You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எண்ணூர் கடலில் 10 மடங்கு, காற்றில் 5 மடங்கு அமோனியா அதிகம் - முற்றிலும் அகற்ற முடியுமா?
- எழுதியவர், சுபாஷ் சந்திரபோஸ்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் உர உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக அப்பகுதி முழுவதும் நேற்று நள்ளிரவு அமோனியா வாயு காற்றில் கலந்துள்ளது. இந்த அமோனியாவை சுவாசித்த மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அமோனியா என்றால் என்ன? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படலாம் என்று வேதியியல் பொறியாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூறுவது என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
எண்ணூர் காற்றில் கலந்த அமோனியா
எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனமானது விவசாயம் உள்ளிட்ட சேவைகளுக்கு உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம். இங்கு உரங்களை தயாரிப்பதற்காக அமோனியா வாயு பயன்படுத்தப்படுகிறது. எப்படி இந்த வாயு தயாரிக்கப்படுகிறது என்று சென்னை ஐஐடி கெமிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியரிடம் கேட்டோம்.
இதற்கு பதிலளித்த ஐஐடி பேராசிரியர் இதயராஜா “அமோனியா என்பது நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் கலந்து உருவாக்கப்பட கூடிய ஒரு வாயு. யூரியா உற்பத்தி செய்வதற்கான ஒரு முக்கிய கூறு இது. அமோனியாவுடன் கார்பன்-டை-ஆக்ஸைடை சேர்த்து யூரியா தயாரிக்கப்படும்.” என்றார்.
தினசரி வாழ்வில் அமோனியா
உரம் தயாரித்தல் மட்டுமின்றி தினசரி வாழ்வியல் பயன்பாடுகளில் அமோனியா இருக்கிறது. தலை முடிக்கு பயன்படுத்தக்கூடிய டை மற்றும் பிளீச்சிங் உள்ளிட்டவற்றில் அம்மோனியா மிக குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதாக கூறுகிறார் இதயராஜா.
இது மட்டுமின்றி ஐஸ் தொழிற்சாலை, ரெஃப்ரிஜென்ட் கேஸ், பிளாஸ்டிக், ஜவுளித்துறை, பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி ஆகியவற்றிலும் அமோனியா பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கிறார் ஐஐடி பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற சுவாமிநாதன்.
அமோனியா எப்போது விஷமாகிறது?
பொதுவாக அமோனியா விஷத்தன்மை கொண்ட வாயு அல்ல என்று கூறும் சுவாமிநாதன், பாதுகாப்பற்ற முறையில் அது கசியும் போதே புறச் சூழலோடு வினை புரிந்து பாதிப்பை ஏற்படுத்தும் அமிலமாக மாறுவதாக தெரிவித்துள்ளார்.
“அமோனியம் தண்ணீரோடு கலக்கும் போது அமோனியம் ஹைடிராக்ஸைடு (ஆல்கலீன்) காரத்தன்மை கொண்ட அமிலமாக மாறுகிறது. அமோனியம் எளிதில் கரையக்கூடிய தன்மை கொண்டிருப்பதால் தண்ணீரோடு கலந்து ஆல்கலின் ஆக மாறி விடுகிறது. இது அதிக அளவில் சுவாசம் வழியாக உடலுக்குள் செல்லும்போது உடலை அரித்து விடும் தன்மை கொண்டது. அதிக அளவில் உடலில் படும்போது தோல் நெருப்பில் வெந்தது போல் புண்களை ஏற்படுத்திவிடும்” என்று கூறுகிறார் அவர்.
அமோனியா என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்தும்?
காற்றில் கலக்கும் அமோனியா என்ன மாதிரியான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்று நுரையீரல் நிபுணர் மருத்துவர் திருப்பதி அவர்களிடம் கேட்டோம். அதற்கு பதிலளித்த அவர், “ தொடக்கத்தில் அமோனியாவின் அளவு தீவிரமாக இருந்தால் இருமல், மூச்சுத்திணறல், எரிச்சல் ஏற்படும், தொண்டை அடைக்கும். அதுவே மிக தீவிரமாக இருந்தால் மூச்சு விட முடியாமல் போகும், மயக்கமடைதல், வலிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
இதனால் லேசான அறிகுறிகள் ஏற்படும் போது மருத்துவரை பார்த்து மருந்துகள் எடுத்து கொள்ளலாம். அதே இரண்டாம் நிலை என்றால் அவர்களுக்கு உடனடியாக தீவிர சிகிச்சை வழங்க வேண்டும். இதை தாண்டி அதிக நாட்கள் அமோனியா கலந்த காற்றை ஒருவர் சுவாசித்து வந்தால் ஆஸ்துமா உள்ளிட்ட தீவிர நோய்கள் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் திருப்பாதி. அதே சமயம் நீண்ட நாட்கள் அமோனியா உடலுக்குள் சென்று கொண்டிருந்தால் உடல் பாகங்களை அரிக்கும் பிரச்சனையும் ஏற்படலாம்" என்று அவர் தெரிவித்தார்.
உலக சுகாதார நிறுவனம் சொல்வது என்ன?
உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, காற்றில் 25 பிபிஎம் அமோனியா இருந்தால் எந்த விதமான குறிப்பிட தகுந்த பாதிப்பும் ஏற்படாது. அதே ,தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிர்வாக அளவீடுகளின்படி, மிகவும் உணர்திறன் கொண்ட நபர்களுக்கு, காற்றில் 50 பிபிஎம் அளவு அம்மோனியா இருந்தாலே கண், மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகளில் எரிச்சல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணூரில் காற்றில் அமோனியா எவ்வளவு? அதனால் என்ன ஆபத்து?
எண்ணூர் துறைமுகம் அருகில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உடனடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது குறித்து பூவுலகில் நண்பர்கள் அமைப்பின் சூழலியல் பொறியாளர் பிரபாகரன் வீரஅரசு அவர்களிடம் கேட்டபோது,
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கைபடி, கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் அம்மோனியா பரிமாற்றம் செய்யும் குழாயின் அருகே காலை 2.30 மணியளவில் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த ஆய்வின் படி, கடலில் ஒரு லிட்டருக்கு 49 மில்லி கிராம் அளவில் அம்மோனியம் கலந்திருந்தாகவும், அதே பகுதியில் காற்றில் ஒரு கன அடிக்கு 2093 மைக்ரோ கிராம் கலந்திருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியுள்ள பிரபாகரன், “ மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வின்படி கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 10 மடங்கு அதிகாமானதாகவும், காற்றில் 5 மடங்கு அதிகமானதாகவும் உள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு ஒரு கண அடிக்கு 400 மைக்ரோகிராம் மற்றும் கடலில் ஒரு லிட்டருக்கு 5 மில்லி கிராம் அளவில் தான் இருக்க வேண்டும். தற்போதைய அதிகமான கசிவால் கடல்வாழ் உயிரினங்கள் இறக்கும் சூழல் ஏற்படலாம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தை தாண்டி தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார துறை, கடல்துறை ஆகியவை சேர்ந்து உடனடி ஆய்வுகளை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமோனியாவை அகற்ற முடியுமா?
நேற்று இரவு அமோனியாவின் வாடை அதிகளவில் வீசி மயக்கம், தலை சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதால் எண்ணூர் பெரியகுப்பம் மற்றும் சின்னக்குப்பம் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் மீண்டும் அந்த பகுதியில் இயல்புநிலை திரும்பி விட்டதாகவும், மக்கள் பாதுகாப்பாக உள்ளே செல்லலாம் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றில் கலந்த அமோனியாவை எப்படி அகற்றுவது என்று கேட்டபோது, நீரை பீய்ச்சி மட்டுமே அவற்றின் செறிவை குறைக்க முடியும் என்று தெரிவித்தார் சுவாமிநாதன். செயற்கை மழை அல்லது நீர் பீய்ச்சும் வாகனம் மூலமாக காற்றில் கலந்துள்ள அமோனியாவை மட்டுப்படுத்தலாம் என்று கூறுகிறார் அவர்.
அதே சமயம், இதை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நெறிமுறைகள் மூலமே கையாள வேண்டும் என்கிறார் மருத்துவர் திருப்பாதி. “ஏற்கனவே கலந்த அமோனியாவை தடுக்க எந்த வழியும் இல்லை. அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு வேண்டுமானால் மக்களுக்கு சிகிச்சை அளிக்கலாம். ஆனால், மொத்தமாக காற்றிலிருந்து அதை நீக்குவது கடினம். அதன் செறிவை வேண்டுமானால் குறைக்கலாம். மற்றபடி, இனிமேல் இது போன்ற விபத்துகள் ஏற்படாமல் சுற்றுசூழல் பாதுகாப்பு நெறிமுறைகளையே பின்பற்ற வேண்டும்” என்று கூறுகிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)