திருப்பரங்குன்றம் மலை யாருக்கு சொந்தம்? சமணர் வழக்கில் ஐகோர்ட் கருத்து - இன்றைய டாப்5 செய்திகள்

இன்றைய தினம் (25/03/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை பார்க்கலாம்.

"அனைத்து கடவுள்களும் சரியாகவே இருக்கின்றனர். சில மனிதர்கள் தான் சரியாக இருப்பதில்லை" என திருப்பரங்குன்றம் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளதாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான செய்தியில், "மதுரை திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கக் கோரி விழுப்புரம் ஸ்வஸ்தி ஸ்ரீ லட்சுமி சேன சுவாமிகள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "திருப்பரங்குன்றம் மலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மலையாகும். இந்த மலை சமணர் மலையாகும். எனவே திருப்பரங்குன்றம் மலையை சமணர் குன்று என அறிவிக்கவும், மலையில் சமண கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ளத் தடை விதித்தும், திருப்பரங்குன்றம் மலையை மீட்டு பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பான மற்ற மனுக்களும் நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வில் (மார்ச் 24) விசாரணைக்கு வந்தது.மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல் ஆணையர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் "திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள அருள்மிகு 18-ம் படி கருப்பசாமி திருக்கோயில், பாண்டி முனீஸ்வரர் திருக்கோயில், மலையாண்டி கருப்பசாமி திருக்கோயில் மற்றும் முனியப்பன் கோயில்களில் கால்நடைகளை பலியிடும் வழக்கம் உள்ளது.

திருப்பரங்குன்றம் மலையின் வடக்கு பகுதியில் முருகன் கோயிலும், தென்பகுதியில் சமண அடையாளங்களும், இடைப்பட்ட பகுதியில் தர்காவும் அமைந்துள்ளன. இந்து மக்களால் 'ஸ்கந்தமலை' என்றும், இஸ்லாமியர்களால் 'சிக்கந்தர் மலை' என்றும், சமண சமயத்தவர்களால் 'சமணர் குன்று' என்றும், உள்ளூர் மக்களால் 'திருப்பரங்குன்றம் மலை' என்றும் அப்பகுதி அழைக்கப்படுகிறது. தமிழக அரசு அனைத்து மதத்தினருக்கும் இடையே ஒற்றுமையை பேண விரும்புகிறது.

அதன் அடிப்படையில் ஜனவரி 30-ம் தேதி இரு சமயத்தினர் இடையே அமைதிக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், "தர்காவிற்கு வருபவர்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் பட்சத்தில் ஆடு, கோழிகளை பலியிட்டு சமைத்து அனைவருக்கும் பரிமாறி சாப்பிடுவர். திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த இரு சமூகத்தினரும் ஏற்கெனவே உள்ள வழிபாட்டு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்றவும், தங்களுடைய இந்த நடைமுறையில் வெளிநபர்கள் யாரும் தலையிட்டு குழப்பம் ஏற்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம்" என ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.

அதோடு 1991-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வழிபாட்டு தலங்களுக்கான சிறப்பு விதிகளின்படி 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி ஒரு வழிபாட்டு தலம் எப்படி இருந்ததோ, அதே முறையிலேயே பராமரிக்கப்பட வேண்டும்," என்று பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அரசு தரப்பில், "திருப்பரங்குன்றம் மலைப் பகுதியில் எழுந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுவிட்டது" என தெரிவிக்கப்பட்டது. மத்திய தொல்லியல் துறை, "திருப்பரங்குன்றம் மலை தொல்லியல் துறைக்கு சொந்தமானது. இதனால் திருப்பரங்குன்றம் மலையில் எதைச் செய்தாலும் மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி பெற வேண்டும். பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும்" எனக் கூறப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், "இதுதொடர்பாக 1923-ல் மதுரை முதன்மை அமர்வு வழங்கிய உத்தரவை பிரிட்டிஷ் கவுன்சில் உறுதி செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி்கள், "கடவுள்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கிறார்கள். சில மனிதர்கள் தான் சரியாக இல்லை" எனத் தெரிவித்து, தொல்லியல் துறை தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யவும், மனுதாரர்கள் தரப்பில் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான உத்தரவுகளைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு விசாரணையை ஏப்.7-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்." என்று தி இந்து செய்தி குறிப்பிடுகிறது.

தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

தமிழ்நாட்டில் சுங்கச்சாவடி கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்," தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் சென்னையை அடுத்த வானகரம் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது.

தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை, இரு கட்டங்களாக, சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில், வானகரம், செங்கல்பட்டு பரனூர், திண்டிவனம் ஆத்தூர், சூரப்பட்டு, பட்டறைப்பெரும்புதூர் உள்ளிட்ட 40 சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளின் சுங்கக்கட்டணம் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படும். ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படவுள்ள சுங்கக்கட்டணத்தின் அளவு குறைந்தபட்சம் ரூ. 5 முதல் ரூ. 75 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது." என குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்த கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் லாரி உரிமையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தினமணி செய்தி குறிப்பிடுகிறது.

காவலர் கொன்று எரிக்கப்பட்ட வழக்கு - ஒருவரை சுட்டுப்பிடித்த காவல்துறை

மதுரை ஈச்சனேரியில் காவலர் எரித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஒருவரை போலீஸ் சுட்டுப்பிடித்ததாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில்," கடந்த 18ந்தேதி, மதுரை விமான நிலைய சுற்றுச்சாலையில் உள்ள புதுக்குளம் கண்மாய் அருகே முகம் கருகிய நிலையில் தனிப்படைக் காவலர் மலையரசன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து துப்புதுலக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அர்விந்த் உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப் பட்டன.

மலையரசன் கடைசியாக மதுரை வந்த போது, அவனியாபுரம் வல்லனேந்தல்புரம் பகுதியை சேர்ந்த மூவேந்திரன் (35) என்பவரின் ஆட்டோவில் பயணம் செய்தது கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் மூவேந்திரன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன் பேரில் மூவேந்திரனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீசாரின் பிடியில் இருந்து தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டனர்.

இதில் காயமடைந்து அங்கேயே சுருண்டு விழுந்த, மூவேந்திரனை போலீசார் மீட்டு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மலையரசனின் செல்போனிலிருந்து மூவேந்திரன் 80 ஆயிரம் ரூபாயை தனது நண்பர்களுக்கு மாற்றியிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர் என்றும், மலையரசன், மூவேந்திரன் மற்றும் சிவா என்ற உடற்கல்வி ஆசிரியர் ஆகிய மூவரும் சேர்ந்து மது அருந்திய போது மலையரசனை மூவேந்திரன் கம்பியால் தாக்கிக் கொன்றதாகவும், பின்னர் முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு சடலத்தை ஈச்சனேரி பகுதியில் முவேந்திரன் வீசிச் சென்றிருக்கிறார் எனவும் போலீசார் கூறினர் என தினத்தந்தி செய்தி குறிப்பிட்டுள்ளது.

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட தமிழக பொறியாளர்கள் - மீட்க கோரிக்கை

ஆப்பிரிக்க கடற்பகுதியில் இரண்டு தமிழ்நாட்டினர் உட்பட 7 இந்திய மாலுமிகள் கடற்கொள்ளையர்களால் மார்ச் 17ம் தேதி கடத்தப்பட்டனர். இவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில், " தேனி மாவட்டத்தைச் சேர்ந்த லக்ஷமண பிரதீப் முருகன் என்பவர் மேரிடெக் டேங்கர் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிட்டட் நிறுவனத்தில் செகண்ட் ஆஃபீசராக பணியாற்றி வருகிறார். அந்நிறுவனத்தின் பிட்டு ரிவர் (Bitu River) என்ற பெயர் கொண்ட கப்பலில், பிரதீப் முருகன் மேற்கு ஆப்பிரிக்க நகரான லோமிலிருந்து கேமரூன் நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.

அவருடன் கரூரைச் சேர்ந்த சதீஷ் குமார் செல்வராஜ், பிகாரைச் சேர்ந்த சந்தீப்குமார் சிங், மினிக்காய் தீவுகளைச் சேர்ந்த ஆசிஃப் அலி, கேரளாவைச் சேர்ந்த ராஜீந்திரன் பார்க்கவன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இருவரும் பயணித்தனர்.

மார்ச் 17ம் தேதி, இரவு 7.45 மணியளவில் மேற்கு ஆப்பிரிக்க கடற்பகுதியில் பயணித்த போது, கடுமையான ஆயுதங்களுடன் வந்த கடற்கொள்ளையர்களால் கப்பல் தாக்கப்பட்டது." என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முருகனின் சகோதரர் ராம் பிரவீண், தி இந்துவிடம் பேசிய போது, "இந்தியர்கள் உட்பட 10 கப்பல் ஊழியர்களை கொள்ளையர்கள் பிடித்து அடைத்து வைத்துள்ளனர். தப்ப முயற்சித்தால் கொன்று விடுவதாக எச்சரித்துள்ளனர். கப்பல் ஊழியர்களின் தங்க நகைகள், மொபைல் போன்கள், லேப்டாப் போன்றவற்றையும் அபகரித்துக் கொண்டுள்ளனர்.இதற்கு அடுத்த நாள் கப்பல் நிறுவனம் எங்களுக்கு தகவல் அளித்தது. மீட்புப் பணி குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை" என்று கூறியதாகவும் அந்த செய்தி கூறுகிறது.

மத்திய அரசு தூதரக ரீதியாக தலையிட்டு கப்பல் பணியாளர்களை மீட்க வேண்டும் என்று குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

பொறுப்புக்கூறலை நோக்கிய நடவடிக்கை - பிரிட்டன் தடைகள் பற்றி கனடா அமைச்சர்

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி வரவேற்றுள்ளதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது என்று அவர் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சரின் சமூக ஊடக பதிவில், "இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன். இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது. 2023 இல் கனடா மகிந்த ராஜபக்ச கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும்,சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும்." என்று கூறப்பட்டிருப்பதாக வீரகேசரி செய்தி கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு