You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
குகேஷ் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற தருணம் - புகைப்படத் தொகுப்பு
தமிழக வீரர் குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். சீனாவை சேர்ந்த டிங் லிரேனை வீழ்த்தி, 18 வயதான குகேஷ், மிகக் குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் ஆகி வரலாறு படைத்துள்ளார்.
உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது. நடப்பு சாம்பியனான டிங் லிரேனை எதிர்த்து இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவரான 18 வயது குகேஷ் தொம்மராஜு விளையாடினார்.
இருவருக்கும் இடையில் 14 சுற்றுகள் நடைபெற்றன. ஆரம்பம் முதலே இருவருக்கும் மிகவும் சவாலான போட்டி நிலவியது.
முதலில் சில சுற்றுகளில் குகேஷ் முன்னிலை வகித்தார். அதன் பின் சீனாவை சேர்ந்த 32 வயதான டிங் லிரேன் தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள திறம்பட விளையாடினார். ஒன்பதாவது சுற்றின் முடிவில், இருவரும் சமநிலையில் இருந்தனர்.
அதன் பிறகு ஒவ்வொரு சுற்றிலும் இருவருக்கும் சமமான வாய்ப்புகளும் சமமான சறுக்கல்களும் இருந்தன. ஆனால் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் ஆடினர்.
பத்தாவது சுற்றின் இறுதியிலும் இருவரும் சமநிலையில் இருந்தனர். 11வது சுற்றில் குகேஷ் சிறப்பாக ஆடி, ஆட்டத்தைத் தன்வசப்படுத்தி இருந்தார்.
ஒருவேளை 12வது சுற்றையும் குகேஷ் கைப்பற்றியிருந்தால் அப்போதே அவர் உலக சாம்பியன் பட்டத்தை வென்றது உறுதியாகி இருக்கும்.
ஆனால் டிங் லிரேன் மிகவும் சாதுரியமாக விளையாடி அந்தச் சுற்றைத் தன்வசப்படுத்தினார்.
டிங் லிரேனை நெருக்கடிக்கு ஆளாக்கும் போதுதான் அவர் எந்தளவுக்கு திறன் பெற்றவர் என்பது தெரிகிறது என்று இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றாற்போல், 12வது சுற்றில் ஒரு சவாலான ஆட்டத்தைக் கொடுத்து, தனக்கான புள்ளிகளை அதிகரித்துக் கொண்டார் அவர்.
டிங் 12வது சுற்றில் முன்னேறியதால் அடுத்த சுற்றில் ஆட்டத்தை உலகின் செஸ் ரசிகர்கள் அனைவரும் உற்று நோக்கினர். ஆனால் அந்தச் சுற்று ட்ராவில் முடிவடைந்தது.
போட்டியின் 13வது ஆட்டத்தின் முடிவில் குகேஷ் மற்றும் லிரேன் தலா 6.5 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.
இறுதியாக 14வது சுற்றின்போது, அது ட்ராவில் முடிவடையும் என்று பலர் கணித்தனர், ஆனால் குகேஷ் இறுதிவரை தொடர்ந்து உறுதியாக விளையாடி வெற்றி பெற்றார்.
மேலும் இந்தப் போட்டியின் மற்றொரு சிறப்பு, இதில் பங்குபெற்ற இருவருமே ஆசியாவை சேர்ந்த வீரர்கள். இறுதிப் போட்டியில் ஆசிய வீரர்கள் மட்டுமே மோதிக் கொள்ளும் முதல் செஸ் சாம்பியன்ஷிப் இதுதான்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)