திட்வா புயல் தற்போது எங்கே உள்ளது? தமிழ்நாட்டை எப்போது நெருங்கும்? - சமீபத்திய தகவல்கள்

மழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இலங்கையை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ளது.

அந்த ஆய்வு மையம் வழங்கிய தகவலின்படி, கடலோர இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் திட்வா புயல் வடக்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருகிறது.

இன்று (நவம்பர் 28) மதியம் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், "திட்வா புயல் கடந்த ஆறு மணி நேரங்களில் மணிக்கு 10 கி.மீ என்ற வேகத்தில் நகர்ந்து இலங்கை திரிகோணமலையில் இருந்து 40 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவிலும், காரைக்காலின் தெற்கு தென்கிழக்கே 320 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு-தென்கிழக்கு திசையில் 530 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வடக்கு - வடமேற்கு திசையில் இலங்கை மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளைக் கடந்து, வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திர கரைகளை வரும் 30ஆம் தேதி அதிகாலை வந்தடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை பெய்யும்?

இந்நிலையில், திட்வா புயல் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக பாதிப்புகளும் பதிவாகி வருகின்றன.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காரணமாக தென்மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழை பெய்துள்ளது.

திட்வா புயல்

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதில் அமைந்துள்ள ஶ்ரீவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

சென்னையைப் பொருத்தவரை, இன்று (நவம்பர் 28) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நவம்பர் 29: வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரைக் காற்று மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

ஏனைய கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 75 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

திட்வா புயல்

பட மூலாதாரம், Getty Images

நவம்பர் 30: வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டையின் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 1: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 2 முதல் 4 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு மழை, திட்வா புயல்

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

புயல் முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு முழுவதும் நாளை (நவம்பர் 29) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக, நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுவை முழுவதும் நாளை (நவம்பர் 29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் கனமழை எச்சரிக்கையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்வா புயல் எச்சரிக்கை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதோடு, தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

நவம்பர் 28–30 தேதிகளில் வட மற்றும் தென் தமிழகம், புதுச்சேரி, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திரம், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு–மாலத்தீவு பகுதிகளில் 35 முதல் 90 கி.மீ/மணி வரை பலத்த சூறாவளிக்காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், "டிசம்பர் 1–2 தேதிகளில் காற்றின் வேகம் 45–75 கி.மீ/மணி வரை குறையும். எனவே ஆழ்கடல் மீனவர்கள் மேற்குறிப்பிட்ட நாட்களில் இந்தப் பகுதிகளைத் தவிர்க்குமாறும், மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்" என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தனுஷ்கோடியில் இருந்து மக்கள் வெளியேற்றம்

திட்வா புயல்
படக்குறிப்பு, தனுஷ்கோடியில் இருந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், அரசுப் பேருந்தின் மூலம் அழைத்து வரப்பட்டு, ராமேஸ்வரம் தெற்கு கரையூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திட்வா புயல் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோடி கடல் பகுதி வழக்கத்திற்கு மாறாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. அப்பகுதியில் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருவதால் அங்கு வசிக்கும் மீனவ மக்களின் பாதுகாப்பு கருதி, அவர்களை அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு அழைத்து வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்த 30க்கும் மேற்பட்ட மக்கள், அரசுப் பேருந்தின் மூலம் அழைத்து வரப்பட்டு, ராமேஸ்வரம் தெற்கு கரையூர் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அப்பகுதி மீனவர்கள் பலரும் தங்களது நாட்டுப் படகுகளை கரையில் நிறுத்தி வைத்திருந்தாலும், கடல் சீற்றதுடன் காற்றின் வேகம் அதிகரிப்பதால், படகில் இருந்த இன்ஜின்கள் உள்ளிட்டவற்றை சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றி ராமேஸ்வரம் கொண்டு வந்துள்ளனர்.

தனுஷ்கோடி கடல் பகுதியில் வழக்கத்திற்கு மாறான கடும் சீற்றத்துடன் தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருவதால் மறு உத்தரவு வரும் வரை தனுஷ்கோடி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இதனால் தனுஷ்கோடி செல்லும் சுற்றுலா பயணிகள் அனைவரும் புது ரோடு என்ற பகுதியில் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

தனுஷ்கோடி பகுதிக்கு மீனவர்கள் யாரும் செல்லக்கூடாது எனவும் மீறிச் சென்று தங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

திட்வா புயல்

வெள்ளத்தில் மூழ்கிய வாழை... படகில் சென்று அறுவடை செய்த விவசாயிகள்

அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழைகள், வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், படகுகளில் சென்று அவற்றை அறுவடை செய்து வந்துள்ளனர் திருச்செந்தூர் அருகே உள்ள விவசாயிகள்.

திருச்செந்தூர் அருகே உள்ள செம்மறிகுளம் கஸ்பா பகுதிக்கு அதிகமான நீர் வந்தது. அது அங்கிருந்த வாழைத் தோட்டங்களில் நுழைந்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 50 ஆயிரம் வாழை மரங்கள் நீரில் மூழ்கின.

எனவே, விவசாயிகள் படகுகள் எடுத்துக் கொண்டு தோப்புக்குள் சென்று, வாழையை அறுவடை செய்து, படகுகளில் வைத்து கொண்டு வந்தனர்.

திருவாரூர் வந்த பேரிடர் மீட்புப் படையினர்

இலங்கை கடல் பகுதியில் உள்ள திட்வா புயல் 30ம்தேதி அதிகாலை தமிழக கடலோர பகுதிகளை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பேரிடர் மீட்புப் படையினர் திருவாரூரில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி, ஆவடி பட்டாலியனை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவினர் திருவாரூருக்கு சென்றுள்ளனர். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேரிடர் நேரங்களில் பயன்படுத்தக்கூடிய கருவிகள், பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் ஏனைய தளவாடங்களை காட்சிப்படுத்தினர். மாவட்டத்தில் எங்கெல்லாம் மீட்புப் பணிகளுக்கான அவசியம் இருக்கிறது என்று கருதப்படுகிறதோ, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட பிறகு, அப்பகுதிகளுக்கு தனித்தனி குழுக்களாக பேரிடர் மீட்புப் படையினர் செல்வார்கள்.

திட்வா புயல்

புதுச்சேரியில் கடல் சீற்றம்

திட்வா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. எனவே, அப்பகுதியில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியின் தெற்கு-தென்கிழக்கு திசையில் 430 கி.மீ தொலைவில் திட்வா புயல் நிலை கொண்டுள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி நோக்கி நகரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரையில் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் புதுச்சேரி மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்வா புயல்

மேலும் கடலில் பொதுமக்கள் யாரும் இறங்காதவாறு, போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ள மீட்பு பணிகளில் ஈடுபட 60 பேர் கொண்ட 2‌ கம்பெனி தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புதுச்சேரிக்கு வந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு