பஜ்ரங் தளத்தை நரசிம்ம ராவ் அரசாங்கம் தடை செய்தது ஏன்? அதன் வரலாறு என்ன?

    • எழுதியவர், வி. ராமகிருஷ்ணா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 10ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் களம் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கர்நாடகாவில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் அமைப்பை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது.

முக்கிய நகரங்களில், காதலர் தினத்தன்று பூங்காக்கள் மற்றும் சாலைகளில் பஜ்ரங் தள ஆர்வலர்கள் தோன்றுவது அனைவரும் அறிந்ததே. பஜ்ரங் தளம் என்றால் என்ன? அது எப்படி வந்தது? இந்த அமைப்பு வளர்ச்சி பெற்றது எப்படி? பல்வேறு போராட்டங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களில் இந்த அமைப்புக்கு உள்ள தொடர்பு என்ன? இவற்றை விரிவாக தெரிந்துகொள்வோம்.

பஜ்ரங் தளம் என்பதற்கு `ஹனுமனின் படை` என்று பொருள். இந்து கடவுள் ஆஞ்சநேயரின் பெயர்களில் ஒன்று பஜ்ரங்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அமைப்புகளுள் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத்தின் (VHP) இளைஞர் பிரிவு பஜ்ரங் தளம் என்று அழைக்கப்படுகிறது.

எப்போது தொடங்கப்பட்டது?

உத்திரப் பிரதேசத்தில் அக்டோபர் 8, 1984 அன்று பஜ்ரங் தளம் தொடங்கப்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் 1964ல் தொடங்கப்பட்டது. 1984, உத்திரப் பிரதேசத்தில் ராமர்- ஜானகி ரதயாத்திரை நடைபெற்றது.

இந்த ரத யாத்திரை நடைபெற்றால் விளைவுகள் கடுமையானதாக இருக்கும் என்று சில அமைப்புகள் எச்சரித்தன. உத்திரப் பிரதேச அரசும் ரத யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது. ரத யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க இளைஞர்களுக்கு இந்து துறவிகள் அழைப்பு விடுத்தனர். இந்த அழைப்பை ஏற்று நூற்றுக்கணக்கான இளைஞர்கள் அயோத்தியை வந்தடைந்தனர். அவர்கள் ரத யாத்திரைக்கு பாதுகாப்பாக இருந்ததாக விஎச்பி தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு ரத யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க அயோத்திக்கு வந்த இளைஞர்களை கொண்டு பஜ்ரங் தளம் உருவாக்கப்பட்டது. உ.பி.யில் உள்ள ஹிந்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முதன்மை நோக்கம்.

1985 ஆம் ஆண்டில், பஜ்ரங் தளம் "ராம் பக்த பாலிதானி" என்ற ஒரு படையை உருவாக்கியது, அது "உயிர்களை தியாகம் செய்ய" தயாராக இருந்தது.

1986 இல் பஜ்ரங் தளம் மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

பஜ்ரங் தளத்தின் குறிக்கோள்கள் என்ன?

"ஹிந்துக்களை பாதுகாத்தல், பசுக்களை பாதுகாப்பது, வரதட்சணை, தீண்டாமை ஒழிப்புக்கான போராட்டம், இந்து மரபுகள், பழக்கவழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் அவமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது, அழகி போட்டிகளை எதிர்ப்பது, ஆபாசத்தை தடுத்தல், நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களை எதிர்கொள்வது"

இவை தவிர அகண்ட பாரத் சங்கல்ப் திவாஸ், ஹனுமான் ஸ்மிருதி திவாஸ், சௌர்ய திவாஸ், பலோபாசன திவாஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் பஜ்ரங் தளம் ஏற்பாடு செய்கிறது.

ஹிந்து மதத்தைப் பாதுகாக்கப் பாடுபடுவோம் என்று கூறும் பஜ்ரங் தளம், தங்களை மற்ற மதங்களுக்கு எதிரானது அல்ல என்றும் கூறுகிறது.

ராம ஜென்மபூமி இயக்கம்

அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட வேண்டும் என்ற விவகாரத்தில் பஜ்ரங் தளம் மிக தீவிரமாக செயல்பட்டது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அடிக்கல் நாட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்துக்கு ராஜீவ் காந்தி தலைமையிலான அப்போதைய மத்திய அரசு 9 நவம்பர் 1989 அன்று அனுமதி வழங்கியது. இந்த நிகழ்ச்சியின் வெற்றியில் பஜ்ரங் தளம் முக்கிய பங்கு வகித்ததாக விஎச்பி கூறுகிறது.

பஜ்ரங் தளத்திற்கு அங்கீகாரம் அளித்த மற்றொரு நிகழ்வு அயோத்தி ரத யாத்திரை. ரத யாத்திரையை பாதுகாக்கும் பணியில் பஜ்ரங் தளத்தின் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர்.

செப்டம்பர் 25, 1990 அன்று, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி குஜராத்தில் உள்ள சோம்நாத்தில் இருந்து உ.பி.யில் உள்ள அயோத்தி வரை ரத யாத்திரையைத் தொடங்கினார்.

23 அக்டோபர் 1990 அன்று பீகாரில் லாலு பிரசாத் யாதவ் அரசு ரத யாத்திரையை அயோத்தி செல்ல விடாமல் தடுத்தது. எல்.கே.அத்வானி கைது செய்யப்பட்டார். இதன் விளைவாக, பல ஹிந்து கரசேவகர்கள் அயோத்திக்குப் புறப்பட்டனர்.

30 அக்டோபர் 1990 அன்று, பஜ்ரங் தள ஆர்வலர்கள் மற்றும் பிற கரசேவகர்கள் பாபர் மசூதியை சுற்றி வளைக்க முயன்றனர். போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து நடந்த மோதலில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

நவம்பர் 2, 1990 அன்று, காவல்துறை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அந்தச் சம்பவத்தில் 17 கரசேவகர்கள் உயிரிழந்ததாக அரசாங்கம் தெரிவித்தது.

அயோத்தி ரத யாத்திரை மூலம் பஜ்ரங் தளத்தின் புகழ் அதிகரித்தது.

பாபர் மசூதி இடிப்பு

பஜ்ரங் தளத்தின் செயற்பாட்டாளர்கள் முக்கிய பங்காற்றிய மற்றொரு நிகழ்வு பாபர் மசூதி இடிப்பு.

டிசம்பர் 6, 1992 அன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கரசேவகர்கள், ஹிந்து அமைப்பின் ஆர்வலர்கள் ஆகியோர் அயோத்தியில் உள்ள பாபர் மசூதியில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர்களின் பேச்சை கேட்க திரண்டனர்.

தலைவர்களின் பேச்சைத் தொடர்ந்து, பாபர் மசூதி மீது தாக்குதல் நடத்திய அவர்கள், மசூதியை இடித்தனர்.

கரசேவகர்களை ஒன்றிணைத்ததில் பஜ்ரங் தளம் முக்கிய பங்காற்றியதாக குற்றம்சாட்டப்படுகிறது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த பிவி நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பஜ்ரங் தளத்தை தடை செய்தது. ஓராண்டுக்கு பின்னர் இந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டது.

குஜராத், ஒடிசாவில் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல்

பாபர் மசூதி இடிப்பு சம்பவத்திற்கு பின்னர், பஜ்ரங் தளத்தின் கவனம் `மதமாற்றம்` மீது சென்றது. ஹிந்துக்கள் கட்டாயப்படுத்தி கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றப்படுகின்றனர் என்று கூறி மிஷனரிகளுடன் மோதல்களில் ஈடுபட தொடங்கியது.

1997 முதல் 1999 வரை குஜராத்தில் கிறிஸ்துவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டது. பள்ளிகள், தேவாலயங்கள், கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பைபிள்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

பாஜக, விஎச்பி, பஜ்ரங் தள் மற்றும் இந்து ஜாக்ரன் மஞ்ச் ஆகியவை வன்முறைக்கு காரணம் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சாட்டியது.

ஒடிசா: கிறிஸ்துவ மத போதகர் படுகொலை

ஜனவரி 1999ல், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகரான கிரஹாம் ஸ்டெயின்ஸ் ஒடிசாவின் மனோகர்பூரில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் அவரின் இரு குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பிரதான குற்றவாளியான தாரா சிங், பஜ்ரங் தளத்துடன் தொடர்புடையவர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆகஸ்ட் 23, 2008 அன்று, ஒடிசாவில் விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்த சரஸ்வதி மற்றும் அவரது ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கிறிஸ்தவர்களாக மாறிய தலித்துகள் மற்றும் ஆதிவாசிகளை மீண்டும் ஹிந்து மதத்திற்கு மாற்றும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார். அவரது படுகொலைக்குப் பிறகு, 600க்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்கப்பட்டன. சுமார் 39 கிறிஸ்தவர்கள் இறந்தனர். 232 தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இதிலும் பஜ்ரங் தளம் மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

2002 குஜராத் கலவரத்தின் வன்முறையில் பஜ்ரங் தள ஆர்வலர்களும் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

97 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட "நரோடா பாட்டியா படுகொலை" வழக்கில் குஜராத் பஜ்ரங் தளத்தின் முன்னாள் தலைவர் பாபுபாய் படேல் பஜ்ரங்கி குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

2007 ஆம் ஆண்டில், தனியார் சேனல் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் பஜ்ரங்கி வன்முறையை விளக்கினார்.

சமீபத்தில், அகமதாபாத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம், பஜ்ரங்கி உட்பட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 69 பேரை விடுதலை செய்தது.

வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

பஜ்ரங் தள ஆதரவாளர்கள் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

2006ல், மகாராஷ்டிராவின் நான்தேட் நகரில் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் குண்டு வெடித்து உயிரிழந்தனர். அவர்கள் வெடிகுண்டு தயாரிக்கும் போது அது வெடித்ததாக கூறப்படுகிறது.

உ.பி.யின் கான்பூரில் கடந்த 2008ம் ஆண்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு பஜ்ரங்தள அமைப்பினர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கர்நாடகாவில் வளர்ச்சி பெற்றது எப்படி?

கர்நாடகாவில் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தது. பி.எஸ். எடியூரப்பா முதலமைச்சர் ஆனார்.

அந்த ஆண்டின் செப்டம்பர்- அக்டோபர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் உடுப்பி மற்றும் சிக்மங்களூர் பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது பஜ்ரங் தளம் தாக்குதல் நடத்தியது. ஹிந்துக்களை சட்டவிரோதமாக கிறிஸ்துவர்களாக இந்த தேவாலயங்கள் மதமாற்றம் செய்வதாக பஜ்ரங் தளம் குற்றஞ்சாட்டியது.

இதற்கு பின்னர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மீது பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

பசு வதைக்கு எதிராக இஸ்லாமியர்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

காதலர் தினத்தை தீவிரமாக எதிர்க்கும் பஜ்ரங் தளம்

காதலர் தினம் இந்திய கலாசாரத்திற்கு எதிரானது என்று கூறி அதனை பஜ்ரங் தளம் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14 அன்று ஹைதராபாத் போன்ற நகரங்களில், பெண்கள் பூங்காக்களுக்குச் சென்று இளைஞர்களுக்கு ராக்கி கட்டுகிறார்கள். பஜ்ரங் தள ஆர்வலர்கள் சில ஜோடிகளை வலுக்கட்டாயமாக 'திருமணம்' செய்ய வைத்து அவர்களை தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜனவரி 24, 2009 அன்று, கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள ஒரு பப் ஒன்றில் பஜ்ரங் தளம் மற்றும் ஸ்ரீராம் சேனா அமைப்பினர் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர். மேற்கத்திய கலாசாரத்தில் இருந்து இந்து மதத்தை பாதுகாக்கவே இவ்வாறு செய்ததாக அந்த அமைப்புகள் அறிவித்தன.

மார்ச் 2023 இல், கர்நாடகாவின் ஷிவமோகாவில் பெண்கள் "நைட் அவுட் பார்ட்டியை" பஜ்ரங் தள் ஆர்வலர்கள் தடுத்தனர். ஹிந்து கலாசாரத்திற்கு எதிரானது என்று கூறி போராட்டம் நடத்தினர்.

பஜ்ரங் தளத்தை தடை செய்ய கோரிக்கை

மார்ச் 16, 2002 அன்று, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு சர்ச்சைக்குரிய நிலத்தை ஒப்படைக்கக் கோரி, பஜ்ரங் தள், விஎச்பி மற்றும் துர்காவாஹினி ஆர்வலர்கள் ஒடிசா சட்டசபையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறிது நேரத்தில் சுமார் 500 பேர் சட்டசபைக்குள் நுழைந்தனர். அப்போது திரிணமுல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை பஜ்ரங்தளம் மற்றும் விஎச்பியை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தன.

2006-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் மாலேகான் குண்டுவெடிப்பில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் பஜ்ரங் தளமும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு, ஒடிசா மற்றும் கர்நாடகாவில் கிறிஸ்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பஜ்ரங் தளத்தை தடை செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தன.

கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என காங்கிரஸ் கட்சி சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில், இந்த அமைப்பு குறித்த பேச்சு மறுபடியும் கிளம்பியுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: