தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணம் குறைவாகக் கிடைப்பது ஏன்? இது கணக்கிடப்படுவது எப்படி?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை வெள்ள நிவாரணமாக மத்திய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால், மிகக் குறைவான தொகையே மத்திய அரசு சமீபத்தில் இதற்கென ஒதுக்கீடு செய்திருக்கிறது.

பேரிடர் நிவாரணம் எப்படிக் கோரப்படுகிறது, எவ்வளவு அளிப்பது என்பதை மத்திய அரசு எப்படி முடிவு செய்கிறது?

தமிழகத்தை புரட்டிப் போட்ட கனமழை

கடந்த டிசம்பர் மாதத்தில் தமிழ்நாட்டைத் தாக்கிய மிக்ஜம் புயலின் காரணமாக, மாநிலத்தின் பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இந்தப் புயலின் காரணமாக 2 நாட்களுக்கு மேல் கன மழை பெய்தது. இந்தக் கன மழையின் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்கள் நீரில் மூழ்கின. பெரும் பொருட்சேதம் ஏற்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் புயல் நிவாரண உதவிகளைக் கோரியது. அதன்படி வாழ்வாதார உதவியாகவும் தற்காலிக மறுசீரமைப்புக்காகவும் 7,033 கோடி ரூபாயையும் நிரந்தர மறுசீரமைப்பிற்காக 12,659 கோடி ரூபாயையும் தர வேண்டும் என தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இதற்குப் பிறகு, டிசம்பர் 17, 18ஆம் தேதிகளில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அதி கன மழைபெய்தது. தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 24 மணி நேரத்தில் 90 செ.மீக்கும் அதிகமாக மழை பதிவானது. இதில் இந்த நான்கு தென் மாவட்டங்களும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின.

குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டது. வீடுகள், வணிக நிறுவனங்கள், சாலைகள், உள்கட்டமைப்பு வசதிகள் மிக மோசமான சேதத்திற்கு உள்ளாயின. இந்த சேதத்திற்கு என உடனடி நிவாரணமாகவும் நிரந்தர சீரமைப்பிற்கான தொகையாகவும் ரூ. 18,214.52 கோடி கேட்டு மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்தது.

இது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து எந்த பதிலும் வராத நிலையில், ஏப்ரல் மாதத் துவக்கத்தில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது தமிழ்நாடு அரசு.

மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசின் சார்பில் 37,907 கோடி ரூபாயைக் கோரிய நிலையில் இதுவரை எந்த நிதியும் வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று கூறி இந்த வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்தது. இடைக்கால நிவாரணமாக 2,000 கோடி ரூபாயை வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசின் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், சில நாட்களுக்கு முன்பாக மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை அறிவித்திருக்கிறது. அதன்படி மிக்ஜம் புயல் பாதிப்பிற்கு என 115.49 கோடி ரூபாயும் தென் மாவட்ட மழை பாதிப்பிற்கு என 160.61 கோடி ரூபாயும் விடுவிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

மழை வெள்ள பாதிப்பிற்கு என தமிழ்நாடு அரசு மிகப் பெரிய தொகையைக் கோரியிருந்த நிலையில், மத்திய அரசின் இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏமாற்றம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் விடுத்த அறிக்கையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை 2,477 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஆனால், மத்திய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இந்த குறைவான நிதி ஒதுக்கீட்டிற்கு தமிழ்நாட்டின் வேறு சில அரசியல் கட்சிகளும் கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தன.

இந்த ஆண்டு மட்டுமல்ல, பேரிடர் ஏற்படும் ஒவ்வொரு ஆண்டிலும் இதுபோல மாநில அரசு நிதியுதவி கோருவதும், ஒதுக்கப்படும் நிதி மிகக் குறைவாக இருப்பதாக சுட்டிக்காட்டுவதும் தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது.

பேரிடர் ஏற்பட்ட பிறகு, பேரிடரால் ஏற்பட்ட சேதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது? எந்த விதத்தில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது?

பேரிடருக்கான நிதியை மத்திய அரசு எப்படி ஒதுக்கீடு செய்கிறது?

பேரிடர்கள் வரும்போது அதனை எதிர்கொள்ள ஒரு நிதிக் கட்டமைப்பு இந்தியாவில் இருக்கிறது. அதன்படி இரண்டு விதமான நிதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று National Disaster Risk Management Fund (NDRMF) மற்றொன்று State Disaster Risk Management Funds (SDRMF). இதில் State Disaster Risk Management Funds என்ற நிதி State Disaster Response Fund (SDRF) என்றும் State Disaster Mitigation Fund என்றும் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

மாநிலங்களுக்கான இரண்டு நிதிகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீட்டை செய்கின்றன. எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்வது என்ற பரிந்துரையை ஒவ்வொரு நிதி ஆணையமும் வகுக்கும்.

மாநில அரசுகளுக்கு ஒதுக்கப்படும் நிதியைப் பொறுத்தவரை, அந்த மாநிலம் எந்த அளவுக்கு பேரிடரால் பாதிக்கப்படுகிறது, முந்தைய பேரிடர்களில் அந்த மாநிலம் எவ்வளவு செலவு செய்தது என்பதையெல்லாம் வைத்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு அளிக்க வேண்டிய நிதியை நிதி ஆணையம் வரையறுக்கிறது.

மாநிலப் பேரிடர் மீட்பு நிதிக்கு (SDRF) மத்திய மாநில அரசுகள் 75:25 என்ற விகிதத்தில் நிதியளிக்கும். வடகிழக்கு மற்றும் இமயமலையை ஒட்டியுள்ள மாநிலங்களுக்கு இந்த விகிதம் 90:10 என இருக்கும். தேசியப் பேரிடர் மேலாண்மை நிதிக்கு முழுத் தொகையையும் மத்திய அரசே அளிக்கும்.

மத்திய அரசு இரண்டு தவணைகளில் இந்த நிதியை அளிக்கும். ஒரு பேரிடர் ஏற்படும்போது அந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க மாநில அரசுகள் பயன்படுத்தும்.

தேசியப் பேரிடர் நிதியைப் பொறுத்தவரை, இது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். எந்த மாநிலத்திலாவது மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டால், அந்தப் பேரிடரை அந்த மாநிலத்தின் பேரிடர் நிதியால் சமாளிக்க முடியவில்லையென்றால், நிதி உதவி அளிப்பதற்காக இது பயன்படுத்தப்படும்.

இந்த நிலையில் ஒரு மாநிலத்தை மிகப் பெரிய பேரிடர் தாக்கும்போது, முதலில் தங்களிடம் உள்ள பேரிடர் மீட்பு நிதியை வைத்து மாநிலங்கள் அதனைச் சமாளிக்கும். ஆனால், பேரிடரைச் சமாளிக்கவும் நிவாரண உதவியை அளிக்கவும் மாநிலத்தில் உள்ள நிதி போதாமல் இருக்கும்போது தேசியப் பேரிடர் நிதியிலிருந்து தங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாநில அரசு கோரிக்கை விடுக்கும்.

பேரிடர் ஏற்பட்ட மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள், பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் ஆகியோர் அளிக்கும் தகவல்களை வைத்து Memorandum of Loss என்ற விரிவான அறிக்கையை மாநில அரசு உருவாக்கி, மத்திய அரசிடம் அளிக்கும். அதன் அடிப்படையில் நிதி உதவி தேவை என்ற கோரிக்கையை மாநில அரசு முன்வைக்கும்.

இதற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை விவரிக்கிறார் இந்தியாவின் மிகப் பெரிய பேரிடர்களில் பணியாற்றிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர், "மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்த பிறகு மத்திய அரசு, இணைச் செயலர் அந்தஸ்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் தலைமையில் ஒரு நிபுணர் குழுவை அமைக்கும்.

அந்த நிபுணர் குழுவில், மாநிலத்தில் எவ்விதமான பேரிடர் ஏற்பட்டிருக்கிறதோ, அந்தப் பேரிடர் தொடர்பான துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருப்பார்கள். அவர்கள் பேரிடர் ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவார்கள்.

இதற்குப் பிறகு மாநில தலைமைச் செயலகத்தில் இது தொடர்பாக ஒரு விரிவான ஆய்வுக் கூட்டம் நடக்கும். அந்த மாநில தலைமைச் செயலர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைப்பார். இதற்குப் பிறகு தில்லிக்குத் திரும்பும் அந்த நிபுணர் குழு, தங்களது பரிந்துரையை அரசிடம் அளிக்கும்.

இந்தப் பரிந்துரை மத்திய அரசிடம் அளிக்கப்பட்ட பிறகு, மத்திய உள்துறை செயலர் தலைமையில் ஒரு கூட்டம் நடக்கும். அதற்குப் பிறகு உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டம் ஒன்றும் நடைபெறும். இந்த இரு கூட்டங்களுக்குப் பிறகு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யலாம் என்பதை மத்திய அரசு முடிவுசெய்து, மாநில அரசுக்கு அளிக்கும்" என்கிறார் அவர்.

பேரிடர் மேலாண்மையைப் பொறுத்தவரை வேறு சில விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் ஒடிஷாவின் பேரிடர் மேலாண்மை கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு வகுத்தவரும் ஒதிஷாவின் 1999ஆம் ஆண்டு சூப்பர் சைக்ளோன், 2001ஆம் ஆண்டி பெருவெள்ளம், 2002ஆம் ஆண்டின் பெரும் வறட்சி, 2003ஆம் ஆண்டின் வரலாறு காணாத வெள்ளம் ஆகிய பேரிடர்களில் அனுபவம் கொண்டவரும், தற்போது ஒடிஷா அரசின் ஆலோசகருமான ஆர். பாலகிருஷ்ணன்.

"அதாவது பேரிடரின்போது எந்த சேவையும் இலவசமாகக் கிடைக்காது. பேரிடரின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் விமானப் படை விமானங்கள், ஹெலிகாப்டர்களுக்கு மாநில அரசு உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டணம் மாநில பேரிடர் நிதியில் இருந்து அளிக்கப்படும்.

அதேபோல, பேரிடர் நடந்தவுடன் வரும் நாட்களில் அரசு அளிக்கும் நிவாரணங்கள், சாதாரண நாட்களில் கிடைக்கும் உதவிகளைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அதேபோல மத்திய அரசின் பேரிடர் உதவிகள் மாநில அரசின் அரசியலைப் பொறுத்து தீர்மானிக்கப்படவும் கூடாது.

பேரிடர் மேலாண்மை நிதியை ஒதுக்கும்போது, 'மறுமை நோக்கின்றோ அன்றே பிறர், வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே' (வறுமையைப் பார்த்துக் கொடுப்பானே தவிர, மறுமையில் என்ன கிடைக்கும் என்பதை எதிர்பார்த்து கொடுக்க மாட்டான்) என்ற புறநானூற்றுப் பாடல் சொல்வதைப் போல ஒதுக்கீடு செய்யவேண்டும். காரணம், பேரிடர் மேலாண்மை அரசியலாக்கப்படுமானால் அதைவிட பேரிடர் வேறொன்றுமில்லை" என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

பேரிடர் தொடர்பாக மாநிலப் பேரிடர் தவிர்ப்பு நிதி (State Disaster Mitigation Fund - SDMF) என்ற நிதியும் உருவாக்கப்பட்டிருக்கிறது. பேரிடர் ஏற்பட்டு உடனடி நிவாரணம் அளிக்கப்பட்ட பிறகு, எதிர்காலத்தில் இதுபோன்ற பேரிடர்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான கட்டமைப்புகளை உருவாக்க இந்த நிதி ஏற்படுத்தப்பட்டது.

எல்லா மாநிலங்களும் இதற்கென தனியான நிதி அமைப்பை உருவாக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதற்கும் மத்திய அரசு 75 சதவீத நிதியை அளிக்கும். ஆனால், இந்த நிதியை உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்த முடியாது. மாறாக, தடுப்பு நடவடிக்கைகளுக்கே பயன்படுத்த முடியும்.

இந்தியாவில் பேரிடர் மேலாண்மையின் வரலாறு

இந்தியாவில் பேரிடர் மேலாண்மை என்பது முறையாகத் துவங்கியது 1999ஆம் ஆண்டிற்குப் பிறகுதான். அந்த ஆண்டு நவம்பர் மாதத் துவக்கத்தில் ஒரு மிகப் பெரிய புயல் ஒடிஷாவைத் தாக்கியது. BOB 6 எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயலால் ஏற்பட்ட மழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 16 லட்சம் வீடுகள் பாதிக்கப்பட்டன. சுமார் 10,000 பேர் இதில் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டது. இதனால் ஏற்பட்ட பொருட்சேதம் மிகப் பெரியதாக இருந்தது.

ஒடிஷாவைப் பொறுத்தவரை பெரும்பாலான ஆண்டுகளில் புயலைச் சந்தித்துவந்த நிலையில், இதற்கென ஒரு நிலையான அமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 1999 டிசம்பர் 28ஆம் தேதியிட்ட ஒரு அரசாணையின்படி ஒடிஷா மாநில பேரிடர் தணிப்பு முகமை உருவாக்கப்பட்டது.

இதற்கு சில மாதங்களுக்கு முன்பே மத்திய அரசிலும் இதுபோன்ற எண்ணம் உருவாகியிருந்தது. பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை உருவாக்கவும் பேரிடர் தணிப்பு நடவடிக்கைகளை வகுக்கவும் ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2001ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குஜராத்தின் புஜ் பகுதியை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவுகோளில் 7.6ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 14,000க்கும் அதிகமானவர்கள் இறந்து போனார்கள். ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேருக்கு மேல் படுகாயமடைந்தார்கள். சுமார் 3,40,000 கட்டடங்கள் இடிந்துபோயின.

இதையடுத்து பேரிடர் நிகழ்வுகளை எதிர்கொள்ள ஒரு நிலையான அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. பத்தாவது ஐந்தாண்டு காலத் திட்டத்தில் பேரிடர் மேலாண்மை குறித்து இடம்பெற்றது. 12வது நிதி ஆணையம், பேரிடர் மேலாண்மைக்கான நிதியை ஒதுக்குவது குறித்து விவாதித்தது.

2004ல் ஏற்பட்ட சுனாமி, பேரிடர் மேலாண்மை அமைப்பதற்கான பணிகளை விரைவுபடுத்தியது. முடிவில் 2005ல் தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது. அதன் அடிப்படையில் தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை உருவாக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)