குஜராத்: ரமலான் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, குஜராத் பல்கலைக்கழகத்தில் தொழுகையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் - 5 பேர் கைது
குஜராத்: ரமலான் தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் - என்ன நடந்தது?

இந்தியாவில் ஒரு பல்கலைக்கழகத்தில் புனித ரமலான் தொழுகையில் ஈடுபட்டிருந்த அயல்நாட்டு மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் ஐந்து பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமையன்று நடந்தது.

தொழுகை நடத்தும் இடம் தொடர்பான ஒரு விவாதம் முற்றிய நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காயமடைந்த ஐந்து மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாக போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தில் குஜராத் மாநில அரசு குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து பத்திரிகையளர்களிடம் பேசிய ஆமதாபாத் போலீஸ் கமிஷனர் ஞானேந்திர சிங் மாலிக், "குஜராத் பல்கலைக்கழக விடுதியின் ’ஏ’ பிளாக்கில் இலங்கை, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்பிரிக்கா நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகிறனர். ரமலான் மாதத்தையொட்டி வெளிநாடுகளைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் சனிக்கிழமை இரவு தொழுகையில் ஈடுபட்டனர்.

கடந்த சனிக்கிஸ்மையன்று சுமார் 25 பேர் ஹாஸ்டலுக்குள் புகுந்து, மாணவர்கள் தொழுகை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் மசூதியில் சென்று தொழுகை நடத்துமாறு கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் விவாதம் முற்றியநிலையில், கைகலப்பு ஏற்பட்டுளது. கற்களும் வீசப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் அறையும் சூறையாடப்பட்டுள்ளது" என தெரிவித்தார் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

மற்றொரு மூத்த போலீஸ் அதிகாரி தருண் தகல் பிபிசி குஜராத்தி சேவையிடம் கைது செய்யப்பட்டவர்களின் பெயரை தெரிவித்தார். ஹிதேஷ் மெவடா, பரத் படேல் ஷிதிஜ் பாண்டே, ஜிதேந்திர படேல், சுனில் துதிரா ஆகியோரே ஐந்து பேர். இந்த விவகாரத்தில் மேலும் சிலர் கைது செய்யப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நபர்கள் எதாவது அரசியல் கட்சி அல்லது மத அமைப்புகளோடு தொடர்பு உடையவர்களா என்ற விவரத்தை இன்னும் போலீசார் உறுதிப்படுத்தவில்லை.

சம்பவ இடத்துக்குச் சென்ற செய்தியாளர்கள் பிபிசி குஜராத்தி சேவையிடம் இதுகுறித்து பேசுகையில், சம்பவ இடத்தில் கற்கள் மற்றும் சேதமடைந்த வாகனங்களை கண்டதாக கூறினார். இந்த விவகாரம் குறித்து ஆன்லைனில் வெளியான வீடியோவில் ஒரு கும்பல் இந்து மத முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்களை தாக்கியதையும், வாகனங்களை சேதப்படுத்தியதும், கற்களை எறிவதையும் பார்க்க முடிகிறது.

இந்த சம்பவத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த ஐந்து பேரில் மூன்று பேர் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இருவர் இன்னமும் மருத்துவமனையில் உள்ளனர்.

சம்பவத்தன்று என்ன நடந்தது என்பது குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு காயமடைந்த ஆப்கானிஸ்தான் மாணவர் நவீத் சித்திக் பேசியிருக்கிறார். அதில் ரம்ஜானை முன்னிட்டு ஒரு சிறப்பு இரவு தொழுகை நடந்ததாகவும். அப்போது மூன்று பேர் ஹாஸ்டலில் நுழைந்து அவர்களை கேள்வி கேட்டதாகவும். விவாதம் முற்றியபோது அவர்கள் சென்றுவிட்ட பெரிய கும்பலோடு மீண்டும் உள்ளே நுழைந்து கற்கள், இரும்பு பைப் ஆகியவற்றை கொண்டு தாக்கியதாக தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு மாணவரான நோமன் பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசுகையில், இது போன்ற சம்பவங்கள் இதற்குமுன்னும் நடந்திருப்பதாக்க தெரிவித்தார். அயல்நாட்டில் இருந்து வரும் மாணவர்களுக்கு இங்கே நிறைய சிரமங்கள் இருக்கின்றன என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த கல்லூரியில் கலாசார உறவுகளுக்கான இந்திய மையம் தரும் உதவித்தொகையுடன் சுமார் 300-க்கும் அதிகமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கருத்து கேட்டு சம்பந்தப்பட்ட பல்கலைகழகத்துக்கு பிபிசி மின்னஞ்சல் அனுப்பியுள்ளது.

குஜராத் பல்கலை கழகத்தின் துணை வேந்தர் நீரஜ் குப்தா இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "தாக்குதல் நடத்தியவர்களுக்கும் வெளிநாட்டு மாணவர்களுக்கும் இடையே சில காலமாகவே பதற்றம் நிலவியுள்ளது. எனக்கு கிடைத்த தகவலின் படி, தொழுகை நடத்துவது தொடர்பான பிரச்னை பிராதன விஷயம் இல்லை" என தெரிவித்தார். தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் வேறு ஹாஸ்டலுக்கு மாற்றப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் போது ஏற்படும் பதற்றங்கள் இது முதல் முறையல்ல. 2021-ல் முஸ்லிம்கள் குர்கானில் பொது இடங்களில் நமாஸ் செய்யும் போது தொடர்ச்சியாக இடையூறுகளை எதிர்கொண்டனர். மேலும் இந்து கடும்போக்குவாதிகள் போராட்டங்கள் நடத்தினர்.

கடந்த மார்ச் 8-ம் தேதி தில்லியின் இந்தர்லோக் பகுதியில் சாலையில் நமாஸ் செய்து கொண்டிருந்த இஸ்லாமியர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் காலால் எட்டி உதைத்து தாக்குவது வீடியோவில் பதிவானது. அந்த சமயத்தில் அங்கிருந்த மக்கள் கூடி, காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

அந்த வீடியோ வைரலான நிலையில் அக்காவலர் மனோஜ் தோமர் இடைநீக்கம் செய்யப்படுவதாக டெல்லி காவல்துறை தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில் டெல்லி போலீசாரிடம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)