You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமெரிக்க அரசியலில் இந்திய வம்சாவளியினர் எழுச்சி பெற்றது எப்படி?
- எழுதியவர், திவ்யா ஆர்யா
- பதவி, பிபிசி செய்தியாளர்
இந்திய அமெரிக்கர் ஒருவர் அதிபர் பதவிக்குப் போட்டியிடுவதையும், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை இருப்பதையும் பார்க்கும்போது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு இருக்கும் சிறந்த பிரதிநிதித்துவம் மற்றும் செல்வாக்கு இது என்று சொல்லலாம்.
அவர்கள் இந்த நிலைக்கு வளர்ந்தது எப்படி என்பதை பிபிசியின் திவ்யா ஆர்யா வாஷிங்டனில் இருந்து நமக்கு விளக்குகிறார்.
"நான் 16 வயதில் அமெரிக்காவிற்கு வந்தபோது, என் பாக்கெட்டில் பணம் இருக்கவில்லை. ஆனால் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய அமெரிக்க பெண்மணியாக நான் ஆனேன்."
இப்படிக் கூறிய, அமெரிக்க நாடாளுமன்றத்தின் பெண் பிரதிநிதி பிரமீளா ஜெயபால் அடுத்து கூறிய வார்த்தைகள் பலத்த கரகோஷத்தை எழுப்பியது.
"நான் முதலாமவள், ஆனால் கண்டிப்பாக நான் கடைசி நபர் அல்ல."
‘இந்திய அமெரிக்கப் பெண்களுக்கு ஆதரவு கிடைப்பது எளிதல்ல’
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் எட்டு ஆண்டுகள் உறுப்பினராகப் பதவி வகித்துள்ள ஜெயபால் இப்போது ஐந்தாவது முறையாகப் போட்டியிடுகிறார்.
அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் அதிபர் பதவிக்காகப் போட்டியிடுகிறார். இருப்பினும் ஜெயபால் போன்ற இந்திய அமெரிக்க பெண்களுக்கு ஆதரவைத் திரட்டுவது எளிதான காரியம் அல்ல.
"நான் முதன்முதலில் இந்தப் பதவிக்குப் போட்டியிட்டபோது இந்திய அமெரிக்க சமூகத்தில் உள்ள பலரை அழைத்தேன். சமூகத்தைச் சேர்ந்த நிறைய ஆண்களிடம் பண பலம் இருந்தது. ஆனால் நான் அவர்களை அழைத்துப் பேசியபோது, 'ஓ, நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை' என்று சொல்வார்கள்,” என்று பிரமீளா ஜெயபால் தெரிவித்தார்.
"எனவே ஒரு மாற்றம் வர வேண்டும். ஏனென்றால் இறுதியில் நாம் வித்தியாசமான அனுபவத்துடன் வரும்போது கொள்கை சிறப்பாக இருக்கும்."
இருப்பினும் இது பெண்களுக்கு மட்டுமே நடக்கும் என்பது இல்லை. கடந்த பத்து ஆண்டுகளாகத்தான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அமெரிக்க அரசியலில் தடம் பதிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஏன் இவ்வளவு காலம் ஆனது?
முதன்முதலில் 1957இல் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தலிப் சிங் சாந்த் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை உறுப்பினரானார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுக் கட்சியின் பாபி ஜிண்டல் அவரைப் பின்தொடர்ந்தார். அதன்பிறகு, பல ஜனநாயகக் கட்சியினர் அரசியலில் நுழைந்துள்ளனர் - அமி பெரா, பிரமீளா ஜெயபால், ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, கமலா ஹாரிஸ் மற்றும் ஸ்ரீதானேதர்.
ஆனால் இதற்கு இவ்வளவு காலம் ஆனது ஏன்?
பிரதிநிதிகள் சபையில் மிக நீண்ட காலம் பதவி வகித்த இந்திய அமெரிக்கரான அமி பெரா, இந்திய புலம்பெயர்ந்த சமூகம் இன்னும் இளமையாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார்.
"நான் இங்கு அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தேன், அப்போது அது மிகவும் சிறிய புலம்பெயர்ந்த சமூகமாக இருந்தது. நாடு முழுவதிலும் சுமார் 10,000 பேர் இருந்திருக்கலாம். இன்று நீங்கள் பார்ப்பது இங்கு பிறந்து வளர்ந்த ஒரு புதிய தலைமுறையை. நாங்கள் மருத்துவத்திலும் தொழில்நுட்பத்திலும் வெற்றியடைந்தோம். ஆனால் இவர்கள் இப்போது அரசாங்கத்தில் இணைய விரும்புகிறார்கள்" என்கிறார்.
நிதி திரட்டுவதில் இந்தியர்களின் பங்கு
இந்திய அமெரிக்கர்கள் அரசியலில் மட்டும் நுழையவில்லை. ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளுக்காக நிதி திரட்டுவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.
உதாரணமாக 2015ஆம் ஆண்டில் நரேந்திர மோதி இந்தியாவின் பிரதமரானபோது, டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ’குடியரசுக் கட்சி இந்து கூட்டணி’ (Republican Hindu Coalition- ஆர்.ஹெச்.சி) நிறுவப்பட்டது. ஆர்.ஹெச்.சி ஏற்பாடு செய்த தீபாவளி போன்ற முக்கிய கலாசார நிகழ்வுகளில் டிரம்ப் கலந்துகொண்டார். இந்தக் கூட்டணி அவருக்காக நிதி திரட்டியது.
அது, பாரம்பரியமாக ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்களான இந்திய அமெரிக்கர்களை குடியரசுக் கட்சி ஈர்க்கத் தொடங்கியிருந்த நேரம். ஆனால் அவர்களின் குரல் இந்தத் தேர்தலில் மௌனமாகிவிட்டது. கட்சி தனது பழைய 'கன்ட்ரி கிளப்' வழிகளுக்குத் திரும்பிவிட்டதே இதற்குக் காரணம் என்று ஆர்.ஹெச்.சி நிறுவனர் ஷலப் ஷைலி குமார் கூறினார்.
"இம்முறை பிரசார அலுவலகம் எங்கள் முன்முயற்சிகளுக்குப் பதில் அளிக்கவில்லை. 2016இல் டிரம்ப் இந்திய அமெரிக்கர்களின் செல்வாக்கையும் சக்தியையும் புரிந்துகொண்டார். ஆனால் அதுபோல இப்போது அக்கட்சி பன்முகத்தன்மையை ஏற்றுக்கொள்ளும் என்று சமூகம் நினைக்கவில்லை," என்று அவர் தெரிவித்தார்.
இந்த நேரத்தில் பெருமளவு இந்திய அமெரிக்கர்கள் ‘Lotus for Potus’ என்ற வாசகத்திற்குப் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள். இது கமலா என்றால் தாமரை என்று பொருள்படும் இந்தி வார்த்தையின் அடிப்படையில் உருவான வாக்கியம்.
தெற்காசிய சமூகத்தினர் வசிக்கும் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பலர் ஜனநாயகக் கட்சிக்காக பிரசாரம் செய்து வருகின்றனர். பிரசார அலுவலகத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியல்களில் இருந்து அவர்களுக்கு முகவரிகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தங்கள் சமூக மக்களிடம் சென்று நீல நிறத்திற்கு வாக்களிக்குமாறு கூறுகின்றனர்.
வால் ஸ்ட்ரீட்டில் உள்ள ஒரு நிறுவனத்தின் துணைத் தலைவரான சுபா ஸ்ரீனி, போஸ்ட் கார்டுகளை எழுதவும், தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்களை அழைக்கவும், அவர்களின் வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரிக்கவும் முன்வந்துள்ளார். குடியரசுக் கட்சி ஆதரவாளரைச் சந்திக்கும்போது சவால் ஏற்படுவதாகக் கூறுகிறார் அவர்.
"முந்தைய நிர்வாகத்தின் திறமையின்மை தொடர்பான எனது அனுபவம், எனது குடும்பத்தின் அனுபவங்களைப் பற்றி நான் அவர்களிடம் சொல்வேன். ஆனால் நாம் கண்ணியமாக இருக்க வேண்டும். இது அமெரிக்கா. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதைத் தேர்வு செய்ய மக்களுக்கு உரிமை உண்டு," என்றார் அவர்.
இந்தத் தன்னார்வலர்களை ஒழுங்கமைக்கும் இந்தியன் அமெரிக்கன் இம்பாக்ட் என்ற குழு, வாக்காளர்கள் இன்னும் ஒரு முடிவுக்கு வராத (இரு முக்கியக் கட்சிகளும் சமபலம் கொண்ட) ஸ்விங் மாகாணங்களில் கவனம் செலுத்துகிறது.
பென்சில்வேனியாவில் நடந்த ஒரு பிரசார கூட்டத்தில் அதிக தன்னார்வலர்களை ஈர்ப்பதற்காக இந்திய-அமெரிக்க எழுத்தாளர் பத்மா லக்ஷ்மி மற்றும் வங்கதேச-அமெரிக்க பாடகர் அரி அஃப்சர் போன்ற சிறப்பு விருந்தினர்களை அவர்கள் அழைத்தனர்.
இந்திய அமெரிக்க வாக்குகள் பெரும்பாலும் நீல நிறத்திற்குத்தான் என்று இம்பாக்ட் நிர்வாக இயக்குநர் சிந்தன் படேல் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
"முதல்முறையாக ஸ்விங் மாகாணங்களில் தெற்காசிய வாக்காளர்களிடம் சமீபத்தில் ஒரு கருத்துக்கணிப்பை நாங்கள் மேற்கொண்டோம். மேலும் அவர்களின் கவலைகள் ஜனநாயகக் கட்சியின் நிகழ்ச்சி நிரலுடன் ஒத்துப் போவதையும் தெற்காசிய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் துணை அதிபர் ஹாரிஸை 50 புள்ளிகள் வித்தியாசத்தில் ஆதரிப்பதையும் கண்டறிந்தோம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த நம்பிக்கை சரியா தவறா என்பது வாக்குப்பதிவு நாளில் தெரிய வரும்.
ஆனால் இந்தியர்கள் முத்திரை பதிக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது. 2016ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சியின் பாபி ஜிண்டால் போட்டியிட்டார்.
இந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் நிக்கி ஹேலி, விவேக் ராமசாமி மற்றும் ஜனநாயகக் கட்சியின் கமலா ஹாரிஸ் ஆகியோருடன் அந்த எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
பல்லாண்டுகளாக இந்திய-அமெரிக்கர்கள் அமெரிக்க அரசியலில் வரையறுக்கப்பட்ட பாத்திரத்தையே வகித்தனர். ஆனால் இப்போது அவர்கள் ஒரு பெரிய பங்களிப்பிற்குகுத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)