சுனிதா வில்லியம்ஸ் போல விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்?

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விண்வெளியில் நேரம் செலவிடுவதற்கு உரிய பயிற்சியும் அனுபவமும் அவசியம்

சுனிதா வில்லியம்ஸும், புட்ச் வில்மோரும் எதிர்பாராத விதமாக விண்வெளியில் 9 மாதங்களுக்கும் மேலாக தங்க நேரிட்டு, பின்னர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதை உலகமே வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.

சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் இவ்வளவு காலம் எப்படி இருந்தனர்?

இதற்கு என்ன மாதிரியான பயிற்சி பெற்றார்கள்?

விண்வெளியில் எப்படி இருப்பது என்பது குறித்து விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

நாசாவில் ஒருவர் விண்வெளி வீரராவது எப்படி? என்ன படிக்க வேண்டும்? எப்படி அந்த வாய்ப்பு கிடைக்கும்?

விண்வெளி வீரர் ஆவதற்கான தகுதிகள் என்ன?

மனிதர்களை தாங்கிய விண்வெளி பயணத்துக்கு நாசா விண்வெளி வீரர்களை தேர்வு செய்கிறது. ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்ல, சாதாரண மக்களும் நாசா விண்வெளி வீரராவதற்கு விண்ணப்பிக்கிறார்கள்.

நாசா விண்வெளி வீரர் ஆவதற்கு தேவையான தகுதிகள் என்ன?

விண்ணப்பதாரர் அமெரிக்க குடிமகன்/மகளாக இருக்க வேண்டும்

STEM (Science, Technology, Engineering, Mathematics) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றில் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உயிரியல் அறிவியல், இயற்பியல் அறிவியல் மற்றும் கணினி அறிவியலில் முதுநிலை பட்டங்களையும் நாசா ஏற்றுக்கொள்கிறது. மருத்துவப் பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

விண்வெளி வீரராக விரும்பி நாசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான அனுபவத்தை பெற்றிருப்பது அவசியம். முதுநிலை பட்டம் பெற்ற பிறகு குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் அல்லது ஜெட் விமானத்தின் தலைமை விமானியாக 1,000 மணி நேரம் பணியாற்றிய அனுபவம் அவசியம்.

நீண்ட கால விண்வெளி பயணத்துக்கு விண்ணப்பதாரருக்கு உடற்தகுதி இருக்கிறதா என்பதும் பரிசோதிக்கப்படுகிறது. கண் பார்வை பரிசோதனை மற்றும் ரத்த அழுத்த பரிசோதனை இந்த பரிசோதனைகளில் அடங்கும். விண்ணப்பதாரரின் உயரம் 62 முதல் 75 இஞ்ச் வரையிலும் இருக்க வேண்டும்.

சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்க நேவல் அகாடமியில் இருந்து இயற்பியல் அறிவியலில் இளநிலை பட்டமும், ஃப்ளோரிடா இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியிலிருந்து பொறியியல் மேலாண்மையில் முதுநிலை பட்டமும் பெற்றார்.

1998ஆம் ஆண்டு நாசாவுக்கு தேர்வு செய்யப்பட்டபோது அவர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றி வந்தார்.

அவர் அமெரிக்க கடற்படையில் கடற்படை விமான பிரிவில் பல்வேறு பொறுப்புகளில் 11 ஆண்டுகள் பதவி வகித்ததுடன் 30-க்கும் மேற்பட்ட வகையான விமானங்களை இயக்கியுள்ளார்.

சுனிதா வில்லியம்ஸ்

பட மூலாதாரம், X/NASA

இரண்டு கட்டங்களாக நேர்காணல்

மனிதர்களை தாங்கிய விண்வெளி பயணங்களுக்கு நாசா விண்ணப்பங்களை வரவேற்கிறது. ராணுவத்தின் மூன்று பிரிவுகளும், அமெரிக்க குடிமக்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.

நாசாவில் விண்வெளி வீரர்களை தேர்வு செய்வதற்கு விண்வெளி வீரர்கள் தேர்வு வாரியம்தான் (Astronaut Selection Board) பொறுப்பு. ஒவ்வொரு விண்ணப்பத்தையும் தேர்வு வாரியம் மதிப்பாய்வு செய்கிறது. இந்த மதிப்பாய்வின் போது, விண்ணப்பதாரரின் கல்வித் தகுதி மற்றும் பிற தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.

விண்ணப்பங்களை மதிப்பாய்வு செய்த பிறகு, ஒரு சிலர் முதல் சுற்று நேர்காணலுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நேர்காணல்கள் பொதுவாக அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் ஒரு வாரம் நடத்தப்படும். முதல் சுற்றில் தேர்வானவர்களுக்கு இரண்டாவது சுற்று நேர்காணல் இருக்கும்.

இறுதி நேர்காணலின் போது, நாசா புதிய விண்வெளி வீரர்களை தேர்வு செய்கிறது. தேர்வு செய்யப்பட்டவர்கள் பயிற்சிக்கு அனுப்பப்படுகின்றனர். இந்த பயிற்சி ஜான்சன் விண்வெளி மையத்தில் இரண்டு ஆண்டுகள் தொடரும்.

விண்வெளி வீரர்கள்

பட மூலாதாரம், Getty Images

என்ன மாதிரியான பயிற்சி வழங்கப்படும்?

ஜான்சன் மையத்தில் அடிப்படை விண்வெளி வீரர் பயிற்சி வழங்கப்படுகிறது. விண்வெளியில் நடப்பது எப்படி, விண்வெளி நிலையத்தை இயக்குவது எப்படி, டி-38 ஜெட் விமானத்தை இயக்குவது எப்படி, ரோபோ கரத்தை பயன்படுத்துவது எப்படி என்பது உள்ளிட்ட அனைத்தும் இதில் அடங்கும். இது தவிர நீருக்கடியில் பிழைத்திருப்பது எப்படி என்றும் கற்றுத் தரப்படுகிறது.

இவற்றோடு டைவிங் சோதனை ஒன்று கட்டாயமாக நடத்தப்படுகிறது. இந்த தேர்வில், 25 மீட்டர் நீச்சல் குளத்தில் ஒருவர் மூன்று சுற்று நிறுத்தாமல் நீச்சலடிக்க வேண்டும். அதன் பின்னர் மற்றுமொரு நீச்சல் தேர்வு நடைபெறும். விண்வெளி உடை, டென்னிஸ் காலணிகள் ஆகியவற்றை அணிந்துகொண்டு 35 மீட்டர் நீள நீச்சல் குளத்தில் மூன்று சுற்று நிறுத்தாமல் நீச்சலடிக்க வேண்டும். மூன்று சுற்றுகளையும் நிறுத்தாமல் முடிக்க வேண்டும்.

வளிமண்டல அழுத்தத்தை தாங்கும் வகையில் விண்வெளி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. ஜெட் விமானத்தில் நுண் புவியீர்ப்பை கையாளவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் இந்த பயிற்சி அத்தியாவசியமானது.

இரண்டாம் கட்டத்தில் கணினி அடிப்படையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது. நாசா விண்கலத்தை எப்படி இயக்குவது, வாகனங்களையும் விண்கலங்களையும் எப்படி ஏவுவது என அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். விண்கல அமைப்புகளில் உள்ள குறைபாடுகளை எப்படி தெரிந்து கொள்வது, அவற்றை எப்படி சரி செய்வது என்பதும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

பயிற்சிக்காக விண்வெளி நிலையத்தின் மாதிரி ஒன்றும் ஜான்சன் மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. சமையல், உபகரணங்களை பயன்படுத்துவது, அவற்றை பராமரிப்பது, கேமராக்களை பயன்படுத்துவது மற்றும் பல செயல்பாடுகள் குறித்து முக்கிய தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

அனைத்து பயிற்சிகளையும் முடித்த பிறகு, பயிற்சியில் இருப்பவர்கள் தேர்வுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பயிற்சியில் வெற்றிகரமாக தேறியவர்கள் நாசா விண்வெளி வீரர்களாகின்றனர். மற்றவர்கள் , நாசாவுக்குள் இருக்கும் பிற துறைகளில் பணியாற்ற அனுப்பப்படுகின்றனர்.

இஸ்ரோ விண்வெளி மையம்

பட மூலாதாரம், ISRO

இந்தியாவில்...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) ககன்யான் திட்டத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், மூன்று விண்வெளி வீரர்கள் விண்வெளியில் மூன்று நாட்கள் இருப்பார்கள். அதன் பின் அவர்கள் பூமிக்கு திரும்புவார்கள். இது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் இந்தியாவின் முதல் திட்டம். இந்த திட்டத்தில் பங்கேற்க இந்திய விமானப் படையை சேர்ந்த நான்கு பைலட்டுகளை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது.

இந்திய விமானப் படையை சேர்ந்த குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபஹன்சு சுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

ரஷ்யாவில் 13 மாத பயிற்சிக்கு பிறகு, இந்த நான்கு விண்வெளி வீரர்களும் தற்போது இஸ்ரோ விண்வெளி வீரர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

2035ஆம் ஆண்டுக்குள் தனி விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அது இந்திய விண்வெளி நிலையமாக இருக்கும்.

2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு