வெளிநாட்டு சினிமா பார்த்தால் சுட்டுக் கொலை; வட கொரியாவில் நடப்பது என்ன?

பட மூலாதாரம், KCNA via EPA
- எழுதியவர், ஜீன் மேக்கன்சி
- பதவி, சியோல் செய்தியாளர்
வெளிநாட்டுப் படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்தவர்கள் மற்றும் பகிர்ந்தவர்களுக்கு, வட கொரிய அரசாங்கம் மரண தண்டனையை அளித்திருப்பதாக ஒரு ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
உலகிலிருந்து பெருமளவு தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த சர்வாதிகார ஆட்சி, அதன் மக்களின் சுதந்திரத்தை மேலும் கட்டுப்படுத்தி அதிக அளவில் கட்டாய உழைப்பில் ஈடுபடுத்துகிறது என்றும் ஐநா அறிக்கை கண்டுபிடித்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளாக வட கொரிய அரசு "குடிமக்களின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களின் மீதான" கட்டுப்பாட்டை இறுக்கியுள்ளது என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கண்டறிந்துள்ளது.
"இன்றைய உலகில் வேறு எந்த மக்களும் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்படவில்லை" என்று அது முடிவு செய்தது. மேலும், தொழில்நுட்ப முன்னேற்றங்களின் உதவியால் கண்காணிப்பு "அதிகமாகப் பரவியுள்ளது" என்றும் அது கூறியுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க், இந்த நிலைமை தொடர்ந்தால், வட கொரியர்கள் "அவர்கள் நீண்ட காலமாக அனுபவித்துவரும் அதிக துன்பம், கொடூரமான அடக்குமுறை மற்றும் பயத்திற்கு உட்படுத்தப்படுவார்கள்" என்று கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளில் வட கொரியாவிலிருந்து தப்பிச் சென்ற 300-க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட நேர்காணல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, மரண தண்டனை அடிக்கடி பயன்படுத்தப்படுவதாகக் கண்டறிந்துள்ளது.
மரண தண்டனை விதிக்க அனுமதிக்கும் குறைந்தது ஆறு புதிய சட்டங்கள் 2015-ம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. கிம் ஜாங் உன் வெளிநாடுகளிலிருந்து மக்கள் தகவல்களைப் பெறுவதற்கான வழிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதால், வெளிநாட்டு ஊடக உள்ளடக்கங்களான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள் போன்றவற்றை பார்ப்பது மற்றும் பகிர்வது போன்ற செயல்களுக்காகவும் இப்போது மரண தண்டனை விதிக்கப்படலாம்.
2020-ம் ஆண்டு முதல் வெளிநாட்டு உள்ளடக்கத்தைப் பரப்பியதற்காக அதிக மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. ஆராய்ச்சியாளர்களிடம் தப்பி வந்தவர்கள் கூறினர். மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தவும், அவர்கள் சட்டத்தை மீறுவதைத் தடுக்கவும், துப்பாக்கிச் சூடு குழுவால் இந்த மரண தண்டனைகள் பகிரங்கமாகத் நிறைவேற்றப்படுகின்றன என்று அவர்கள் விவரித்தனர்.
2023-ம் ஆண்டு தப்பிச் வந்த காங் கியூரி, தென் கொரிய உள்ளடக்கத்துடன் பிடிபட்ட தனது மூன்று நண்பர்கள் கொல்லப்பட்டதாக பிபிசியிடம் கூறினார். 23 வயதான ஒரு நண்பருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு விசாரணையின்போது காங் கியூரி நீதிமன்றத்தில் இருந்தார்.
"அவர் போதைப்பொருள் குற்றவாளிகளுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டார். இந்தக் குற்றங்கள் இப்போது ஒரே மாதிரியாகக் கருதப்படுகின்றன" என்று அவர் கூறினார். மேலும், 2020 முதல் மக்கள் அதிக அச்சமடைந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

2011-ல் தற்போதைய தலைவர் கிம் ஜாங் உன் பதவிக்கு வந்தபோது, அவர்கள் இனி "வயிற்றைக் கட்டிக்கொள்ள" (அதாவது, போதிய உணவு இல்லாமல்) வேண்டியதில்லை என்று உறுதியளித்திருந்ததால், தங்கள் வாழ்க்கை மேம்படும் என்று நம்பியதாக நேர்காணல் செய்யப்பட்ட தப்பி வந்தவர்கள் கூறினர். பொருளாதாரத்தை வளர்ப்பதாகவும், அதே நேரத்தில் அணு ஆயுதங்களை மேலும் மேம்படுத்துவதன் மூலம் நாட்டைக் காப்பதாகவும் அவர் உறுதியளித்திருந்தார்.
ஆனால், கிம் 2019-ல் மேற்கு நாடுகளுடனும் அமெரிக்காவுடனும் ராஜதந்திர பேச்சுக்களைத் தவிர்த்து, தனது ஆயுதத் திட்டத்தில் கவனம் செலுத்தியதால், மக்களின் வாழ்க்கை நிலை மற்றும் மனித உரிமைகள் "சீர்குலைந்துவிட்டன" என்று அறிக்கை கண்டறிந்தது.
நேர்காணல் செய்யப்பட்டவர்களில் கிட்டத்தட்ட அனைவரும் தங்களுக்குப் போதிய உணவு இல்லை என்றும், ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்பது ஒரு "ஆடம்பரமான" விஷயம் என்றும் கூறினர். கோவிட் பெருந்தொற்று காலத்தில், கடுமையான உணவுப் பற்றாக்குறை இருந்ததாகவும், நாடு முழுவதும் மக்கள் பட்டினியால் இறந்ததாகவும் தப்பி வந்தவர்கள் கூறினர்.
அதே நேரத்தில், குடும்பங்கள் வர்த்தகம் செய்யும் முறைசாரா சந்தைகளை அரசு முடக்கியது. இதனால், அவர்கள் வாழ்வாதாரத்தைத் தேடுவது கடினமாகியது. மேலும், சீனாவுடனான எல்லையில் கட்டுப்பாடுகளை இறுக்கியதன் மூலமும், எல்லையைக் கடக்க முயற்சி செய்பவர்களைச் சுட்டுத் தள்ள படையினருக்கு உத்தரவிட்டதன் மூலமும் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக மாறியது.
2018-ம் ஆண்டு 17 வயதில் தப்பி ஓடிய ஒரு இளம் பெண், "கிம் ஜாங் உன்-னின் ஆரம்ப நாட்களில், எங்களுக்கு சில நம்பிக்கைகள் இருந்தன, ஆனால் அந்த நம்பிக்கை நீண்ட காலம் நீடிக்கவில்லை" என்று கூறினார்.
"அரசாங்கம் படிப்படியாக மக்கள் சுயமாக வாழ்வாதாரத்தை தேடுவதைத் தடுத்தது. மேலும், வாழ்வது என்பதே ஒரு தினசரி துன்பமாக மாறியது" என்று அவர் ஐ.நா ஆய்வாளர்களிடம் சாட்சியம் அளித்தார்.
"கடந்த 10 ஆண்டுகளில், அரசாங்கம் மக்களின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. பொருளாதார, சமூக அல்லது அரசியல் முடிவுகளை அவர்களால் சொந்தமாக எடுக்க முடியவில்லை" என்று ஐ.நா. அறிக்கை கூறியது. கண்காணிப்புத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடுகள் இதற்கு உதவியுள்ளன என்றும் அறிக்கை கூறியது.
"மக்களின் கண்களையும், காதுகளையும் தடுப்பதே" இந்தக் கட்டுப்பாடுகளின் நோக்கம் என்று தப்பி ஓடிய ஒருவர் ஆராய்ச்சியாளர்களிடம் கூறினார்.
"இது அதிருப்தி அல்லது புகாரின் சிறிய அறிகுறியையும் அகற்றுவதை நோக்கமாகக் கொண்ட ஒருவகையான கட்டுப்பாடு " என்று பெயர் குறிப்பிட விரும்பாத அவர்கள் கூறினர்.

பட மூலாதாரம், AFP via Getty Images
அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு முன்பு இருந்ததைவிட இப்போது அதிக அளவில் கட்டாய உழைப்பைப் பயன்படுத்துவதாகவும் அறிக்கை கண்டறிந்தது. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கட்டுமானம் அல்லது சுரங்கத் திட்டங்கள் போன்ற கடினமான வேலைகளைச் செய்ய "ஷாக் பிரிகேட்ஸ்" என்ற குழுக்களில் சேர்க்கப்படுகிறார்கள்.
இந்த வேலை, தங்கள் சமூக நிலையை மேம்படுத்தும் என்று தொழிலாளர்கள் நம்புகிறார்கள். ஆனால், வேலை மிகவும் ஆபத்தானது. மரணங்கள் சாதாரணமாக நிகழக்கூடியவை. எனினும், தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கம் மரணத்தை கிம் ஜாங் உன்-னுக்கு செய்த ஒரு தியாகமாகக் கூறி மகிமைப்படுத்துகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஆயிரக்கணக்கான அனாதைகள் மற்றும் வீதியோர சிறுவர்களைக் கூட அது வேலைக்கு சேர்த்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
2014-ல் வெளிவந்த ஒரு முக்கியமான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் அறிக்கையின் தொடர்ச்சியாக இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை வெளியாகியுள்ளது. 2014 அறிக்கையில், வட கொரிய அரசாங்கம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்வதாக முதன்முறையாகக் கண்டறியப்பட்டது.
நாட்டின் மோசமான அரசியல் சிறை முகாம்களில் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டது. அங்கு மக்கள் வாழ்நாள் முழுவதும் அடைக்கப்பட்டு "காணாமல் போவார்கள்".
இந்த 2025-ம் ஆண்டு அறிக்கை, குறைந்தது நான்கு முகாம்கள் இன்னும் செயல்படுகின்றன என்றும், சாதாரண சிறைகளில் உள்ள கைதிகள் இன்னும் சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர் என்றும் கண்டறிந்துள்ளது.
மோசமான சிகிச்சை, அதிக வேலை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகியவற்றால் கைதிகள் இறப்பதை நேரில் கண்டதாக பல தப்பி ஓடியவர்கள் கூறினர். இருப்பினும், "காவலர்களின் வன்முறையில் ஒரு சிறிய குறைவு" உட்பட வசதிகளில் "சில குறைந்த அளவு மேம்பாடுகளை" ஐ.நா. கண்டது.

பட மூலாதாரம், KCNA via Reuters
நிலைமையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்று ஐ.நா. அழைப்பு விடுக்கிறது.
எனினும், இது நடப்பதற்கு, ஐ.நா. பாதுகாப்பு சபையால் இது பரிந்துரைக்கப்பட வேண்டும். 2019 முதல், ஐநா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினர்களான சீனா மற்றும் ரஷ்யா, வட கொரியா மீது புதிய தடைகளை விதிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மீண்டும் மீண்டும் தடுத்துள்ளன.
கடந்த வாரம், கிம் ஜாங் உன், சீனத் தலைவர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருடன் பெய்ஜிங்கில் நடந்த ஒரு ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றார். இது, வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அதன் குடிமக்களை நடத்தும் விதத்தை இந்த நாடுகள் அமைதியாக ஏற்றுக்கொண்டதைக் குறிக்கிறது.
சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, வட கொரிய அரசாங்கம் தனது அரசியல் சிறை முகாம்களை ஒழிக்க வேண்டும், மரண தண்டனையைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் குடிமக்களுக்கு மனித உரிமைகள் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக் கொண்டுள்ளது.
"குறிப்பாக வட கொரிய இளைஞர்களிடையே மாற்றத்திற்கான தெளிவான மற்றும் வலுவான விருப்பம் இருப்பதாக எங்கள் அறிக்கை காட்டுகிறது" என்று ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் டர்க் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












