You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிலிப்பைன்ஸ் கப்பலை நடுக்கடலில் தாக்கிய சீனா - தென் சீனக் கடலில் என்ன நடந்தது?
- எழுதியவர், ஜோனத்தன் ஹெட்
- பதவி, தென்கிழக்கு ஆசிய செய்தியாளர்
பெரிய சீனக் கப்பல் ஒன்று எங்கள் கப்பலுக்கு மிக நெருக்கமாக செல்வதை எங்களால் காண முடிந்தது. எங்களது இரு கப்பல்களும் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தன. சீன கப்பலில் இருந்தவர்களின் முகத்தை பார்க்க முடியுமளவு அவர்களது கப்பல் எங்களுக்கு நெருக்கமாக இருந்தது. எங்களை போலவே அதிலிருந்த இருவர் எங்கள் கப்பலை நோக்கி வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் கப்பலான பிஆர்பி பககேவை (BRP Bagacay) செவ்வாய்க்கிழமையன்று சீனக் கப்பல் நெருங்கிய சமயத்தில் பிபிசி குழுவும் அந்த கப்பலில் இருந்தது.
பிலிப்பைன்ஸ் கடற்படை கிட்டத்தட்ட மோதலுக்கு தயாராகிக் கொண்டிருந்தது. திடீரென்று சீனக் கப்பல் எங்களது கப்பலின் முற்பகுதிக்கு அருகே திரும்பி, எங்களது கப்பலை மெதுவாக இயக்குமாறு கட்டாயப்படுத்தியது. இரண்டு கப்பல்களுக்கும் இடையில் வெறும் 5 மீட்டர் இடைவெளியே இருந்தது.
எங்களது கப்பல் பிலிப்பைன்ஸ் கடற்கரைக்கு மேற்கே 220 கிமீ (137 மைல்) தொலைவில் சீனாவும் உரிமை கோரும் ஸ்கார்பரோ ஷோலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.
சீனக்கப்பல்கள் எங்களை தடுப்பதில் உறுதியாக இருந்தன. அவர்களின் கப்பலில் நிறைய பேர் இருந்தனர். ஒரு கட்டத்தில் கடலோரக் காவல்படை மற்றும் கடலோர போராளிகள் குழுவைச் சேர்ந்த 10 பேர் அந்த பக்கம் இருந்தனர்.
எனினும், பிலிப்பைன்ஸ் கேப்டன் தனது ஜப்பானிய கப்பலின் வேகம் மற்றும் திறனை நம்பி சீனர்களை தாண்டி கப்பலை செலுத்தினார். கிட்டத்தட்ட கரைக்கு 600 மீட்டர் அளவுக்கு நெருங்கி இருந்த போது, நாம் அருகில் வந்துவிட்டோம் என்று கூறினார்.
ஆனால் சமீபத்தில் சீனர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய தடுப்பு ஒன்று தடையாக நின்றது. எங்களுக்கு பின்னால் வந்த சீன கப்பல்கள் உடனே இருபுறமும் பிலிப்பைன்ஸ் கப்பலை சூழ்ந்துக் கொண்டன. மறுகணமே அவர்களது தண்ணீர் பீரங்கியைக் கொண்டு எங்கள் கப்பலை தாக்க ஆரம்பித்து விட்டனர்.
அந்த பீரங்கி பீய்ச்சி அடித்த நீர் கப்பலின் உலோக மேற்பரப்பின் மீது இடியை போல் இறங்கியது. இதனால் கப்பலின் ஒரு பகுதியே சிதைந்து விட்டது.
பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்காக பொருட்களை ஏற்றிவந்த, எங்களது கப்பல் தொகுதியில் இடம் பெற்றிருந்த இரண்டாவது கப்பல் தான் இந்த தாக்குதலில் மிக மோசமாக சேதமடைந்தது.
தென் சீனக் கடலில் இந்த டாம் & ஜெரி விளையாட்டு ஒன்றும் புதிதல்ல. ஆனால், பிலிப்பைன்ஸ் அதிபர் போங்பாங் மார்கோஸ், கடந்த காலத்தை விட மிகவும் உறுதியாக சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீன இருப்பை எதிர்கொள்வதற்கான அதிகாரத்தை கடலோர காவல்படைக்கு வழங்கியதில் இருந்து, இந்த மோதல்கள் சமீபத்தில் அடிக்கடி நடப்பவையாகவும், மிக தீவிரமானவையாகவும் மாறியுள்ளன.
"இங்கு எப்போதுமே ஆபத்தான எச்சரிக்கை கோடு இருப்பதாக சீன அரசு கூறுகிறது" என்று மேற்கு பிலிப்பைன்ஸ் கடலின் கடலோர காவல்படை செய்தித் தொடர்பாளர் கொமடோர் ஜே டாரியேலா கூறுகிறார்.
“சீனாவின் கெடுபிடிகளால் ஷோல் கரையில் இருந்து 12 கடல்மைல் எல்லையை எங்களால் கடக்க முடியாது என்று அவர்கள் கூறினர். ஆனால் புதிய அரசின் கீழ், சீனா சர்வதேச சட்டத்தை மதிக்கவில்லை என்பதைக் காட்ட நாங்கள் ஏற்கனவே அந்த எல்லையை மீறிவிட்டோம்.”
நாங்கள் இருந்த இந்த செயல் திட்டமும் அந்த வலுவான எதிர்வினையின் ஒரு பகுதிதான்.
ஸ்கார்பரோ ஷோலில் பல தசாப்தங்களாக பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு உணவு மற்றும் எரிபொருளை வழங்குவதே அந்த திட்டத்தின் இலக்கு. இந்த பகுதி 2012 இல் சீன கடலோர காவல்படையின் கட்டுப்பாட்டில் வந்ததில் இருந்து, இந்த மீனவர்கள் தொடர்ந்து துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர்.
சீனாவை விட பிலிப்பைன்ஸுக்கு மிக அருகில் இருக்கும் ஷோல் மீதான தனது உரிமையை நிலைநாட்டுவதற்கான பிலிப்பைன்ஸின் உறுதியை நிரூபிப்பதாகவும் இது இருந்தது.
2016 இல் வழங்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பின்படி, தென் சீனக் கடலில் சீனாவின் உரிமைகோரல்களின் முக்கிய கூறுகளான அதன் நைன் - டேஷ் லைன் (Nine - Dash Line) மற்றும் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் அதன் பல்வேறு நடவடிக்கைகள் போன்றவை சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. ஆனால் தான் இந்தத் தீர்ப்பை அங்கீகரிக்கவில்லை என்று சீனா கூறுகிறது.
ஷோலில் காணப்படும் சீனக் கப்பல்களின் எண்ணிக்கை பயமுறுத்துவதாக இருந்தது. அனைத்து திசைகளிலும் நாம் அவர்களைப் பார்க்க முடியும்,
"அவர்களின் கோலியாத்திற்கு நாங்கள் தான் டேவிட்," என்கிறார் கொமடோர் டாரியலா.
அதிபர் மார்கோஸின் இந்தப் புதிய கொள்கை பில்ப்பைன்ஸை எங்கே கொண்டு செல்லும் என்பதைப் அறிந்துகொள்வது கடினம். இருப்பினும் அவருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வலுவான ஆதரவு கிடைத்துள்ளது. ராணுவத்திற்கான நீண்டகால நவீனமயமாக்கல் திட்டத்தை இது விரிவுபடுத்தியுள்ளது.
சீனக் கப்பல்கள் ஆபத்தானவை என்றாலும், அவற்றின் உத்திகளில் தெளிவான திறன் கொண்டவை. அவர்கள் தங்களது தடைகளை கிட்டத்தட்ட காலவரையின்றி வைத்திருக்கலாம்.
சீன கப்பலை நாங்கள் எதிர்கொண்ட பிறகு, தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த பிலிப்பைன்ஸ் கப்பல் ஒன்றை தாங்கள் விரட்டியடித்ததாக அறிக்கை வெளியிட்டது சீனா.
பிஆர்பி பககே கப்பல் இரண்டு பக்கங்களிலிருந்தும் தாக்கப்பட்ட பின்னர் ஸ்கார்பரோ ஷோலிலிருந்து பின்வாங்கியது உண்மைதான்.
இரண்டாவது கப்பலில் இருந்த பொருட்கள் மற்றும் அதன் பெரும்பாலான மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன. எங்களுக்கு பின்னால் 20 கிலோமீட்டர் தொலைவில் சீனக் கப்பல்களால் அது தாக்கப்பட்டது. எனவே எங்கள் கப்பல் அதற்கு உதவ அங்கு சென்றது.
ஆனால் இரண்டு கப்பல்களும் சீனாவின் "சிவப்புக் கோட்டிற்கு" வெளியே கடலில் நிலைக் கொண்டிருந்தன. இருப்பினும் இன்னும் அதன் "நைன்-டேஷ் லைனுக்கு" உள்ளேயே இருந்தன.
காலையில் டஜன்கணக்கான மீன்பிடி படகுகள் எங்களைச் சுற்றி உதவிகளை பெறுவதற்காக குவிந்தன. ஆனால் தூரத்தில் இருந்து சீன கடலோரக் காவல்படைக் கப்பல் தொடர்ந்து கண்காணித்து கொண்டிருந்தது. சீனாவின் துன்புறுத்தும் தந்திரங்கள் மீண்டும் ஒருமுறை அம்பலமான நிலையில், பிலிப்பைன்ஸ் கடலோர காவல்படை தங்களது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியதாக கருதுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)