பி.எம். விஸ்வகர்மா: குரு-சிஷ்யன் முறையை வளர்க்கும் இந்த ரூ.13,000 கோடி திட்டத்தால் யாருக்கு பலன்?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது சுதந்திர தின உரையில் பிஎம் - விஸ்வகர்மா என்ற பெயரில் பாரம்பரிய தொழிற்கலைஞர்களுக்கு நிதியுதவி செய்யப்படும் என அறிவித்தார். அந்த நிதியுதவி எப்படி செய்யப்படும், யாருக்கெல்லாம் கிடைக்கும்?

பிஎம் விஸ்வகர்மா திட்டம் என்றால் என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 15ஆம் தேதி நிகழ்த்திய தனது சுதந்திர தின உரையில், "விஸ்வகர்மா ஜெயந்தி அன்று, பாரம்பரிய திறன்களுடனோ கருவிகளுடனோ, கைகளாலோ வேலை செய்யும் மக்களுக்கு, பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சுமார் 13-15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவுள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இந்த நிலையில், PM Vishwakarma என்ற இந்தத் திட்டத்திற்கென 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதை பொருளாதார விவரங்களுக்கான கேபினட் கமிட்டி ஆகஸ்ட் 16ஆம் தேதி ஒப்புதல் அளித்திருக்கிறது.

இந்தத் திட்டம் 2023-2024 முதல் 2027-2028 வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் என்ன?

இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை, குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும் கருவிகள் மூலமும் கைளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதை வலுப்படுத்துவதும்தான் இதன் நோக்கம் என்று கூறப்பட்டுள்ளது.

கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், விஸ்வகர்மாக்கள் உள்நாட்டு மற்றும் உலகளாவிய விற்பனைச் சங்கிலியுடன் இணைக்கப்படுவதை உறுதி செய்வதும் இந்தத் திட்டத்தின் பிற நோக்கங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தில் சேர்பவர்களுக்கு என்ன கிடைக்கும்?

பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை கிடைக்கும்.

மேலும், முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படும்.

எந்தெந்த தொழில்களைச் செய்வோர் இந்தத் திட்டத்தின் கீழ் பலன் பெறலாம்?

இந்தியா முழுவதும் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள கைவினைக் கலைஞர்கள், கைவினைத் தொழிலாளர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப் படுவார்கள்.

முதற்கட்டமாக, பின்வரும் பதினெட்டு பாரம்பரிய தொழில்களைச் செய்பவர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவார்கள்.

  • தச்சர்
  • பொற்கொல்லர்
  • குயவர்
  • சிற்பிகள், கல் தச்சர்கள்
  • காலணி தைப்பவர், காலணி தொழிலாளா், காலணி செய்பவர்
  • கொத்தனார்
  • கூடை/ பாய்/ துடைப்பம் தயாரிப்பவர் / கயிறு செய்பவர்
  • பாரம்பரியமாக பொம்மைகள் செய்பவர்
  • முடி திருத்தும் தொழிலாளர்
  • பூமாலைகள் கட்டுபவர்
  • சலவைத் தொழிலாளர்
  • தையல்காரர்
  • மீன்பிடி வலை தயாரிப்பவர்
  • படகு தயாரிப்பவர்
  • கவசம் தயாரிப்பவர்
  • இரும்புக் கொல்லர்
  • சுத்தியல் மற்றும் கருவிகள் செய்பவர்கள்
  • பூட்டுகள் செய்பவர்கள்

சான்றிதழ், கடனுதவி தவிர இந்தத் திட்டத்தில் வேறு என்ன அம்சங்கள் இருக்கின்றன?

'பிஎம் - விஸ்வகர்மா' தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் இந்தப் பயிற்சிகள் வழங்கப்படும்.

இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும். மேலும், தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும்.

முதல் ஆண்டில் ஐந்து லட்சம் குடும்பங்கள் இதன்மூலம் பயன் பெறும் என்றும் ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 30 லட்சம் குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் எப்போது அமலுக்கு வருகிறது, எப்படி விண்ணப்பிக்கலாம், இதற்கான இணையதளம் இருக்கிறதா?

இந்த ஆண்டு விஸ்வகர்மா ஜெயந்தி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆகையால் அன்றைய தினம் இந்தத் திட்டம் தொடங்கப்படலாம்.

இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் எப்படி விண்ணப்பிப்பது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் திட்டத்திற்கான இணையதளமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: