மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: மகுடம் யாருக்கு? இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - ஸ்பெயின்

பட மூலாதாரம், Getty Images
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இன்று நடைபெறுகிறது.
இதில் இங்கிலாந்து - ஸ்பெயின் அணிகள் விளையாடவுள்ள நிலையில், இரு அணிகளுமே தங்களது முதல் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற வேட்கையுடன் உள்ளன.
முன்னதாக அரையிறுதியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் ஸ்பெயின் அணி ஸ்விடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தின.
இதுவரை நடைபெற்ற உலகக்கோப்பை மகளிர் கால்பந்து தொடர்களில் அமெரிக்கா 4 முறையும் ஜெர்மனி 2 முறையும் நார்வே மற்றும் ஜப்பான் அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளன.
இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய இரு அணிகளுமே முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 3.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
நடப்பு தொடரில் தோல்வியை சந்திக்காத இங்கிலாந்து

பட மூலாதாரம், Getty Images
இங்கிலாந்து அணி உலகத் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி, 2023 மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் விளையாடியுள்ள 6 போட்டிகளிலும் வெற்றியை பெற்றுள்ளது.
உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே இங்கிலாந்து அணியின் லேயா வில்லியம்சன், பெத் மீட் மற்றும் ஃபிரான் கிர்பி ஆகிய முக்கிய வீராங்கனைகள் காயம் காரணமாக தொடரில் பங்கேற்காத நிலை ஏற்பட்டது.
தொடர் தொடங்கிய பின்னரும், கெய்ரா வால்ஷ், லாரன் ஜேம்ஸ் ஆகியோர் காயம் காரணமாக இடைநீக்கம் காரணமாகவும் போட்டியில் இருந்து வெளியேறினர்.
ஆனாலும், எவ்வித அழுத்தத்திற்கும் உட்படாத இங்கிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
மறுபுறம், உலகக் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி லீக் ஆட்டத்தில் ஜப்பானுக்கு எதிரான போட்டியில் மட்டுமே தோல்வியைக் கண்டுள்ளது.
பதிலடியா? தொடர் வெற்றியா?

பட மூலாதாரம், Getty Images
கடந்த ஆண்டு பிரிட்டனில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி ஜெர்மனியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியிருந்தது.
இந்தப் போட்டியிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று வரலாறு படைக்குமா என அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இங்கிலாந்து ஆடவர் அணி கடந்த 1966ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை வென்றிருந்தது. அதன் பின்னர் ஆடவர், மகளிர் அணிகள் இரண்டுமே எந்த சர்வதேச தொடரையும் வென்றது இல்லை.
இன்றைய போட்டியில் வெல்வதன் மூலம் இதையும் இங்கிலாந்து அணி மாற்ற முயற்சி செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் 3 ஆட்டங்களில் 2இல் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறிய ஸ்பெயின் மகளிர் அணி, 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது.
எனவே இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் தோல்விக்கு ஸ்பெயின் பதிலடி கொடுக்குமா என்ற ஆவல் அந்நாட்டு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
நேருக்கு நேர் மோதியதில் யாருக்கு வெற்றி அதிகம்?
மகளிர் உலகக்கோப்பை தொடரில் இதுவரை இங்கிலாந்து- ஸ்பெயின் அணிகள் நேருக்கு நேர் மோதியது இல்லை.
அதேவேளையில், ஸ்பெயின் கால்பந்து அணியுடன் விளையாடிய அனைத்து விதமான போட்டிகளையும் பார்க்கும்போது 13 ஆட்டங்களில் 2இல் மட்டுமே (7 வெற்றி, 4 டிரா) இங்கிலாந்து தோல்வி அடைந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












