ஆர். வைஷாலி: சரியாகக் காய் நகர்த்தும் சதுரங்க ராணி

சென்னையைச் சேர்ந்த பெண் கிராண்ட் மாஸ்டரான ஆர். வைஷாலி நிலையாக தன் சதுரங்க விளையாட்டில் முன்னேறிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஒர் உலக சாம்பியனைக் கூட தோற்கடித்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வைஷாலிக்கு 14 வயது இருக்கும் போது மும்பையில் நடந்த தேசிய பெண்கள் சேலஞ்சர்ஸ் போட்டியில் வெற்றி பெற்றார். பல இளையோர்களுக்கான போட்டியில் வைஷாலி வெற்றி பெற்றிருந்தாலும், அந்தப் போட்டியில் வெற்றி பெற்றது தான் அவருக்கு மிகப் பெரிய மைல் கல்லாக அமைந்தது. அந்த வெற்றிக்குப் பிறகு அவர் எதையும் திரும்பிப் பார்க்கவில்லை, அவரை உலகம் அடையாளம் கண்டு கொள்ளத் தொடங்கியது.

கடந்த 2017-ம் ஆண்டு ஏஷியன் இண்டிவிஜுவல் பிலிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்கு, பிரதமர் நரேந்திர மோதி வைஷாலியைப் பாராட்டினார். கடந்த 2018-ம் ஆண்டு வைஷாலி இந்தியாவின் பெண் கிராண்ட் மாஸ்டரான போது, இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் அவரைப் பாராட்டி ட்விட் செய்திருந்தார்.

சதுரங்கம் வைஷாலியின் குடும்ப ரத்தத்திலேயே ஓடிக் கொண்டிருக்கிறது. வைஷாலியின் 15 வயது இளைய சகோதரர் பிரக்னானந்தா உலகின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர். 19 வயதான வைஷாலி சதுரங்கத்தில் ஒரு பெண் கிராண்ட் மாஸ்டர்.

விரைவில் தன் சகோதரரை பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் ஒரு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்கிற ஆவலோடு இருக்கிறார். இந்தியாவின் சதுரங்கத் தலைநகரமான சென்னையில் வளரும் இவர்கள், மிக இளம் வயதிலேயே சதுரங்கத்தை கையில் எடுத்துவிட்டார்கள்.

வைஷாலி கடந்த 2012-ம் ஆண்டிலேயே 11 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப், 13 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப்களில் வெற்றி பெற்றார். அதே ஆண்டு, கொலும்புவில் நடந்த ஆசிய அளவிலான 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியிலும் வெற்றி பெற்றார். ஸ்லோவேனியாவில் 12 வயதுக்குட்பட்ட யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் வெற்றி பெற்றார்.

ஆரம்ப நாட்கள்

சென்னையில் சதுரங்கத்துக்கு போதுமான வசதிகள் இருந்தாலும், ஆரம்ப நாட்களில் சதுரங்க பயிற்சி மேற்கொள்ளவும், பயணச் செலவுகள் போன்றவைகளால் நிதி நெருக்கடிகளை எதிர் கொண்டதாகக் கூறுகிறார்.

வைஷாலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சி மேற்கொள்ள அவரிடம் கணிணி இல்லை. சதுரங்கத்தின் அடிப்படை அறிவைக் கற்றுக் கொள்ள பெரும்பாலும் புத்தகங்களைத் தான் நம்பி இருக்க வேண்டி இருந்தது.

தொடக்க நாட்களில் மேம்படுத்தப்பட்ட சதுரங்க மென்பொருள் மற்றும் சாதனங்களில் தன்னை பட்டை தீட்டிக் கொள்ள முடியவில்லை.

2012-ம் ஆண்டு உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு தான் வைஷாலிக்கு ஸ்பான்சர்கள் மூலம் ஒரு மடிக்கணிணி கிடைத்தது. அது தான் வைஷாலியை ஒரு நல்ல சதுரங்க வீராங்கனையாக மேம்படுத்தியது.

தானும் தனது சகோதரரும் ஸ்பான்சர்களை ஈர்க்கத் தொடங்கினாலும், தனது பெற்றோர்கள் பக்க பலமாக இருந்ததாகக் கூறுகிறார் வைஷாலி. வைஷாலியின் தந்தை பண ரீதியாகவும், பயிற்சிக்கு அழைத்துச் செல்வது போன்றவைகளில் உதவினால், தாய் போட்டி நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்றார்.

உலகின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் வீட்டில் இருப்பது, தனக்கு காரியங்களை எளிதாக்கியது என்கிறார் வைஷாலி.

வைஷாலியும் அவரது சகோதரரும் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதில்லை என்றாலும், அவர்கள் இருவரும் இணைந்து சதுரங்கத்தின் நுணுக்கங்களை விவாதிப்பார்கள். வைஷாலியின் சகோதரர், பல நுணுக்கங்களைக் கூறி தன் மூத்த சகோதரி போட்டிகளுக்கு தயாராக உதவுவார்.

முக்கிய போட்டிகள்

கடந்த ஜூன் 2020-ல் FIDE chess.com நடத்திய ஸ்பீட் செஸ் சாம்பியன்ஷிப்ஸ் போட்டியில், முன்னாள் உலக சாம்பியனான ஆன்டொனிடா ஸ்டெஃபனோவா-வைத் தோற்கடித்து, ஒட்டுமொத்த சதுரங்க உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

போட்டிகளில் தொடர்ந்து கிடைத்த வெற்றி மற்றும் பாராட்டுகள் தன்னை ஊக்கப்படுத்தியதாகவும், தன்னை இன்னும் கடினமாக உழைக்க வைத்ததாகவும் கூறுகிறார் வைஷாலி.

பெண்களுக்கான இண்டர்நேஷனல் மாஸ்டர் போட்டிகள் தான் தன் இலக்கு என்றும், அதன் பிறகு கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பது இலக்கு எனவும் கூறுகிறார் இந்த சென்னை வீராங்கனை.

தன் சொந்த உழைப்பில் இத்தனை பெரிய உயரங்களைத் தொட்டிருக்கும் வைஷாலி, பல பெண் வீராங்கனைகள் பெரிதாக சாதிக்க முடியாமல் போவதற்கு, அவர்கள் விளையாடும் காலத்தில் பல்வேறு கட்டங்களில் பாகுபாடுகள் காட்டப்படுவது தான் காரணம் என்கிறார்.

ஆண்கள் விளையாட்டில் சாதிப்பதற்கு இணையாக, பெண்கள் விளையாட்டில் சாதிப்பது பார்க்கப்படுவதில்லை. அதற்கு சிறந்த உதாரணம் ஆண் & பெண்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை என சமத்துவம் பேசுகிறார் இந்த சதுரங்க ராணி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :