தாய், உடன் பிறந்தவர்களை காப்பாற்ற கொந்தளிப்பான கடலில் 4 கி.மீ. நீந்திய 13 வயது சிறுவன்

12 வயதான போ மற்றும் எட்டு வயதான கிரேஸ் ஆகியோருடன் ஜோன் மற்றும் ஆஸ்டின்

பட மூலாதாரம், ABC News/Briana Shepherd

    • எழுதியவர், ஃப்ளோரா ட்ரூரி
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட தனது தாயையும் இரண்டு உடன்பிறந்தவர்களையும் காப்பாற்ற, மங்கலான வெளிச்சத்தில், கொந்தளிப்பான நீரில் நீந்திச் சென்ற 13 வயது சிறுவனின் மன உறுதி பாராட்டப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை மேற்கு ஆஸ்திரேலியாவின் தெற்கில் உள்ள ஜியோகிராஃப் விரிகுடாவில் ஒரு குடும்பத்தினர் துடுப்புப் படகு சவாரி மற்றும் கயாக்கிங் செய்து கொண்டிருந்தனர், அப்போது பலத்த காற்று அவர்களின் காற்று நிரப்பப்பட்ட படகுகளை திசைதிருப்பியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஆஸ்டின் அப்பெல்பீ என்ற அந்த பதின்ம வயது சிறுவன் உதவி கேட்க கரையை நோக்கி மீண்டும் துடுப்பு அடிக்கத் தொடங்கினார். ஆனால் அவரது கயாக் படகில் தண்ணீர் புகுந்ததால் மீதமிருந்த 4 கிலோமீட்டர் (2 கடல் மைல்கள்) தூரத்தை நீந்தி கடந்தார்.

"இந்த குடும்பத்தினர் காட்டிய துணிச்சல், வலிமையும் அசாதாரணமானது, குறிப்பாக எச்சரிக்கையை எழுப்ப 4 கி.மீ நீந்திய அந்த சிறுவன்," என்று நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழு தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த சிறுவனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார்.

"அவர் முதல் இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட்டுடன் நீந்தினார்," என்று அவர் ஏபிசி நியூஸிடம் கூறினார்.

"அந்த துணிச்சலான சிறுவன் லைஃப் ஜாக்கெட்டுடன் சென்று சேரமுடியாது என்று நினைத்தார், அதனால் அதை கைவிட்டார், அடுத்த இரண்டு மணிநேரம் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் நீந்தினார்."

வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 18:00 மணிக்கு சிறுவன் உதவிக் கோர முடிந்தது.

இது கடற்கரையில் காணாமல் போன சிறுவனின் குடும்பத்தினரை தேடும் பணியைத் தூண்டியது என்று காவல்துறை திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

3 பேர் கண்டுபிடிப்பு

சிறுவனின் 47 வயது தாய், அவரது மற்றொரு மகன் (12), மற்றும் எட்டு வயது மகள் ஆகியோர் 20:30 மணியளவில், கடற்கரையில் சுமார் 14 கி.மீ தொலைவில் ஒரு துடுப்புப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்ததை மீட்பு ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்தனர்.

"ஒரு தன்னார்வ கடல் மீட்புக் கப்பல் அவர்களின் இடத்திற்கு அனுப்பப்பட்டது, மேலும் மூவரும் வெற்றிகரமாக மீட்கப்பட்டு கரைக்குத் திரும்பினர்," என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

கடல் நிலைமைகள் எவ்வளவு விரைவாக மாறக்கூடும் என்பதற்கான முக்கியமான நினைவூட்டலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது என்று ஆய்வாளர் ஜேம்ஸ் பிராட்லி கூறினார்.

"அதிர்ஷ்டவசமாக, மூன்று பேரும் லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர், இது அவர்களின் உயிர்வாழ்வுக்கு பங்களித்தது," என்று அவர் உள்ளூர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

"13 வயது சிறுவனின் செயல்களை எவ்வளவு பாராட்டினாலும் போதாது - அவனது உறுதியும் தைரியமும் இறுதியில் அவனது தாய் மற்றும் உடன்பிறந்தவர்களின் உயிரைக் காப்பாற்றின."

ஜியோகிராஃப் பே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அந்தக் குடும்பம் மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜியோகிராஃப் பே-யில் ஒரு விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்தனர்.

சிறுவன் கூறுவது என்ன?

துணிச்சலோடு குடும்பத்தை காப்பாற்றிய சிறுவன் பிபிசியிடம் உரையாடியபோது… "நான் ஒரு ஹீரோ என்று நினைக்கவில்லை - நான் என்ன செய்யவேண்டுமோ அதை செய்தேன்" என்றார்.

இரண்டு துடுப்புப் பலகைகளில் ஒட்டிக்கொண்டு தண்ணீரில் விட்டுச் சென்ற நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்டின் அப்பெல்பீ இறுதியாக கரையை அடைந்தபோது, அவரது தாயார் ஜோன், சகோதரர் பியூ மற்றும் சகோதரி கிரேஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா என்பது அவருக்குத் தெரியாது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு கரையிலிருந்து பல மைல்கள் தூரத்தில் கடலுக்குள், அலைகள் மேலும் பெரிதாகிக் கொண்டிருந்தன, வெளிச்சம் மங்கத் தொடங்கியது. அந்த நேரத்தில் தனது மகனுக்கு என்ன ஆனதோ என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது.

சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜோன் இறுதியாக மீட்புப் படகைக் கண்ட பிறகு, தனது மகன் பாதுகாப்பாக இருப்பதை அவர் அறிந்தார்.

கடற்கரையில் ஒரு குடும்ப நாளாகத் தொடங்கிய இந்த நிகழ்வு, ஜோனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 10 மணி நேரக் கடினமான சோதனையாக முடிந்தது.

"ஆஸ்டின் வெற்றி பெறவில்லை என்று நான் கருதினேன்," என்று 47 வயதான ஜோன் பிபிசியிடம் கூறினார்.

'ஒரு கடினமான போர்'

பின்னர் அந்தக் குடும்பம் பெர்த்தில் உள்ள வீட்டிற்கு திரும்பவிருந்தது.

நீரில் இரண்டு துடுப்புப் பலகைகள் மற்றும் ஒரு கயாக் படகுடன் "கொஞ்சம் வேடிக்கையாக" இருந்ததாக ஜோன் நினைவு கூர்ந்தார்..

''காற்று வேகமாக வீசத் தொடங்கியது. அங்கிருந்து எல்லாம் மாறிவிட்டது. நாங்கள் துடுப்புகளை இழந்தோம், மேலும் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டோம்''

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்டலப் கடற்கரையிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்வதைக் கண்ட ஜோன், தான் ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார் - ஆனால் அவரால் 12 வயது பியூவையும் எட்டு வயது கிரேஸையும் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை.

"நாங்கள் கடற்கரையிலிருந்து அவ்வளவு தொலைவில் இல்லை என்று தோன்றியதால், உதவி பெற முயற்சிப்பதற்காக ஆஸ்டினை அனுப்பினோம்," என்று அவர் கூறினார்.

ஆஸ்டின் கயாக்கை எடுத்துக் கொண்டார், ஆனால் அது மோசமாக சேதமடைந்து ஏற்கனவே தண்ணீரில் மூழ்கிவிட்டதை யாரும் உணரவில்லை.

"அது கவிழ்ந்து போக ஆரம்பித்தது, பின்னர் நான் ஒரு துடுப்பை இழந்தேன், நான் சிக்கலில் இருப்பதை அறிந்தேன்," என்று ஆஸ்டின் நினைவு கூர்ந்தார்.

"நான் என் கையால் துடுப்பு போட ஆரம்பித்தேன்."

கவிழ்ந்த கயாக்கைப் பிடித்துக் கொண்டு, "தண்ணீரில் ஏதோ ஒன்றைப் பார்த்தேன்" என்று கூறும் ஆஸ்டின், ஏதாவது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தார்.

அவர் தன்னுடைய பார்வையிலிருந்து தன்னுடைய குடும்பத்தினரை இழந்திருந்தார், அவர்களும் அவரைப் பார்க்காமல் போய்விட்டனர்.

ஜோனும் குழந்தைகளும் கடலில் அடித்துச் செல்லப்பட்டபோது, அலைகள் அதிகமாக பெரிதாகிக் கொண்டே போனதால், போர்டுகளில் நிலைத்து நிற்பது மிகவும் கடினமானதாக மாறியது.

அவர்கள் அனைவரும் உயிர்காப்பு ஜாக்கெட்டுகளை அணிந்திருந்தனர். ஆனால் அவர்களிடம் உணவும் நீரும் எதுவும் இல்லை.

இதற்கிடையில், ஆஸ்டின் கரைக்கு செல்ல 4 கிமீ (2 கடல் மைல்கள்) நீந்தத் தொடங்கினார், சிறிது நேரத்திற்குப் பிறகு அது அவருக்கு உதவாததால் தனது சொந்த லைஃப் ஜாக்கெட்டைக் கைவிட்டார்.

அடுத்த இரண்டு மணி நேரம் முழுவதும், பிரார்த்தனை, கிறிஸ்தவ பாடல்கள் மற்றும் "மகிழ்ச்சியான எண்ணங்கள்" தான் "மிகவும் பயந்த" 13 வயது சிறுவனை தொடர்ந்து உற்சாகப்படுத்தியது.

"நான் அம்மா, பியூ மற்றும் கிரேஸைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். என் நண்பர்கள் மற்றும் என் காதலியைப் பற்றியும் யோசித்துக்கொண்டிருந்தேன் - எனக்கு உண்மையிலேயே நல்ல நண்பர்கள் கூட்டம் இருக்கிறது," என்று அவர் கூறினார்.

"நான் தரையில் விழுந்தபோது, நான் இப்போது எப்படி நிலத்தில் இருக்கிறேன் என்று நினைத்தேன் - இது ஒரு கனவா?"

குடும்பத்தை பற்றி அவருக்கு தோன்றியது "இன்னும் அங்கே உயிருடன் இருக்கலாம் - நான் அவர்களைக் காப்பாற்றச் செல்ல வேண்டும்".

உள்ளூர் நேரப்படி சுமார் 18:00 மணி (GMT 10:00) ஆகிவிட்டது, கடைசியாக அவர் கரையில் இருந்த தாயின் பையை எடுத்து உதவிக்கு அழைத்தார்.

இந்த அழைப்பு ஒரு பெரிய தேடலைத் தூண்டியது என்று போலீசார் திங்களன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

அழைப்பு விடுத்த பிறகு மயங்கிப் போன ஆஸ்டின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தனது தந்தையை அழைத்தார்.

பின்னர், சில நிமிடங்கள் கழித்து, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. மருத்துவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்துக்கொண்டிருந்தனர்.

"அது என்னால் ஒருபோதும் மறக்க முடியாத தருணம்" என்று ஆஸ்டின் கூறினார்.

கடலின் நடுவே, ஜோன் தனது இளைய குழந்தைகளைப் பிடித்துக் கொள்ளப் போராடிக் கொண்டிருந்தார். அவர்கள் குளிரால் நடுங்கிக் கொண்டிருந்தனர், அதற்குள் இருட்டும் முழுமையாக சூழ்ந்துவிட்டது. ஆஸ்டினுக்கு ஏதோ மோசமானது நடந்திருக்கலாம் என்ற அச்சம் தாய்க்கு ஏற்பட்டது.

படகு நெருங்கி வருவதைக் கண்டதும் ஜோனால் நிம்மதியாக இருக்கக்கூட முடியவில்லை, குழந்தைகளை காப்பாற்ற தீவிரமாக போராடிக்கொண்டிருந்தார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆஸ்டின் பள்ளிக்குத் திரும்பி வந்திருக்கிறார் - அவர் கால்கள் மிகவும் வலித்திருந்ததால், ஊன்றுகோலில்தான் இருக்கிறார்.

மக்கள் தொடர்ந்து அவரை ஒரு ஹீரோ என்று கூறினாலும், அவர் தன்னை அப்படியாகக் கருதவில்லை. அது ஒரு "கடினமான போர்" என்று அவர் ஒப்புக்கொண்டார்.

இருப்பினும், மற்றவர்கள் ஆஸ்டினைப் புகழ்ந்து பேசுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேச்சுரலிஸ்ட் தன்னார்வ கடல் மீட்புக் குழுவின் கமாண்டர் பால் பிரெஸ்லேண்ட், அந்த இளைஞனின் முயற்சிகளை "சூப்பர் ஹ்யூமன்" என்று விவரித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு