சீனா மட்டும் 'கிரவுட்ஸ்ட்ரைக்' பாதிப்பில் இருந்து தப்பியது எப்படி?

காணொளிக் குறிப்பு, உலகின் மற்ற நாடுகளை போல் சீனா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மட்டுமே முழுதும் நம்பி இருக்கவில்லை.
சீனா மட்டும் 'கிரவுட்ஸ்ட்ரைக்' பாதிப்பில் இருந்து தப்பியது எப்படி?

தகவல் தொழில்நுட்ப சேவையில் ஏற்பட்ட மிகப்பெரிய செயலிழப்பு கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. பல நாடுகளும் இதனால் பாதிக்கப்பட்ட நிலையில், அதிகம் பாதிப்படையாமல் தப்பித்த ஒரே நாடு சீனா தான்.

இதற்கான காரணம் மிக எளிதானது. ஆம், கிரவுட்ஸ்டிரைக் மென்பொருள் சீனாவில் அவ்வளவாக பயன்படுத்தப்படவில்லை. இணைய பாதுகாப்புக்கு சீனா அச்சுறுத்தலாக விளங்குவதாக கடந்த காலங்களில் கூறிவந்த அந்நிறுவனத்திடம் இருந்து மிக குறைந்த நிறுவனங்கள் மட்டுமே மென்பொருளை வாங்குகின்றன.

மேலும், உலகின் மற்ற நாடுகளை போல் சீனா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை மட்டுமே முழுதும் நம்பி இருக்கவில்லை. உள்நாட்டு நிறுவனங்களான அலிபாபா, டென்சென்ட்(Tencent), Huawei போன்றவை பிரதான கிளவுட் சேவை வழங்குநர்களாக உள்ளன.

எனவே, சீனாவில் செயல்படும் வெளிநாட்டு நிறுவனங்கள் மட்டுமே இத்தகைய தகவல் தொழில்நுட்ப செயலிழப்பால் பாதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. உதாரணமாக, சீன நகரங்களில் உள்ள ஷெரட்டன், மேரியட், ஹயாத் போன்ற சர்வதேச உணவகங்களில் அறையை பதிவு செய்ய முடியவில்லை என, சீன சமூக ஊடக தளங்களில் சில பயனாளர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தனர்.

சீனாவில் சமீப ஆண்டுகளாக அரசு அமைப்புகள், வணிகங்கள், உள் கட்டமைப்பு ஆபரேட்டர்கள் வெளிநாட்டு ஐ.டி. அமைப்புகளுக்கு பதிலாக உள்நாட்டு தகவல் தொழில்நுட்ப அமைப்புகளுக்கு மாறி வருகின்றனர். இதனை சில ஆய்வாளர்கள் “ஸ்ப்ளிண்டர்நெட்” (Splinternet) அதாவது இணையத்தை பிளவுபடுத்துவது என அழைக்கின்றனர்.

இதேபோல், “வெளிநாட்டு தொழில்நுட்ப அமைப்புகளை கையாள்வதில் சீனாவின் திறமையான நிர்வாகத்திற்கான ஆதாரமாக இது உள்ளது” என, சிங்கப்பூரை சேர்ந்த சைபர் பாதுகாப்பு நிபுணர் ஜோஷ் கென்னடி ஒயிட் கூறுகிறார்.

“21 வயாநெட் (21Vianet) எனும் உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து சீனாவில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இயங்கிவருகிறது. சீனாவில் மைக்ரோசாஃப்ட் சேவையை தன்னிச்சையாக அந்நிறுவனம் நிர்வகிக்கிறது. இந்த ஏற்பாட்டின் மூலம் சீனாவின் அத்தியாவசிய சேவைகளான வங்கி மற்றும் விமான போக்குவரத்து சேவைகளில் வெளிப்புற காரணிகளால் தடங்கல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.”

வெளிநாட்டு அமைப்புகளை சார்ந்திருக்காமல் இருப்பதை தங்களது தேச பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையாக சீனா பார்க்கிறது.

இது, தங்கள் தேச பாதுகாப்பை காரணம் காட்டி டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்ததைப் போன்றதாகும்.

பிற நாட்டு நிறுவனங்களை சார்ந்திருக்காமல் இருக்க சீனா முயன்றுவருவதால், சீனாவுக்கு அதிதவீன செமி கண்டக்டர் சிப்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கவும் அமெரிக்க நிறுவனங்கள் சீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்வதை தடுக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளது.

தேச பாதுகாப்புக்காக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்தது. சீன அரசு சார்பு ஊடகமான குளோபல் டைம்ஸில் சனிக்கிழமை வெளியான தலையங்கத்தில், சீன தொழில்நுட்பம் மீதான இத்தகைய கட்டுப்பாடுகள் குறித்து மேலோட்டமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

“சில நாடுகள் பாதுகாப்பு குறித்து தொடர்ச்சியாக பேசி வருகின்றன, பாதுகாப்பு என்ற கருத்தை பொதுமைப்படுத்துகின்றன. ஆனால், உண்மையான பாதுகாப்பு பிரச்னையை புறக்கணித்துவிட்டன, இது முரணாக உள்ளது,” என அந்த தலையங்கம் கூறுகிறது.

இங்குள்ள வாதம் என்னவென்றால், உலகளாவிய தொழில்நுட்பத்தை யார் பயன்படுத்தலாம் மற்றும் அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற விதிமுறைகளை வகுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது. ஆனால், அதன் நிறுவனங்களில் ஒன்று கவனக்குறைவால் உலகளாவிய பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது என்பதுதான்.

தகவல் தொழில்நுட்பத்தை 'ஏகபோக உரிமை' கொண்டாடும் சர்வதேச நிறுவனங்களையும் ‘தி குளோபல் டைம்ஸ்’ விமர்சித்தது: “இணைய பாதுகாப்புக்காக பெரிய நிறுவனங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு சில நாடுகள் வாதிடுவது, நிர்வாக முடிவுகளை உள்ளடக்கிய பகிர்வுக்கு மட்டும் தடையாக இல்லாமல், புதிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் அறிமுகப்படுத்தும்.” என்கிறது அந்த தலையங்கம்.

உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்த கிரவுட்ஸ்ட்ரைக், சீனா மட்டும் அதிக பாதிப்பின்றி தப்பித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)