You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சர்வதேச வர்த்தகத்தில் சீன நாணயத்தை ஏற்கும் நாடுகள் இந்திய ரூபாயை நிராகரிப்பது ஏன்?
இந்தியா தற்போது வரை கச்சா எண்ணெயை அமெரிக்க டாலர்களில் மட்டுமே வாங்கி வருகிறது. ஆனால், முதல் முறையாக ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து இந்திய ரூபாயில் எண்ணெயை வாங்கியுள்ளது.
ரூபாயை உலகளவிலான நாணயமாக மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாகவே முயற்சித்து வரும் இந்தியாவுக்கு இது ஒரு மைல்கல்..
இந்தாண்டு ஜூலை மாதம் பிரதமர் மோடியின் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின் போது, இரு நாட்டு நாணயங்களை கொண்டு வணிகம் செய்து கொள்வதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
அதன் பிறகு, அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனமான Adnoc-மிடமிருந்து 10 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை இந்திய ரூபாயில் வாங்கியுள்ளது இந்திய எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் .
பிடிஐ செய்தி முகமையின்படி, இதர எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்தும் இந்திய ரூபாய் மதிப்பிலேயே எண்ணெய் வாங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அந்த முயற்சிகள் எதுவும் பெரிதாக பலனளிக்கவில்லை.
உலகின் அதிகபட்ச ஆற்றல் நுகர்வில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியாவில், அதன் சொந்த தேவைகளில் 15 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இது போன்ற சூழலில், இந்தியாவில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருள்களாக மாற்றப்படும் கச்சா எண்ணெய்க்காக பிறரை சார்ந்திருக்க வேண்டிய நிலையே உள்ளது.
தற்போது வரை இந்தியா பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்க்கு அமெரிக்கா டாலரில் தான் பணம் செலுத்தி வருகிறது.
ஆனால் சர்வதேச வர்த்தகத்தில் இந்திய நாணயத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இறக்குமதி செய்பவர் மற்றும் ஏற்றுமதி செய்பவருக்கு இடையில் ரூபாயில் பணம் செலுத்தி கொள்வதற்கான ஒப்புதலை ரிசர்வ் வங்கி 11 ஜூலை 2022 அன்றே வழங்கிவிட்டது.
இருப்பினும், தற்போது எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளில் இருந்து எந்த விதமான குறிப்பிடத்தக்க பலனும் கிடைக்கவில்லை.
சமீபத்தில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை தொடர்பான விவகாரத்தில், 2022-23 ஆம் நிதியாண்டில் இந்திய நிறுவனங்கள் எதுவும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரூபாயில் பணம் செலுத்தவில்லை என்று நாடாளுமன்ற குழுவிடம் இந்திய எண்ணெய் அமைச்சகம் தெரிவித்தது.
ஐக்கிய அரபு அமீரக நிறுவனமான அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவனம் (ADNOC) உள்ளிட்ட இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் வழங்கும் நிறுவனங்கள், எண்ணெய்க்கு ஈடாக வாங்கிக்கொள்ளும் ரூபாயை தங்களுக்கு விருப்பமான நாணயமாக மாற்றி கொள்வதில் இன்னமும் நடைமுறை சிக்கல்களை எதிர்கொண்டு வருவதாக கூறுகிறது பெட்ரோலிய அமைச்சகம்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற குழுவின் அறிக்கையில் பெட்ரோலிய அமைச்சகத்தால் இந்த தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதில் தற்போதைய நிலவரப்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் அரசு எண்ணெய் நிறுவனங்கள் எதுவும் கச்சா எண்ணெய் வழங்கும் எந்த நிறுவனங்களோடும் எண்ணெயை இந்திய ரூபாயில் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் எதுவும் போடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயை உலக நாடுகள் நிராகரிப்பது ஏன்?
நீண்ட காலமாகவே ரூபாயை சர்வதேச நாணயமாக மாற்ற முயற்சித்து வருகிறது இந்தியா.
இந்தாண்டு ஜூன் மாதம் தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்கு பிறகு கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் “சர்வதேச வர்த்தகம் மற்றும் பிரிக்ஸ் நாடுகள், அதன் வர்த்தக கூட்டாளிகளுடன் நடைபெறும் நிதி பரிவர்த்தனைகளில் நிலையான நாணயங்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதன்பிறகு, 2023 ஜூலை 5ம் தேதி இந்திய நாணயத்தை சர்வதேசமயமாக்குவதற்கான திட்டத்தை இந்திய ரிசர்வ் வங்கியின் துறைகளுக்கு இடையேயான குழு ஒன்று உருவாக்கியது.
ஆனால், அந்த திட்டங்கள் சிறப்பான பலன் எதையும் வழங்கியதாக தெரியவில்லை.
இதற்கு காரணம் இந்திய ரூபாய் 'முழுமையாக மாற்றக்கூடியதாக' இல்லை என்று கூறுகிறார் பிரபலமான எரிசக்தி நிபுணர் நரேந்திர தனேஜா.
மாற்றத்தக்க நாணயமே வர்த்தக பரிவர்த்தனை நாணயம் என்றும் அழைக்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியத்தின்படி, எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் வணிகத்திற்கு பயன்படும் நாணயத்தை ஒரு நிலையான அல்லது நெகிழ்வான விகிதத்தில் மாற்ற முடிந்தால் மட்டுமே அந்தத் நாணயம் முழுமையாக மாற்றத்தக்கது என்று அழைக்கப்படும்.
சர்வதேச வர்த்தகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றும் நாடுகளின் ஃபெடரல் வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி இருப்புகளாக வைத்திருக்க முடிந்த நாணயமே சர்வதேச நாணயம் என்று அழைக்கப்படுகிறது.
“இந்திய ரூபாய் முழுமையாக மாற்றத்தக்க முடியாத நாணயமாக இருப்பதற்கு காரணம், வெளிநாடுகளில் அதை அந்நாட்டு நாணயமாக மாற்ற முயன்றால் அது முடியாது. அதே சமயம், டாலர், பவுண்ட், யூரோ அல்லது யென் ஆகிய நாணயங்களை வெளிநாட்டு நாணயங்களை மாற்றி தரும் எந்த வங்கியில் கொடுத்தாலும் அந்நாட்டு நாணயமாக மாற்றி தருவார்கள்” என்று கூறுகிறார் நரேந்திர தனேஜா.
இதே நிலைதான் எண்ணெய் வணிகத்திலும் நிலவுவதாக கூறுகிறார் அவர்.
“பல எண்ணெய் சப்ளையர்களும் டாலர்களையே விரும்புகின்றனர். காரணம், அவர்கள் இந்திய ரூபாயை வாங்கினால், அதை இந்தியாவிற்குள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்கிறார்” நரேந்திர தனேஜா.
“அவர்கள் இந்தியாவிலிருந்து பொருட்களை இறக்குமதி செய்யலாம், இங்கேயே முதலீடு செய்யலாம் அல்லது வர்த்தகம் செய்யலாம். ஆனால் எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்கள் நாங்கள் எண்ணெய் மட்டும் விற்கிறோம், இதையெல்லாம் செய்யக் கூடாது என்று கூறுகின்றனர். அதனால்தான் இந்திய ருபாய் சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பணம் செலுத்துதல் நடைமுறை இதர நாணயங்களில் மட்டும் நடைபெறுகிறது.”
அதே நேரத்தில், இந்த நிறுவனங்கள் இந்திய ரூபாயை பிற நாட்டு நாணயங்களில் மாற்ற நினைத்தாலும் கூட, அதற்கும் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், 'எண்ணெய் வழங்கும் நிறுவனங்கள் பரிவர்த்தனைக்கான செலவையும் ஈடுகட்டுவதால், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அவர்களிடம் அதிக விலை கொடுத்து எண்ணெய் வாங்க வேண்டியுள்ளது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இந்தியாவின் வர்த்தக கூட்டாளி நாடுகளில் ருப்பீ வோஸ்ட்ரா வங்கி கணக்குகளை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கியது ரிசர்வ் வங்கி.
இந்த வங்கி கணக்குகள் மூலம் வெளிநாட்டு வங்கிகளுக்காக இந்திய வங்கிகள் பண இருப்பு வைத்திருக்கும்.
இந்த ஏற்பாட்டின் கீழ், இந்திய இறக்குமதியாளர்கள் ரூபாயில் பணம் செலுத்தி கொள்ளலாம். அந்த பணம் குறிப்பிட்ட நாட்டு வங்கியில் உள்ள வோஸ்ட்ரா கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
கச்சா எண்ணெய் வாங்குவதற்கான பணம் இந்திய ரூபாயில் செலுத்தப்படும், ஆனால் அது எண்ணெய் வழங்குபவர் இந்த ஏற்பாட்டின் கீழ் விதிகளை பின்பற்றுவதை சார்ந்தது” என்று கூறுகிறது அமைச்சகம்.
ரூபாய் என்பது நல்ல மற்றும் நிலையான நாணயம் தான், ஆனால் அதை முழுமையாக மாற்றத்தக்கதாக மாற்றும் வரை, இந்த பிரச்னை தொடரும் என்கிறார் தனேஜா.
இருதரப்பு வர்த்தகத்தில் சீன நாணயத்தை உலக நாடுகள் ஏற்பது ஏன்?
சீனாவின் நாணயமான யுவானும் கூட முழுமையாக மாற்றத்தக்கது அல்ல, இருந்தாலும் அது பெரிய அளவில் வணிகத்தில் பயன்படுத்தப்படுகிறது. சீனா எண்ணெய் இறக்குமதி மட்டுமின்றி, பல நாடுகளுடன் தங்களது சொந்த நாணயத்தில் தான் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
சில சமயங்களில் இந்திய இறக்குமதியாளர்கள் கூட ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக துபாய் வங்கிகள் வழியாக யுவானில் பணம் செலுத்தியுள்ளதாக கூறுகிறார் நிபுணர் நரேந்திர தனேஜா.
இதற்கான காரணத்தை விளக்கும் அவர், பல நாடுகளுடன் சீனாவின் இருதரப்பு வணிகமானது மிக அதிகமாக இருப்பதால் அவர்களின் நாணயமான யுவானில் வர்த்தகம் செய்வதில் அவர்களுக்கு அதிகம் சிக்கலில்லை என்று கூறுகிறார்.
“சீனா மலிவு விலை பொருட்களை அதிகளவில் தயாரித்து, பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொபைல் உதிரி பாகங்கள், மருத்துவ மூலப்பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்ட இந்தியாவுக்கு தேவைப்படும் பல அடிப்படை பொருட்கள் கூட சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன" என்று கூறுகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் பிரபலமான பொருளாதார அறிஞரான அருண்குமார்.
“இன்றைய நிலையில் சீனாவுடன் வர்த்தகம் செய்யாத நாடே இல்லை. அந்த நாடுகள் எண்ணெய் அல்லது வேறு பொருட்களுக்காக யுவானை பெறும் அதே சமயத்தில், சீனாவில் இருந்து ஏதோ ஒன்றை வாங்கி கொள்ளவும் அவர்களால் முடிகிறது” என்று கூறுகிறார் நரேந்திர தனேஜா.
இது போன்ற சூழலில், முழுமையாக மாற்றத்தக்கதாக இல்லாத போதிலும் கூட, பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்படும் நாணயமாக யுவான் இருக்கிறது.
இந்திய ரூபாய் ரஷ்யாவுக்கு சுமையாக மாறுவது ஏன்?
இந்தியா தனது அண்டை நாடுகளான நேபாளம், இலங்கை, வங்கதேசம், பூடான், ஈரான் மற்றும் நட்பு நாடான ரஷ்யா ஆகியவற்றுடன் ரூபாயில் வர்த்தகத்தை தொடங்கியுள்ளதாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வர்த்தகத்துறை இணை அமைச்சரான அனுப்ரியா பட்டேல் தெரிவித்திருந்தார்.
அதற்கு முன்பு, இந்தியாவுடன் ரூபாயில் வணிகம் செய்வதற்கான பேச்சுவார்த்தையை நிறுத்தியிருந்தது ரஷ்யா.
இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்திற்காக கோவாவுக்கு வந்திருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வங்கிகளில் ரஷ்யர்களின் கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது, ஆனால் அவர்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. அவர்களால் அதை பயன்படுத்த முடியும்’ என்று கூறியிருந்தார்.
“ரஷ்யர்களின் பணம் இந்திய வங்கிகளில் உள்ளது. எனவே அவர்கள் அதை இந்திய நிறுவனங்கள் அல்லது வங்கிகளில் முதலீடு செய்ய முடியும். ஆனால், இவ்வளவு பணத்தை வைத்து என்ன செய்வது? என்று ரஷ்யா கூறுவதாக” தெரிவிக்கிறார் தனேஜா.
2022-ல் இந்தியா-ரஷ்யா இடையேயான வர்த்தகம் 27 பில்லியன் டாலர்களை எட்டும் என்றும், ஆனால் இந்தியாவின் ஏற்றுமதி 2 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்றும், ரஷ்யா-இந்தியா வர்த்தக உரையாடல் மன்றத்தில் கூறியிருந்தார் இந்திய தூதர் பவன் கபூர்.
மேலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் ஒரு சமநிலை இருக்க வேண்டும் என்கிறார் அவர்.
தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் ஏற்றுமதியை விட 14 மடங்கு அதிகமாக ரஷ்யா ஏற்றுமதி செய்கிறது.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் நன்றாகவும் கிட்டத்தட்ட சமமாகவும் இருந்தால், எந்த பிரச்சனையும் இருக்காது. இதற்கு உதாரணம் ஐக்கிய அரபு அமீரகத்திடம் இருந்து ரூபாயில் எண்ணெய் வாங்குவது.
“ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் இந்தியர்கள் அங்கிருந்து டாலர்களில் பணம் அனுப்புகின்றனர். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையில் மிக ஆழமான வணிக உறவுகள் உள்ளது. பல நாடுகளுடன் நமது வர்த்தகம் மற்றும் பில்லிங் உள்ளிட்ட சேவைகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாகவே செய்யப்படுவதாக” தெரிவிக்கிறார் நரேந்திர தனேஜா.
“உதாரணத்திற்கு, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நேரடி வர்த்தகம் அவ்வளவு ஒன்றும் அதிகம் அல்ல, ஆனாலும் கூட 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய சரக்குகள் ஐக்கிய அரபு அமீரகம் வழியாக பாகிஸ்தானை சென்றடைகிறது. இது போன்ற சூழலில், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நாம் ரூபாயை கொடுத்தால், அதை மாற்றி கொள்வதில் அவர்களுக்கு எந்த பிரச்னையும் இருக்காது.”
“ஏற்றுமதியை வலுப்படுத்துவது அவசியம்”
உலக அளவில் ரூபாய் ஏற்றுக்கொள்ளப்படுவதை அதிகரிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
இந்த கேள்விக்கு பதிலளிக்கும் பொருளாதார அறிஞர் பேராசிரியர் அருண், இந்தியாவின் ஏற்றுமதி வலுப்படுத்தப்படாத வரை, நம்மால் இலக்கை நோக்கி செல்ல முடியாது என்கிறார்.
“இதுவரையிலும் நமது வர்த்தக பற்றாக்குறை மிக அதிகமாகவே இருந்து வருகிறது. நம்மிடம் சுமார் 600 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. ஆனால் இது உண்மையில் கடனாக வாங்கப்பட்டது. எஃப்.டி.ஐ., போர்ட்ஃபோலியோ முதலீடு அல்லது இந்திய நிறுவனங்களால் கடன் வாங்கியதன் மூலமாக கிடைத்தது. இது ஈட்டப்பட்ட இருப்பு அல்ல” என்கிறார் அவர்.
இதற்கு சீனாவை உதாரணமாக கூறும் அருண்குமார், இந்தியாவை போலன்றி சீனா தான் சொந்தமாக ஈட்டிய 30 டிரில்லியன் டாலர் அந்நிய செலவாணியை கையிருப்பில் வைத்துள்ளது. இந்த பணத்தை அது யாருக்கும் திருப்பி தர வேண்டியதில்லை என்று கூறுகிறார்.
"அதே சமயம் வெளிநாட்டு நாணயம் மூலம் நமது கடன்களை திருப்பிச் செலுத்தினால் கடன்கள் குறையத் தொடங்கும். இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் வலுப்பெறும்போதுதான் ரூபாயை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் தன்மையை நம்மால் அதிகரிக்க முடியும்." என்று அவர் தெரிவிக்கிறார்.
மேலும் “ நாம் வெறும் மூலப்பொருட்களையே ஏற்றுமதி செய்கிறோம். எப்போது நாம் உபரி ஏற்றுமதியை செய்கிறோமோ அப்போதுதான் ரூபாயை மாற்றக் கூடிய நாணயமாக மாற்ற முடியும். ஆனால் அதற்கு , தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்." என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)