'பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் தாலியை திருப்பிக் கொடுங்கள்': உயர்நீதிமன்றம் - முக்கிய செய்திகள்

இன்றைய (07/02/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றம், இலங்கையைச் சேர்ந்த பெண்ணிடம் கைப்பற்றிய 216 கிராம் எடை கொண்ட தாலியை உடனடியாக திருப்பி அளிக்கும்படி சுங்க அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழின் செய்தி தெரிவிக்கிறது.

"நம்முடைய பழக்கவழக்கங்களின்படி, திருமணமான பெண்கள் அந்த எடையில் தங்கத்தில் தாலி போட்டுக்கொள்வது நடைமுறையில் இருக்கும் ஒன்று. அதிகாரிகள் சோதனை செய்யும்போது அவர்கள் அனைத்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் மதிக்க வேண்டும்," என்று நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

சுங்க அதிகாரிகளின் இந்த செயல் நியாயமற்றது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி மீது தகுந்த துறைசார் நடவடிக்கை மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தனுஷிகா இலங்கையில் இருந்து சென்னை வந்துள்ளார். பிரான்ஸில் இருந்து வந்த ஜெயகாந்த் என்பவருடன் தனுஷிகாவுக்கு 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் செய்துகொண்ட ஜெயகாந்த் பிரான்ஸுக்கு திரும்பிச் சென்று அவருடைய மனைவிக்கான விசா ஏற்பாடுகளை செய்தார்.

அதே ஆண்டு நவம்பர் மாதம் அவருக்கு விசா கிடைத்தது. தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களுக்கு சென்றுவிட்டு பிரான்ஸ் செல்ல முடிவு செய்திருந்தார் தனுஷிகா. அப்போது சென்னை விமான நிலையம் வந்தபோது அவரின் தாலி உட்பட அனைத்து தங்க ஆபரணங்களையும் சுங்கத்துறையின் கைப்பற்றினர் என்று தெரிவிக்கிறது அந்த செய்தி.

போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள்

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள மாநிலக் கல்லூரியில், ஏராளமான மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில், விடுதி மாணவர்கள் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டதாக என்று தினத்தந்தி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதியில் வழங்கப்படும் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் சரியில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டினார்கள். மேலும் சமையலறை ஒப்பந்ததாரரை மாற்றவேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி 200 மாணவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.

இதற்கிடையே, தகவலறிந்து வந்த காவல்துறையினர், மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

ஆண்டுக்கு ரூ. 3,000 செலுத்தினால் சுங்கச்சாவடிகளில் கட்டணம் இல்லை - நிதின் கட்கரி

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்ய ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 செலுத்தினால், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் செலுத்தாமல் செல்லும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது.

"நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் 'ஃபாஸ்டேக்' மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அடிக்கடி சுங்கச்சாவடிகளை கடந்து சென்று வரும் உள்ளூர் மக்களின் வசதிக்காக மாதச் சலுகைக் கட்டணத்தில் 'பாஸ்' பெறும் வசதியும் உள்ளது.

இதற்கிடையே, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருப்பது மற்றும் நெரிசலை தவிர்க்க மத்திய நெடுஞ்சாலை துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இந்நிலையில், ஆண்டுக்கு ரூ.3,000 அல்லது 15 ஆண்டுகளுக்கு ரூ.30,000 கட்டணத்தை ஒருமுறை செலுத்தி பாஸ் பெற்றுக் கொண்டால், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தாமல் சென்று வரும் திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்," என்று அந்த செய்தி குறிப்பிடுகிறது.

மத்திய பிரதேசம்: வயலில் விழுந்து நொறுங்கிய மிராஜ் போர் விமானம்

மத்திய பிரதேசத்தில் விமானப்படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் விபத்துக்குள்ளாகி, வயல்வெளியில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 2 விமானிகள் பாராசூட் மூலம் குதித்து சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர் என்று தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு இருக்கைகளுடன் கூடிய மிராஜ்-2000 ரக போர் விமானம், வழக்கமான பயிற்சிக்காக குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்டது. சிவபுரி அருகே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறால், விமானம் வயல்வெளியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது என்று சிவபுரி மாவட்டத்தில் வியாழக்கிழமை நடந்த இந்த சம்பவம் குறித்து விமானப்படை அதிகாரிகள் தெரிவித்ததாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

விபத்துக்கு முன்பாக விமானத்தில் இருந்த இரு விமானிகளும் பாராசூட் மூலம் வெளியே குறித்து சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். பிறகு இருவரும் ஹெலிகாப்டர் மூலம் குவாலியருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய நபர்கள் விடுதலை - போராட்டத்தில் பத்திரிகையாளர்கள்

இலங்கையில் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவரை விடுவிப்பதற்குப் பரிந்துரை செய்திருக்கும் சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவுக்கு எதிராக வியாழக்கிழமை (6) நடைபெற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் என்று செய்தி வெளியிட்டுள்ளது வீரகேசரி இணையம்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கில் கல்கிசை நீதிவான் நீதிமன்றத்தினால் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டிருக்கும் பிரேம் ஆனந்த உடலாகம, தொன் திஸ்ஸ சிறி சுகதபால மற்றும் பிரசன்ன நாணயக்கார ஆகிய மூவரையும் அவ்வழக்கிலிருந்து விடுவிக்க முடியும் என, சட்டமா அதிபர் பாரிந்த ரணசிங்கவினால் செய்யப்பட்டிருக்கும் சிபாரிசு தொடர்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அதன்படி சட்டமா அதிபரின் இந்நகர்வு தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியும், அவரைப் பதவி விலகுமாறு கோரியும் இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் வியாழக்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு கொழும்பிலுள்ள உயர்நீதிமன்றம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள வளாகத்துக்கு முன்பாக விசேட கவனயீர்ப்புப் போராட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இப்போராட்டத்தில் இளம் ஊடவியலாளர் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன உள்ளடங்கலாக அச்சங்கத்தின் பிரதிநிதிகள், சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா உள்ளடங்கலாக அவ்வமைப்பின் பிரதிநிதிகள், லசந்த விக்ரமதுங்கவின் சகோதரர் லால் விக்ரமதுங்க, ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தெற்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)