். அதேபோல, சிவாஜி நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள 1.67 லட்சம் வாக்காளர்களில் 92 ஆயிரம் பேர் தமிழர்கள். புலிகேசி நகர், கோலாரில் உள்ள தங்கவயல் ஆகிய தொகுதிகளிலும் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.

இருந்தபோதும் 2004ஆம் ஆண்டிற்குப் பிறகு, எந்த சட்டமன்றத் தொகுதியிலும் தமிழர்கள் வெற்றிபெற்று சட்டமன்றத்திற்குச் செல்லவில்லை. 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது கே.ஜி.எஃப் தொகுதியில் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் சார்பில் பக்தவத்சலமும் ரிபப்ளிகன் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சாரப்பில் ராஜேந்திரனும் பெங்களூரின் சி.வி ராமன் நகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் சம்பத் ராஜும் போட்டியிட்டனர். ஆனால், இவர்களில் யாரும் வெற்றிபெறவில்லை.

இந்த முறை கே.ஜி.எப். தொகுதியில் ராஜேந்திரன் உள்ளிட்ட சில தமிழ் வேட்பாளர்களும் சி.வி. ராமன் நகர் தொகுதியில் காங்கிரசின் சார்பில் ஆனந்த் குமாரும் களத்தில் தமிழர்களாக இருக்கின்றனர். கடந்த முறை மூன்று பேரை நிறுத்திய அ.தி.மு.க. இந்த முறை போட்டியிடவில்லை.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள், பிரதான அரசியல் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து தமிழர்களை வெற்றிபெறக்கூடிய தொகுதிகளில் நிறுத்த வேண்டும் எனக் கோருவது வழக்கம். இந்த முறையும் அதைச் செய்திருக்கிறார்கள். இருந்தபோதும், காங்கிரஸ் சார்பில் ஒருவர் நிறுத்தப்பட்டதைத் தவிர, வேறு ஏதும் நடக்கவில்லை.

1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, கர்நாடக மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. தொடர்ச்சியாக இங்கு வேட்பாளர்களை நிறுத்திவந்தது. 1970களில் தி.மு.க. உடைந்த பிறகு, அ.தி.மு.கவும் சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியது. இருந்தபோதும் கர்நாடக சட்டப்பேரவையில் தமிழர்கள் ஒருபோதும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் இருந்ததில்லை.

சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் காந்தி நகர் எம்.எல்.ஏவாக இருந்த முனியப்பாவும் கோலார் தங்கவயலைச் சேர்ந்த பெருமாளும் குறிப்பிடத்தக்கவர்கள். பெருமாள் காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் இருந்தார். கோலார் தொகுதியிலிருந்து பக்தவத்சலம், ராஜேந்திரன் ஆகியோரும் தொடர்ந்து சில வெற்றிகளைப் பெற்றனர்.

ஆனால், காவிரி விவகாரம் பெரிதாக உருவெடுக்க ஆரம்பித்த பிறகு, தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது குறைய ஆரம்பித்து. 1991ல் நடந்த காவிரி தொடர்பான கலவரத்திற்குப் பிறகு மாநிலத்தின் பெரிய கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதை முற்றிலுமாகத் தவிர்த்தன. அப்படியே நிறுத்தினாலும், அந்த வேட்பாளர்கள் தங்கள் தமிழ் அடையாளங்களைச் சொல்லி வாக்கு சேகரிப்பதில்லை. சட்டமன்றத்திலும் தங்களைத் தமிழர்களாக முன்னிறுத்தி கோரிக்கைகளை ஏழுப்புவதில்லை.

"இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மொழிவாரி சிறுபான்மையினர் சிறிய சதவீதத்தில் இருந்தால்கூட மதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மொழிவாரி சிறுபான்மையினர் பெரும் எண்ணிக்கையில் சட்டமன்றத்திற்கும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். ஆனால், கர்நாடக மாநிலத்தில் சுமார் 50 தொகுதிகளில் வெற்றிவாய்ப்பை நிர்ணயிக்கும் நிலையில் தமிழ் பேசும் மக்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் தமிழர்கள் கண்டுகொள்ளப்படுவதில்லை. இரண்டு தேசியக் கட்சிகளும் தமிழர்களைக் கணக்கிலேயே கொள்வதில்லை" என்கிறார் கர்நாடக தமிழ் குடும்ப கூட்டமைப்பைச் சேர்ந்த செந்தில்குமார்.

ஆனால், தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெற்றிபெறுவதில்லையே எனக் கேள்வியெழுப்பினால், அவர்கள் வெற்றிபெறும் தொகுதிகளில் நிறுத்தப்படுவதில்லை என்கிறார் செந்தில்குமார்.

"சரியான தொகுதியைக் கொடுக்காமல், ஏதோ ஒரு தொகுதியில் நிறுத்தினால் எப்படி வெற்றிபெற முடியும்? ஜெயிக்கக்கூடிய தொகுதியில் வாய்ப்புக் கொடுக்க வேண்டும். எந்த அரசியல் கட்சியும், தாங்கள் நிச்சயமாக வெல்வோம் எனக் கருதக்கூடிய தொகுதியில் தமிழர்களை வேட்பாளர்களாக ஆக்குவதே கிடையாது. இதனால், கடந்த 20 ஆண்டுகளாக எந்தத் தொகுதியிலும் தமிழர்கள் எம்.எல்.ஏக்கள் ஆவதே கிடையாது" என்கிறார் அவர்.

பிரதான அரசியல் கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை என்று கூறினாலும், கர்நாடக அரசியலைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில், தமிழர்களுக்கு பெரிதாக அரசியல் ஈடுபாடு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டுகிறார் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த சி. ராஜன்.

"இன்றைய சூழலில் கர்நாடக அரசியலில் தமிழர்களின் பங்களிப்பு என்பது சுத்தமாக இல்லாமல் போயிருக்கிறது. சட்டமன்றத்திலோ, மாநகராட்சியிலோ அவர்கள் உறுப்பினராக இல்லை. எந்த அரசியல் கட்சியிலும் பெரிய ஆளுமையாகவோ, தலைவர்களாகவோ இல்லை. கடந்த காலத்தில் அண்ணாவைப் போல பேசக்கூடிய அல்போன்ஸ் போன்ற ஆளுமைகள் இருந்தார்கள். அப்படி இப்போது யாரும் இல்லை. கீழ்மட்டத்தில் கொடி பிடிக்கும் தொண்டர்களாக ஏதோ சிலர் இருக்கிறார்கள். இதுதான் கர்நாடகத்தில் தமிழர்களின் அரசியல் நிலைமை" எனக் குறிப்பிடுகிறார் ராஜன்.

மேலும், பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிரண்டு பேருக்குத்தான் வாய்ப்பளிக்கின்றன என்பதால், அவர்கள் வெற்றிபெற்றுவந்தால்கூட சட்டமன்றத்தில் எதையும் சாதிக்க முடியாது என்பதையும் ராஜன் சுட்டிக்காட்டுகிறார்.

"1982ல் பள்ளிக்கூடங்களில் முதன்மை மொழியாக எதனை வைத்துக்கொள்வது என்பது தொடர்பாக வெளிவந்த கோகக் அறிக்கைக்குப் (Gokak Report) பிறகு கன்னட மொழிக்கு முதலிடம் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், தமிழ்க் குழந்தைகள் தமிழைக் கற்கும் வாய்ப்புகள் குறைந்திருக்கின்றன. மாநில அரசுதான் சிறுபான்மையினர் தங்கள் தாய்மொழியைக் கற்பதற்கு உதவ வேண்டும்" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்சனைகளையெல்லாம் மீறி பிரதான கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்தினாலும், அவர்கள் தமிழர்களாக தங்களை முன்னிறுத்தி வாக்கு சேகரிப்பதில்லை. தொலைக்காட்சிகளுக்கு தமிழில் பேட்டியளிக்கவே அவர்கள் தயங்குகின்றனர். தற்போது சி.வி. ராமன் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ஆனந்த் குமார் தமிழர் என்றாலும் தமிழில் ஊடகங்களிடம் பேசத் தயங்குகிறார்.

அவர் சார்பில் பேசிய அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரும் இளைஞர் காங்கிரசின் முன்னாள் நிர்வாகியுமான முருகன் முனிரத்னம், "நாங்கள் இங்கே மொழியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ வாக்கு கேட்க மாட்டோம். வளர்ச்சி அடிப்படையில்தான் கேட்போமே தவிர, தமிழுக்கு ஓட்டுப் போடுங்கன்னு 'அஜெண்டா' வச்சு கேட்கமாட்டோம்" என்கிறார்.

தமிழர்களுக்கு அரசியல் ரீதியாக எந்த பலமும் இல்லை என்பதை சமீபத்தில் ஷிமோகாவில் நடந்த சம்பவத்தில் இருந்தே புரிந்துகொள்ளலாம் என்கிறார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரான தாமோதரன். "தமிழர்களின் வாக்குகளை சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட பா.ஜ.கவின் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டு, அவமதிக்கப்பட்டது. சூழல் இப்படியிருக்கும்போது என்ன செய்வது?" என்கிறார் அவர்.

மதச் சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு மொழிச் சிறுபான்மையினரான தமிழர்களுக்குக் கிடைக்கவில்லை என்கிறார் தாமோதரன். "தமிழர்களால் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு கவுன்சிலர்களாக முடியும். அதைத் தாண்டி பெரிதாக எதுவும் செய்ய முடிவதில்லை" என்கிறார் அவர்.

ஒரு தொகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதற்காக அந்தத் தொகுதியில் தமிழர்களை அரசியல் கட்சிகள் நிறுத்தினால், அவர்கள் வெற்றிபெறுவார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதற்கு சிறந்த உதாரணம், கேலார் தங்கவயல் தொகுதி. சுமார் 80 சதவீத வாக்காளர்கள் தமிழர்களாக இருக்கும் இந்தத் தொகுதியில், தமிழர்கள் போட்டியிட்டும் கடந்த மூன்று தடவைகளாக தமிழரல்லாதவர்களே வெற்றிபெற்று வருகின்றனர்.

ஒரு தொகுதியில் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள், அந்தத் தொகுதியில் தமிழர் ஒருவர் வேட்பாளராகப் போட்டியிட்டால், அவர் தமிழர் என்பதற்காக ஒட்டுமொத்தமாக திரண்டு அவருக்கே வாக்களிப்பதில்லை. தமிழர்கள் பெரும்பாலும் கட்சி அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள் என்பதும், அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கிற்கு ஒரு காரணமாக அமைகிறது. "பெங்களூரில் உள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில் 14 தொகுதிகளில் தமிழர்கள்தான் முடிவெடுக்கும் சக்தியாக இருக்கிறார்கள். ஆனால், தமிழர்கள் கட்சி சார்ந்தே வாக்களிக்கிறார்கள். இதனால், அரசியல் கட்சிகள் தமிழர்களை நிறுத்துவது குறித்து அலட்டிக்கொள்வதில்லை" என்று சுட்டிக்காட்டுகிறார் தாமோதரன்.

இந்த முறை பெங்களூர் தமிழ்ச் சங்கம், பெங்களூர் நகருக்குள் போட்டியிடுபவர்களில் தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் என்று குறிப்பிட்டு சிலரை அடையாளம் காட்டியிருக்கிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதியைச் சேர்ந்த தமிழர்கள், இவர்களுக்கே வாக்களிக்க வேண்டுமெனவும் கூறியிருக்கிறது.

கவுன்சிலரான தன்ராஜ் என்பவரை சிக்பேட்டை தொகுதியில் நிறுத்த வேண்டுமென பா.ஜ.கவிடம் கோரிக்கை விடுத்தது தமிழ்ச் சங்கம். ஆனால், அது நடக்கவில்லை. மேலும், பெங்களூர் தமிழ்ச் சங்கம் அமைந்துள்ள சிவாஜி நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ரிஷ்வான் அர்ஸத், திருவள்ளுவர் சிலை அமைந்திருக்கும் பூங்காவை மேம்படுத்த தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை செலவழித்து பணிகளைத் துவங்கியிருந்தார்.

ஆனால், அந்தப் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.கவினர் அதற்கு தடை உத்தரவு வாங்கியதோடு கட்டிய சில பகுதிகளையும் இடித்துவிட்டதாக தமிழ்ச் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இதனால், இந்த முறை ரிஷ்வானுக்கே ஆதரவளிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் தமிழர்கள் அங்குள்ள கன்னட சமூகத்தோடு ஒருங்கிணைந்து வாழவே விரும்புவதால், அரசியல் பிரதிநிதித்துவம் குறித்துப் பெரிதாக பேச விரும்புவதும் இல்லை.

மற்றொரு பக்கம், கன்னட மொழி உணர்வை அடிப்படையாக வைத்து தேர்தலைச் சந்திக்கும் கன்னட சலுவாலி வடால் பக்ஷவின் தலைவரான வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியையே சந்தித்து வருகின்றனர். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வாட்டாள் நாகராஜ், சுமார் 6,000 வாக்குகளையே பெற்று படுதோல்வியடைய நேரிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: