You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாதித்த இந்தியா - இந்த வெற்றியின் சிறப்பு என்ன?
ஜாம்பா பந்தில் விராட் கோலி அவுட் ஆன அந்த நொடி, இந்திய அணியின் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத் துடிப்பு ஏகத்துக்கும் எகிறிக் கிடந்திருக்கும்.
ஏனெனில், வரலாறு அப்படி.
21-ம் நூற்றாண்டில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐசிசி தொடர்களில் காலிறுதி, அரை இறுதி அல்லது இறுதி போட்டிகளில் மோதுகின்றன என்றாலே அனல் பறக்கும்.
2003 ஒருநாள் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகட்டும், 2015 உலகக்கோப்பை அரை இறுதி ஆகட்டும், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி ஆகட்டும், 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஆகட்டும், இந்தியாவுக்கு எமனாய் அமைந்தது ஆஸ்திரேலியா தான்.
இந்தியாவின் கோப்பை கனவை நொறுங்கச் செய்யும் முதன்மையான அணியாக ஆஸ்திரேலியா விளங்கியது.
அதே சமயம் 2007 டி20 உலகக்கோப்பை அரை இறுதி மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பை காலிறுதி போட்டிகளில் இந்தியா ஆஸ்திரேலியாவின் கதையை முடித்தது.
இந்த இரண்டிலும் யுவராஜ் சிங் ஆஸ்திரேலியாவை திண்டாடச் செய்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியா தோற்கவில்லை.
இந்தச் சூழலில் தான் விராட் கோலி இன்றைய தினம் ஆட்டமிழந்ததும், மீண்டும் அதே கதையா? எனும் பதற்றம் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும்.
அதுவரை இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு அமோகமாக இருந்த நிலையில், அதன் பின்னர் ஒவ்வொரு பந்தும் திக் திக் என ட்விஸ்ட் ஆக அமைந்தது.
ஆனால், பாண்டியா - கே.எல்.ராகுல் கூட்டணி இந்திய அணியை கரைச் சேர்த்தது. குறிப்பாக பாண்டியா அழுத்தமான சூழலில் சிக்ஸர்களை பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினார்.
முடிவில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபி நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதே இல்லை எனும் பெயரை பெற்றுள்ளது. கடந்த 1998 சாம்பியன்ஸ் டிராபி காலிறுதிக்கு பிறகு மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியில் நாக்அவுட் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்வது இதுவே முதல்முறையாகும்.
இந்த இரண்டிலும் இந்தியாவே வென்றுள்ளது.
முன்னதாக இன்று நடைபெற்ற அரைஇறுதி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. இரண்டாம் பாதியில் ஆடுகளம் மந்தமாகக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்தியாவுக்குச் சேசிங் எளிதாக இருக்கப்போவதில்லை என வர்ணனையாளர்கள் தெரிவித்தனர்.
முதல் சில ஓவர்களில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தினாலும், அதன் பின்னர் டிராவிஸ் ஹெட் அதிரடியை துவக்கினார். மூன்று ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆஸ்திரேலியா விறுவிறுவென ரன்களைச் சேர்த்து எட்டாவது ஓவரில் 50 ரன்களை கடந்தது.
அப்போது வருண் சக்கரவர்த்தியை அழைத்தார் கேப்டன் ரோகித் சர்மா. ஹெட், வருணை சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியாவின் கோடிக்கணக்கணக்கான இதயங்களை நொறுங்கச் செய்பவராக அறியப்பட்ட ஹெட் அவுட் ஆனதும் இந்திய ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.
ஆனால் அதன் பின்னர் ஸ்மித் நங்கூரமிட்டார். அந்தச் சூழலில் இந்திய அணி எதிர்முனையில் இருக்கும் வீரர்களின் விக்கெட்டுகளை பறிக்கத் தொடங்கியது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை.
ஒரு கட்டத்தில் மேக்ஸ்வெல், ஸ்மித் இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது ஆஸ்திரேலியா 250 ரன்களையாவது தாண்டுமா எனும் கேள்வி எழுந்தது. ஆனால் அலெக்ஸ் கேரியின் பொறுப்பான ஆட்டத்தால் 265 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலியா.
சேஸிங்கில் இந்திய அணி 50 ரன்களை குவிப்பதற்கு முன்னதாகவே இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இதில் கேப்டன் ரோகித் சர்மாவும் அடக்கம்.
ஆனால் அதன் பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் விராட் கோலியும் மிகச் சிறப்பாக விளையாடினர். ஷ்ரேயாஸ் குவித்த 45 ரன்கள் மிக முக்கியமானதாக அமைந்தது. அவர் அவுட்டானதும் அதன் பிறகு வந்த வீரர்களும் எந்தவித பதற்றமும் இன்றி விளையாடினர். கோலி 84 ரன்களில் அவுட் ஆனாலும் பாண்டியா மற்றும் ராகுல் அடுத்தடுத்து தனது பொறுப்புகளை சரியாகச் செய்தனர்.
பாண்டியா அவுட் ஆனதும், கே.எல்.ராகுல் சிக்ஸர் அடித்து வெற்றிக் கனியை பறித்தார். 11 பந்துகள் மீதம் வைத்து இலக்கை அடைந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி.
இந்த வெற்றி இந்திய ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல், ஏனெனில் பல காயங்களுக்கு மருந்தாக அமைந்திருக்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)