விபத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கணவரை குழந்தை போல பார்த்துக்கொள்ளும் கொலம்பிய நாட்டு மனைவி
2019ஆம் ஆண்டு கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்த ஹர்பால் சிங், மார்ச் 2021 வரை மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். டெல்லி எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த அவர் மார்ச் 5ஆம் தேதி ஒரு பயங்கரமான விபத்தை சந்தித்தார். இந்த விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது.
"என்னால் கை, கால்களை அசைக்க முடியாது. என் மனைவி இல்லாவிட்டால் நான் உயிருடன் இருந்திருக்கவே வாய்ப்பில்லை. அவள் அளித்த ஆதரவுக்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்." என்கிறார் ஹர்பால் சிங்.
ஹர்பாலும் ஆன்னியும் 2018இல் பேஸ்புக் வாயிலாக சந்தித்துக் கொண்டனர். 2019இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர், ஆன்னி கொலம்பியாவுக்குத் திரும்பிச் சென்றார். 2021ஆம் ஆண்டு விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தார் ஹர்பால். நவம்பர் 5, 2021 அன்று அவர் டெல்லியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, குராலி-சண்டிகர் சாலையில் ஒரு மோசமான விபத்தில் சிக்கிக்கொண்டார்.
விபத்துக்குப் பிறகு அவரது கைகால்கள் செயலிழந்து விட்டதால், படுக்கையிலே முழு நேரத்தையும் கழிக்கிறார். கடந்த 3 ஆண்டுகளாக தனது கணவனை குழந்தைப் போல பார்த்துக்கொள்கிறார் மனைவி ஆன்னி.
வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற வேண்டுமென ஹர்பால் விரும்புகிறார், ஆனால் குடும்பத்தாரிடம் போதிய பணம் இல்லாததால், ஹர்பால் சிங் மற்றும் ஆன்னி நிதி உதவிக்காக காத்திருக்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



