இந்தியா தோற்றபோது பாகிஸ்தானின் வாசிம் அக்ரம் கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது பற்றி பாகிஸ்தான் வீரர்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.
ரோகித் சர்மாவின் தலைமை, இந்திய வீரர்களின் துணிச்சல், ஆஸ்திரேலியாவின் உத்தி போன்றவை பற்றி அவர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சிறந்த கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசியபோது, "குரூப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வியடைந்தபோது, நாம் அதை விமர்சித்தோம். அவர்களின் ஆடும் லெவன் நன்றாக இல்லை என்று நாங்கள் கூறினோம். ஸ்பின்னர்கள் சரியில்லை. எக்ஸ்ட்ரா ஸ்பின்னர்கள் இல்லை. ஆனால் இறுதியாக இறுதிப்போட்டியில் எல்லாம் சரியாக நடந்து ஒரு சார்பான போட்டியாக அமைந்தது.” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸைப் பாராட்டிய வாசிம் அக்ரம், "இந்த உலகக் கோப்பைக்கு முன்பு பேட் கம்மின்ஸ் நான்கு ஒருநாள் போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்ததாக இந்தப் போட்டிக்கு முன்பே சொல்லிக்கொண்டிருந்தோம். கம்மின்ஸ் கேப்டன் பதவிக்கு தகுதியானவரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது.”

பட மூலாதாரம், Getty Images
"அப்போது அவர் அதை டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நிரூபித்து விட்டார், எனவே அவரது ஒருநாள் கேப்டன் பதவியும் அப்படித்தான் என்று நான் கூறியிருந்தேன். கம்மின்ஸ் இதை இறுதிப் போட்டியிலும் நிரூபித்தார்."
அக்ரம் கூறுகையில், "கம்மின்ஸ் போட்டிக்கு முழுமையாக பொறுப்பேற்றார். 10 ஓவர்களில் 34 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிகவும் கடினமான நேரத்தில் விக்கெட்டுகளை கைப்பற்றினார். கம்மின்ஸ் 41-ஆவது ஓவரில் மிட்செல் ஸ்டார்க்கைக் கொண்டு வந்து கே.எல். ராகுலின் விக்கெட்டைப் பறித்தார். எந்த பந்து வீச்சாளரைக் கொண்டு வர வேண்டும், எப்போது அழைத்து வர வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் அபார புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினார்”

பட மூலாதாரம், Getty Images
டாஸ் வெற்றி என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
ஆடுகளத்தைப் பொறுத்து போட்டியை வெல்வதற்கு டாஸ் வெல்வது ஏன் முக்கியம் என்ற கேள்விக்கு பதிலளித்த வாசிம் அக்ரம், "இந்த கேள்வியை நானே பலரிடம் கேட்கிறேன். இரு அணிகளும் நன்றாக ஆடுகின்றன. ஆனால் டாஸ் முக்கியமானது" என்றார்.
வாசிம் கூறுகையில், "எல்லா விளையாட்டுகளிலும் டாஸ் உள்ளது, ஆனால் கிரிக்கெட்டைப் போல இது வேறு எந்த விளையாட்டுக்கும் முக்கியமில்லை. இதற்கு ஏதாவது தீர்வு காண வேண்டும். இதுபோன்ற சூழ்நிலையில், போட்டியை பகலில் மட்டுமே நடத்த வேண்டும். ஆஸ்திரேலியாவில் பந்து இரவில் ஸ்விங் ஆகிறது. ஆனால் நம் நாட்டில் பனிப்பொழிவு காரணமாக, இரவில் பேட்டிங் எளிதாகிறது."

பட மூலாதாரம், Getty Images
ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் பேட்டிங்கில் ஏன் பலம் இல்லை?
இந்த கேள்விக்கு பதிலளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின் கான், “இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் இருந்து எதிர் தாக்குதல் எதுவும் தெரியவில்லை. ரோகித் அவுட்டான பிறகு இந்திய வீரர்கள் நிலைகுலைந்தனர்.”
“ரோஹித்துக்குப் பிறகு யாரும் தாக்கும் துணிச்சலாக ஆடவில்லை. இதற்கான எளிய பதில் சிறந்த பந்துவீச்சு, சிறந்த மைதான அமைப்பு மற்றும் சிறந்த பீல்டிங். பீல்டிங் மிகவும் அழுத்தத்தை உருவாக்கியது, இந்திய பேட்ஸ்மேன்கள் வலுவாக அடிக்கும் பந்தை கூட ஆஸ்திரேலிய வீரர்கள் தடுத்தனர். கம்மின்ஸ் பந்துவீச்சை அற்புதமாக மாற்றினார்.”
அதே நிகழ்ச்சியில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக், "கே.எல். ராகுல் மிகவும் மெதுவாக விளையாடினார். அவர் எவ்வளவு அழுத்தத்தில் இருந்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. எப்படியாவது 50 ஓவர்கள் விளையாட வேண்டும் என்பதுதான் அவரது முயற்சி. இறுதிப் போட்டியில் அப்படி ஆடக்கூடாது.”

பட மூலாதாரம், Getty Images
“கடினமான சூழ்நிலையில் நீங்கள் பேட்டிங் செய்தால், ஸ்ட்ரைக் சுழற்சி இருக்க வேண்டும். கே.எல்.ராகுல் சுழற்பந்து வீச்சை சிறப்பாக ஆடுவார். ஆனால் இறுதிப் போட்டியில் அப்படி நடக்கவில்லை. போகப்போக சமாளித்துக் கொள்ளலாம் என்று அவர் நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள் போட்டி கையை விட்டுப் போனது.”
சுனோ நியூஸின் உலகக் கோப்பை மஸ்தியான் நிகழ்ச்சியில் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா ரோஹித் சர்மாவின் ஷாட்கள் மற்றும் கே.எல்.ராகுலின் மெதுவான பேட்டிங் பற்றியும் குறிப்பிட்டார்.
“ரோஹித் ஷர்மா ஒரு ‘மோசமான’ ஷாட்டில் ஆட்டமிழந்ததால் இந்தியா குறைந்த ஸ்கோரையே எடுக்க முடிந்தது. மற்றபடி இது 240 ரன்கள் எடுப்பதற்கான களம் இல்லை. 300 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் இந்தியா 270-80 ரன்களை எடுத்திருக்க வேண்டும். கே.எல்.ராகுலின் ஆட்டம் வேகம் பிடிக்கவில்லை” என்றார்.
"இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் இருந்தது, ஆனால் ரோஹித் சர்மா தவறான நேரத்தில் வெளியேறினார். அவர் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தினார். அவருக்குப் பிறகு, கே.எல். ராகுல் மற்றும் விராட் கோலி ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கத் தொடங்கினர். அதில் வேகம் இல்லை. ஷாட்டை அடித்தால் அவுட் ஆகிவிடுவோம் என்று இந்திய பேட்ஸ்மேன்கள் கவலைப்பட்டனர். ஆனால் ஆஸ்திரேலியாவின் மனநிலை மிகவும் வித்தியாசமானது."

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளம் ஏமாற்றியதா?
இந்த ஆட்டத்திலும் ஆடுகளம் அதிகம் பேசப்பட்டது. இது குறித்து வாசிம் அக்ரம் கூறுகையில், “ ஆடுகளம் பற்றிய இந்தியாவின் யூகம் முற்றிலும் தவறாகிப் போனது.” என்றார்.
"ஆடுகளம் மிகவும் வறண்டது. ஆனால் 50 ஓவர்களுக்குப் பிறகு அது மெதுவாக மாறும். ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு முற்றிலும் அவர்களது உத்தியின்படியே இருந்தது. பந்து சென்ற இடமெல்லாம் ஆஸ்திரேலிய வீரர்கள் இருந்தனர்.
பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளம் இருந்திருந்தால் இந்தியாவுக்கு சாதகமாக இருந்திருக்கும். பிட்ச் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். குறைந்த ஸ்கோரால் இந்திய பவுலர்கள் சுதந்திரமாக பந்து வீச முடியவில்லை. “
முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தரும் ஆடுகளம் குறித்து கேள்வி எழுப்பினார். அவர் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ள வீடியோவில், "இந்தியா நன்றாக விளையாடியதன் மூலம் இந்த இலக்கை எட்டியுள்ளது, அதிர்ஷ்டத்தால் அல்ல. ஆனால் விக்கெட்டைப் பார்த்ததும் வருத்தப்பட்டேன். இந்தியா ஒரு நல்ல பிட்ச்சை உருவாக்கியிருக்க வேண்டும்" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
தோல்விக்குப் பிறகு என்ன செய்வது?
இந்த தோல்வியில் இருந்து ரோகித் ஷர்மா வெளிவருவது அவ்வளவு சுலபம் இல்லை சோயப் மாலிக் கூறினார்.
இறுதிப் போட்டி தடையை ஏன் தாண்ட முடியவில்லை என்பதை இந்தியா சிந்திக்க வேண்டும் என்று ரமீஸ் ராஜா கூறினார்.
"தென்னாப்பிரிக்காவுக்கு இருப்பது போல், மனதளவில் சில தடைகள் இந்தியாவுக்கு உள்ளன. அவர்களை சோக்கர்ஸ் என்று கூறுகிறார்கள். அதைத்தான் இந்தியா செய்து கொண்டிருக்கிறது” என்றார்.
அக்தர் கூறுகையில், "ஆஸ்திரேலியாவின் களத் திட்டமிடல் அற்புதமாக இருந்தது. அவர்களும் திட்டப்படியே பந்துவீசினார்கள். அவர்களின் ஆட்டம் மிகவும் வித்தியாசமானது. அவர்கள் அமைதியாகவும் ஒருமுகமாகவும் இருக்கிறார்கள்."
“இந்தியா மிகச்சிறந்த அணி என்று சொல்வதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அவர்கள் தைரியமாக இறுதிப் போட்டியை எட்டினார்கள். ரோகித் 20 ஓவர்கள் விளையாடியிருந்தால், கதை வேறுவிதமாக இருந்திருக்கும். பாண்டியா ஃபிட்டாக இருந்திருந்தால் கதை வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஆனால் வெற்றியும் தோல்வியும் ஆட்டத்தின் ஒரு பகுதி.”
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












