காணொளி: திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத்தூணா, சர்வே கல்லா?
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக எழுந்த பிரச்னையில், தற்போது இந்த மலையில் இருப்பது தீபத் தூணா, சர்வே கல்லா என்ற விவாதம் கிளம்பியுள்ளது.
இந்த சர்ச்சையின் பின்னணி என்ன? இதுபற்றி ஆய்வாளர்கள் என்ன சொல்கிறார்கள்? கல்வெட்டு ஆய்வாளர் செ.போசுவின் புத்தகத்தில் 'தீபத்தூண்' பற்றி கூறப்பட்டுள்ளது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
"திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது சர்வே கல். அப்படிப்பட்ட ஆறு கற்கள் அங்கே உள்ளன. முந்தைய வழக்குகளில்கூட அங்கே அப்படியொரு தீபத்தூண் இருப்பது குறித்துப் பேசப்படவில்லை."
டிசம்பர் 4 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்த வாதத்தின்போது சிக்கந்தர் அவுலியா தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் டி.மோகன் இவ்வாறு கூறினார்.
ஆனால், "மலையில் உள்ள தீபத்தூணில் விளக்கு ஏற்றுவது பண்டைய தமிழர்களின் பழக்கமாக இருந்துள்ளதாக" மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, 'தீபத்தூண்' மற்றும் 'சர்வே கல்' குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்தன.
பொதுவாக, 'சர்வே அடையாளக் கற்கள்' அல்லது 'தியோடலைட் ஸ்டோன்கள்' என்பவை, ஆங்கிலேயர் காலத்தில் நில அளவை பணிகளின்போது அடையாளப்படுத்துவதற்காக நட்டு வைக்கப்பட்டவை என்று கூறுகிறார் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்.
"மலைக்குச் செல்லும் வழியில் தீபத்தூண் உள்ளது. அங்கு அனுமார் படத்துடன் கல்வெட்டு ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப் பிள்ளையார் கோவிலில் தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது" என தொல்லியல் ஆய்வாளர் சொ.சாந்தலிங்கம் கூறுகிறார்.
அதுமட்டுமல்லாமல் கல்வெட்டு ஆய்வாளர் செ.போசு எழுதிய 'திருப்பரங்குன்றம்' என்ற புத்தகத்தில் 'தீபத்தூண்' பற்றிய குறிப்பு உள்ளது.
இந்தப் புத்தகத்தை 1981ல் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தின் 129ஆம் பக்கத்தில், தீபத்தூண் என்ற தலைப்பில் "மலையடிவாரத்தில் இருந்து மலைக்குச் சென்றால் பாதி வழியில் தீபத்தூண் ஒன்று இருப்பதைக் காணலாம். இந்தத் தூண் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. நாயக்கர் காலத்துக் கல்வெட்டும் தூணிலேயே எழுதப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் "கல்வெட்டுக்கு மேலே அனுமன் ஒரு கையை ஓங்கிக் கொண்டு முகத்தை இடது பக்கம் திருப்பிக் கொண்டிருப்பது போன்ற சிற்பம் உள்ளது. இந்த தீபத்தூணில் புண்ணியவான்கள் அனைவரும் விளக்கேற்றலாம்" என எழுதியுள்ளார்.
"இந்த தீபத்தூணில் கார்த்திகை தோறும் ஊரிலுள்ள மக்கள் விளக்கேற்றி வருவதாகவும்" அவர் குறிப்பிட்டுள்ளார். இதில் எந்த இடத்திலும் "கொடி மரத்தின் அருகிலுள்ள தூண்" குறித்து செ.போசு தெரிவிக்கவில்லை.
அதோடு ஸ்கந்தர் மலை என்ற தலைப்பில் மேலும் சில தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
அதாவது மலையின் உச்சியில் இரு பாறைகளுக்கு இடையில் சமாதி ஒன்று உள்ளதாகவும், அதில் சிக்கந்தர் பாட்ஷா என்ற பக்கிரி அடக்கமாகி இருப்பதாகவும் கூறியுள்ள அவர், 'நாட்டிலுள்ள முகம்மதியர்கள் இங்கு வந்து வணங்கிச் செல்கின்றனர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



