You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேரை சுட்டுப் பிடித்தது எப்படி?
எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள சில தகவல்கள் சங்கடம் தரலாம்
கோவையில் கல்லுாரி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் இன்று காலையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
''குற்றவாளிகளைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. குற்றவாளிகள் துடியலுார் அருகேயுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. அவர்களை கைது செய்யச் சென்றபோது காவலர் ஒருவரைத் தாக்கியதால் அவர்களை சுட்டுப்பிடிக்க வேண்டியிருந்தது. இதில் குற்றவாளிகள் கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது.'' என்றார்.
காவல் ஆணையர் விளக்கியபடி, இவ்வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன் மற்றும் குணா என்கிற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
''நவம்பர் 2 இரவு, இவர்கள் மூவரும் மது அருந்திவிட்டு, மறுபடியும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு, சம்பவம் நடந்த பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்த இருவரையும் மிரட்டி, கார் கண்ணாடியை கல்லால் உடைத்து, அதன்பின் அந்த புகார்தாரரை (ஆண் நண்பர்) அரிவாளால் தாக்கி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.'' என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
"இரவு 11:20 மணிக்கு புகார்தாரர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். காவல் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர், ஆயுதப்படை போலீசார் உள்ளிட்ட பலரும் சென்று அந்தப் பகுதி முழுவதும் பெண்ணைத் தேடியுள்ளனர். காலை 4 மணிக்கு, அந்தப் பெண் வெளியில் வந்தபின்பு, அவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்." என்றார் அவர்.
தாமதம் ஏன்?
கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக அந்தப் பெண்ணை மீட்க முடியாதது ஏன் என்பது குறித்து காவல் ஆணையரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''அந்தப் பகுதி மிகவும் பரந்து விரிந்த பகுதி. எந்த விளக்குகளும் இல்லை. கேமராக்களும் இல்லை. அங்கிருந்த சில கேமராக்கள் வேலை செய்யவுமில்லை. 100 போலீசார் லைட்களை வைத்துத் தேடியும் அந்தப் பெண்ணைக் கண்டுபிடிக்க முடியவில்லை.'' என்றார்.
''சம்பவம் நடந்த பகுதியில் சின்னதாக ஒரு சுவர் இருந்துள்ளது. அதற்குப் பின் கும்மிருட்டாக இருந்ததால் அவரைப் பார்க்க முடியாத நிலை இருந்துள்ளது.'' எனத் தெரிவித்தார்.
'ரகசிய தகவல்'
இவ்வழக்கிற்காக அமைக்கப்பட்ட தனிப்படையினர், 200–300 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் ஐந்தாறு கேமரா காட்சிப்பதிவுகளில் 3 பேரும் வந்ததைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துக்குப் பின்பு, அந்த 3 நபர்களின் நடமாட்டம் குறித்து காவல்துறைக்கு ரகசியத் தகவல் வந்ததாக காவல் ஆணையர் தெரிவித்தார். அந்தத் தகவலையும், கேமரா காட்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, இவர்கள்தான் என்று உறுதியானதாகவும் அவர் கூறினார்.
மூவர் மீதும் கூட்டு பாலியல் வன்கொடுமை உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் தெரிவித்தார். இவர்கள் மூவர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவும் பரிசீலிக்கப்படுமென்றும் கூறினார் அவர்.
கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் துப்பாக்கிச் சூட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்றும் ஆணையர் தெரிவித்தார்.
இவர்களுக்கு யாராவது உதவி செய்தனரா என்பது பற்றி விசாரித்து வருவதாக கூறிய காவல் ஆணையர், அவர்களிடம் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் மொபைல் மற்றும் மோதிரம் ஆகியவற்றையும், திருட்டு வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளதாக கூறினார்.
காவல் உதவி செயலி
தமிழக அரசு, ''2 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கிய காவல் உதவி செயலியை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொண்டால், ஆபத்தான நேரங்களில் 100க்கு போன் செய்யத் தேவையில்லை. அந்த செயலியை திறந்து அதிலுள்ள எஸ்ஓஎஸ் பட்டனை அழுத்தினாலே போதும். அதற்கும் முடியாத பட்சத்தில் 3 முறை அந்த போனை ஷேக் செய்தாலே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்று, அடுத்த சில நிமிடங்களில் அங்கே காவல் துறையினர் வந்துவிடுவர்.'' என்று காவல் ஆணையர் சரவணசுந்தர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு