You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சாம்பியன்ஸ் டிராஃபி: 25 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மோதும் இந்தியா-நியூசிலாந்து; தென் ஆப்பிரிக்கா தோல்வி ஏன்?
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி 3வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
லாகூரில் நேற்று (மார்ச் 5) நடைபெற்ற 2வது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 362 ரன்கள் சேர்த்தது. சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். 363 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் சேர்த்து தோல்வி அடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சாம்பியன்ஸ் டிராஃபியில் அடிக்கப்பட்ட அதிகபட்சமாகவும் நியூசிலாந்து ஸ்கோர் அமைந்தது.
இதையடுத்து, ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, வரும் ஞாயிறன்று (மார்ச் 9) துபையில் நடக்கும் ஃபைனலில் இந்திய அணியுடன் மோதுகிறது.
2வது முறை மோதல்
சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலில் இந்திய அணியை 2வது முறையாக நியூசிலாந்து அணி சந்திக்கிறது. ஏற்கெனவே 2000ம் ஆண்டில் நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணியை 2 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நினைவிருக்கும். அதன்பின், 25 ஆண்டுகளுக்குப்பின் இந்திய அணியை ஃபைனலில் நியூசிலாந்து சந்திக்கிறது.
ஆனால், 2009ம் ஆண்டில் 2வது முறையாக இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்று, ஆஸ்திரேலிய அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இப்போது, 3வது முறையாக சாம்பியன்ஸ் டிராஃபிக்கு தகுதி பெற்றுள்ளது.
7-வது ஐசிசி ஃபைனல்
ஒட்டுமொத்தத்தில் ஐசிசி ஒருநாள் ஃபார்மெட்டில் நியூசிலாந்து அணி பங்கேற்கும் 5வது இறுதிப்போட்டியாகும். ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 2015, 2019 ஆகிய ஆண்டுகளிலும் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000, 2009, 2025 ஆகிய ஆண்டுகளிலும், டி20 உலகக் கோப்பையில் 2021ம் ஆண்டில் இறுதிப்போட்டியிலும், 2021ம் ஆண்டில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலும் பங்கேற்றது.
நியூசிலாந்து அணி இதுவரை ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் சாம்பியன்ஸ் டிராஃபியில் 2000-ம் ஆண்டிலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிலும் மட்டும்தான் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில், 16 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் சாம்பியன்ஸ் டிராஃபி ஃபைனலுக்கு நியூசிலாந்து தகுதி பெற்றுள்ளது.
ரவீந்திரா 5வது சதம்
நியூசிலாந்து அணி மிகப்பெரிய வெற்றிக்கு ரச்சின் ரவீந்திரா(108), கேன் வில்லியம்ஸன்(102) ஆகியோரின் சதம்தான் முக்கியக் காரணம். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 164 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோருக்கு வித்திட்டனர்.
சதம் அடித்து, ஒரு விக்கெட், 2 கேட்சுகளைப் பிடித்த ரவீந்திரா ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியில் ரவீந்திரா அடிக்கும் 2வது சதமாகும், ஒட்டுமொத்தமாக 5வது சதமாகும்.
ரவீந்திரா அடித்த 5 சதங்களும் ஐசிசி சார்பில் நடத்தப்பட்ட தொடர்களில் அடிக்கப்பட்டவை. அதாவது, 2023 உலகக் கோப்பையில் 3 சதங்களும், இந்த தொடரில் 2 சதங்களும் ரவீந்திரா அடித்துள்ளார். இதுநாள் வரை, எந்த கிரிக்கெட் வீரரும் தனது முதல் 5 சதங்களை ஐசிசி தொடர்களில் மட்டும் அடித்தது இல்லை.
வங்கதேசத்தின் மகமதுல்லா 4 சதங்கள் மட்டுமே ஐசிசி தொடர்களில் அடித்தநிலையில் அதையும் ரவீந்திரா முறியடித்துவிட்டார். அது மட்டுமல்லாமல், ஐசிசி தொடர்களான உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராஃபியில் மட்டும் ரவீந்திராவின் சராசரி 67 ஆக இருக்கிறது.
வில்லியம்ஸனின் ஹாட்ரிக் சதங்கள்
கேன் வில்லியம்ஸன் தொடர்ச்சியாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் சதத்தை பதிவுசெய்தார். ஏற்கெனவே 2019ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் முதல் சதத்தையும் (109), பாகிஸ்தானில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரில் 2வது சதத்தையும் (133), நேற்று 3வது சதத்தையும் வில்லியம்ஸன் பதிவுசெய்தார்.
அது மட்டுமல்லாமல், வில்லியம்ஸன் இந்த போட்டியில் முதல் 57 பந்துகளில் மெதுவாக பேட் செய்து 3 பவுண்டரிகள் உள்பட 40 ரன்கள் மட்டுமே சேர்த்து 70 ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடினார். ஆனால், அடுத்த 37 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 62 ரன்கள் சேர்த்து 167 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து சதம் விளாசினார். இது தவிர, நடுவரிசை பேட்டர்கள் டேரல் மிட்ஷெல்(49), கிளென் பிலிப்ஸ்(49) இருவரும் கேமியோ ஆடியதால் பெரிய ஸ்கோரை எட்ட முடிந்தது.
பந்துவீச்சில் நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் லாகூரின் தட்டையான மைதானத்தை நன்கு பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். கேப்டன் சான்ட்னர் 3 விக்கெட்டுகளையும், ஹென்றி, பிலிப்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிலும், கேப்டன் சான்ட்னர், முக்கிய விக்கெட்டுகளான பவுமா, வேன்டர் டூ சென், கிளாசன் விக்கெட்டுகளைச் சாய்த்து தென் ஆப்பிரிக்காவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
நியூசி-தெ. ஆப்ரிக்கா பந்துவீச்சு ஒப்பீடு
நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் நேற்று 28 ஓவர்களை வீசி, 143 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர். நியூசிலாந்து சுழற்பந்துவீச்சாளர்கள் ஆடுகளத்தை நன்கு பயன்படுத்திய அளவு தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களால் பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால், தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்கள் 14 ஓவர்கள் வீசியும் ஒரு விக்கெட்டைகூட சாய்க்கவில்லை, 93 ரன்கள் விட்டுக்கொடுத்தனர்.
அதேசமயம், தென் ஆப்பிரிக்க அணி 3 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள் உள்பட 4 வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசி 269 ரன்களை வாரி வழங்கினர். இதில், 3 ஸ்பெசலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் மட்டும் தலா 70 ரன்களுக்கு மேல் வழங்கினர்.
தென் ஆப்ரிக்க அணியின் டாப்ஆர்டர் பவுமா(56), வேன்டர் டூசென்(69) ஆகியோர் தவிர, நடுவரிசையில் ஒரு பேட்டர்கூட நிலைத்து பேட் செய்யாதது தோல்விக்கு முக்கியக் காரணம். 21-வது ஓவரிலிருந்து 40-வது ஓவருக்குள் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்தது, 116 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஆனால் அதேசமயம், இதே ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்து, டெத் ஓவர்களை அருமையாகப் பயன்படுத்தியது.
ஆறுதல் தந்த மில்லர் சதம்
தென் ஆப்பிரிக்க அணிக்கு நேற்று ஒரே ஆறுதலான அம்சம், டேவிட் மில்லர் கடைசிவரை களத்தில் இருந்து 67 பந்துகளில் சதம் அடித்தது மட்டும்தான். சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த பேட்டர் என்ற பெருமையை மில்லர் பெற்றார். இதற்கு முன் சேவாக் 77 பந்துகளில் சதம் அடித்த நிலையில் அதை மில்லர், இதற்கு முன் ஜோஸ் இங்கிலிஸ் முறியடித்தனர்.
டெய்லெண்டர் லுங்கி இங்கிடியை வைத்துக்கொண்டுதான் மில்லர் தனது சதத்தில் 96 சதவிகித ரன்களையும் சேர்த்தார். 10-வது விக்கெட்டுக்கு இங்கிடி, மில்லர் 56 ரன்கள் சேர்த்தனர். மில்லர் 54 ரன்கள் சேர்த்தபோது இங்கிடி ஒரு ரன் சேர்த்தார். மில்லர் தனது கடைசி 26 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்தார்.
தென் ஆப்பிரிக்கா தோல்விக்கு காரணம் என்ன?
தென் ஆப்பிரிக்க அணியும், ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் தோல்வியும் பிரிக்க முடியாததாகவிட்டது. இதுவரை பல ஐசிசி தொடர்களில் தென் ஆப்பிரிக்கா பங்கேற்றிருந்தாலும், அரையிறுதி கடந்தது மிகச்சிலமுறைதான். அரையிறுதியோடு தென் ஆப்பிரிக்கா தனது போராட்டத்தை, பயணத்தை முடித்துக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.
இதுவரை 11 முறை ஐசிசி நாக்அவுட் சுற்றுக்கு தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்று அதில் 2 முறைதான் வென்றுள்ளது. 1998ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபியை வென்றது இதைக் கடந்து பெரிதாக கோப்பையை வெல்லவில்லை. 2வது கோப்பையை நோக்கிய பயணம் தென் ஆப்பிரிக்காவுக்கு இன்னும் தொடர்கிறது. கடைசி 5 அரையிறுதிகளில் ஒன்றில்கூட தென் ஆப்பிரிக்கா வெல்லவில்லை.
வலிமையான வேகப்பந்துவீச்சு, விதவிதமான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்திருந்தும் இதுபோன்ற முக்கியத்துவமான போட்டிகளில் தென் ஆப்ரிக்க அணியால் வெற்றியை பெற முடியவில்லை. ஆடுகளத்தைப் பயன்படுத்தி நேற்று தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்விங் செய்யவில்லை, லைன் லென்த்தில்கூட பெரும்பாலும் வீசவில்லை, தட்டையான ஆடுகளத்தில் வேகத்தை அதிகப்படுத்தி, பவுன்ஸராக வீசியது நியூசிலாந்து பேட்டர்கள் ரன் சேர்க்க எளிதானது.
தென் ஆப்பிரிக்க பேட்டிங்கும் தொடக்கத்தில் சிறப்பாகவே இருந்தது, வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தோடுதான் கேப்டன் பவுமா, வேண்டர் டூ சென் ஆடினர். 143 ரன்களுக்கு 2 விக்கெட் என, நியூசிலாந்து ரன்ரேட்டுக்கு இணையாகத்தான் தென் ஆப்பிரிக்கா இருந்தது.
ஆனால், டூசென் ஆட்டமிழந்தபின் சீரான இடைவெளியில் தொடர்நது விக்கெட்டுகளை இழந்தது தென் ஆப்பிரிக்கா. குறிப்பாக 161 ரன்களில் இருந்து 218 ரன்களுக்குள், அதாவது 57 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்ததுதான் தோல்விக்கு பெரிய காரணம். நடுவரிசை நம்பிக்கை பேட்டர்கள் மார்க்ரம் (31), கிளாசன்(3), முல்டர்(8), யான்சென்(3) ரன்கள் சேர்த்து ஏமாற்றினர்.
லாகூர் ஆடுகளம் தட்டையானது. இந்த ஆடுகளத்தில் 350 ரன்களுக்கு மேல் அடித்தால்கூட நல்ல பார்ட்னர்ஷிப் மட்டும் இருந்தால் நிச்சயம் வென்றிருக்கலாம். இதே மைதானத்தில்தான் இங்கிலாந்தின் 352 ரன்களை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது. தென் ஆப்பிரி்க்காவின் கிளாசன், மார்க்கரம் ஆகிய இரு பெரிய பேட்டர்களும் நிலைத்து பேட் செய்திருந்தால் அடுத்தடுத்து அழுத்தத்தைக் கொடுத்து ஆட்டத்தை வெற்றிப்பாதைக்கு திருப்பி இருக்கலாம்.
'பார்ட்னர்ஷிப் இருந்தால் வெற்றி பெற்றிருப்போம்'
தோல்வி அடைந்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கூறுகையில், "நியூசிலாந்து நிர்ணயித்த இலக்கு சற்று அதிகம்தான். நாங்களும் சிறப்பாகவே பேட் செய்தோம் என நினைக்கிறேன். இந்த ஆடுகளத்தில் 350 என்பது அடிக்கக்கூடிய ஸ்கோர்தான். இன்னும் இரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைந்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம். ஆனால், டூசென், எனக்கும் தவிர வேறு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். 35 ஓவர்கள் வரை நானும், டூசெனும் பேட் செய்திருக்க வேண்டும். ஆனால், முடியவில்லை. பேட்டிங்கில் நடுவரிசை ஏமாற்றமளித்தது" எனத் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)