மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கேப்டன்சி மாற்றமா? ஹர்திக்கிற்கு எழும் ஆதரவுக் குரல்

காணொளிக் குறிப்பு, மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக்கை தொடர்ச்சியாக கேலி செய்து வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கேப்டன்சி மாற்றமா? ஹர்திக்கிற்கு எழும் ஆதரவுக் குரல்

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே, மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக்கை தொடர்ச்சியாக கேலி செய்து வருகின்றனர். சொந்த நாட்டு வீரரையே எல்லை மீறி ரசிகர்கள் அவமதிக்கும் காணொளிகள் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. முன்னாள் இன்னாள் வீரர்கள் பலரும் ஹர்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

குறிப்பாக திங்கட்கிழமை அன்று நடந்த மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஹர்திக் பாண்டியா பேட் செய்ய களத்துக்குள் வந்தபோது ‘கணபதி பாப்பா மோரியா’ என்ற கோஷம் ரசிகர்கள் தரப்பில் இருந்து எழுந்து, அவரை சகட்டுமேனிக்கு கிண்டல் செய்தார்கள். ஒரு தருணத்தில் ரசிகர்களை அமைதியாக இருக்கும்படி சைகை செய்தார் ரோஹித்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ரசிகர்களை வென்ற பின்புதான், எதிரணியை வெல்ல முடியும் என்ற சூழல் எழுந்திருக்கிறது. ஐபிஎல் டி20 தொடரின் 16 ஆண்டு கால வரலாற்றில் ஒரு அணியின் கேப்டன் ரசிகர்களால் தொடர்ச்சியாக கேலி செய்யப்படுவது, ஏற்க மறுக்கப்பட்டு எதிர்ப்புக் குரலோடு வலம்வருவது இதுதான் முதல்முறையாக இருக்கும்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்கியது முதலே, மும்பை ரசிகர்கள் பலரும் ஹர்திக்கை தொடர்ச்சியாக கேலி செய்கின்றனர். சொந்த நாட்டு வீரரையே எல்லை மீறி ரசிகர்கள் அவமதிக்கும் காணொளிகள் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. முன்னாள் இன்னாள் வீரர்கள் பலரும் ஹர்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர்.

கேப்டனாக நீடிப்பாரா ஹர்திக் பாண்டியா

பட மூலாதாரம், Getty Images

ரசிகர்களின் இந்த செயல்பாட்டை இந்திய அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் கண்டித்துப் பேசினார். தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், ரசிகர்களுக்கு இடையிலான மோதல் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

வீரர்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்பதை ரசிகர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நம் நாடு. ரசிகர் சண்டைகள் இப்படி ஒரு அசிங்கமான பாதையில் செல்லக் கூடாது. இந்தியாவில் மட்டும்தான் இதுபோன்று நடக்கும். இதர நாட்டு வீரர்களின்ர் ரசிகர்கள் யாரும் தங்களுக்குள் சண்டையிடுகிறார்களா? இது ஒரு சினிமா கலாசாரம். விளையாட்டை ஒருபோதும் சினிமாவுடன் ஒப்பிடாதீர்கள். சச்சின், ராகுல் டிராவிட், கங்குலி போன்ற ஜாம்பவான்களே தோனியின் கீழ் விளையாடியுள்ளனர்.

உங்களுக்கு பிடித்த வீரர்கள் அல்லது அணியைப் பற்றி நீங்கள் விரும்புவதை கூற உங்களுக்கு சுதந்திரம் உண்டு. ஆனால் மற்றொரு வீரரை தாழ்த்தி பேசாதீர்கள் என அஷ்வின் குறிப்பிட்டார். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தற்போது அஷ்வின் விளையாடி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா ரசிகர்களுக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை என்பது அவரது உடல் மொழியில் தெரிகிறது. அவர் தனது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறார் என முன்னாள் வீரர் பார்தீவ் பட்டேல் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்தார்.

நடப்பு தொடரில் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியாத ஒரே அணியாக மும்பை அணி வலம் வருகிறது. மும்பை அணியின் கேப்டன் பொறுப்பை ரோஹித் சர்மாவிடமே ஹர்திக் பாண்டியா வழங்கிவிடலாம் என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார்.

ஆனால் இதுவரை அணி நிர்வாகம், ஹர்திக்கிற்கு எதிராக ரசிகர்கள் நடந்து கொள்ளும் விதம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் கருத்து கூறவில்லை.

ஹர்திக் பாண்டியா மீது ரசிகர்களுக்கு என்ன கோபம்? மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன பிரச்னை? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)