You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவின் வரி குறைப்பு நடவடிக்கைகள் டிரம்பின் வரி அச்சுறுத்தலை தவிர்க்க போதுமா?
- எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ் மற்றும் நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி செய்திகள்
கடந்த வாரம், இந்தியா இருசக்கர வாகனங்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தது. 1,600 சிசிக்கும் அதிகமான இன்ஜின் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கு 50 சதவீதத்திலிருந்து 30 சதவீதம் ஆக வரி குறைக்கப்பட்டது.
அதைவிட குறைவான சிசி கொண்ட வாகனங்களுக்கு, 50 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் ஆக வரி குறைக்கப்பட்டது.
ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் வாகன இறக்குமதியை எளிதாக்கும் விதமாக, இந்தியா வரி குறைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
இதன் மூலம், அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களைத் தவிர்க்கலாம் என்றும் இந்தியா நம்புகிறது. மேலும், கடந்த ஆண்டு 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள இருசக்கர வாகனங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவின் அண்டை நாடுகளையும் (கனடா மற்றும் மெக்ஸிகோ) அதன் முக்கிய போட்டியாளரான சீனாவையும் குறிவைத்து புதிய வர்த்தக நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகனங்கள் மீதான இறக்குமதி வரிகளை குறைப்பதன் மூலம், தான் சரியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இந்தியா நம்புகிறது.
இருப்பினும், இந்த வரிக் கட்டுப்பாடு நடவடிக்கைகள் டிரம்பை திருப்திப்படுத்த போதுமானதாக இருக்குமா என்பதும், இந்தியா மீதும் வரிக் கட்டுப்பாடுகள் எடுக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதும் இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது.
இந்தியாவை விமர்சித்த டிரம்ப்
இதுகுறித்து, டெல்லியை சேர்ந்த சிந்தனைக்குழுவான குளோபல் டிரேட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்டின் (ஜிடிஆர்ஐ) நிறுவனர் அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "அடிப்படையில், கனடாவும் மெக்ஸிகோவும் அமெரிக்காவின் இரு கரங்கள். அவற்றுக்கு எதிராக செயல்பட்டால், இந்தியாவுக்கு எதிராகவும் அவர் எளிதாக செயல்பட முடியும்" என்கிறார்.
கடந்த மாத இறுதியில், அமெரிக்க அதிபர் டிரம்புக்கும், இந்தியப் பிரதமர் மோதிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடலில், அதிகமான அமெரிக்க பாதுக்காப்பு உபகரணங்களை வாங்கவும், நியாயமான வர்த்தகச் சமநிலையை உறுதிப்படுத்தவும் வேண்டுமெனவும், மோதியிடம் வலியுறுத்தினார் டிரம்ப்.
டிரம்ப் தனது முதல் பதவிக் காலத்தில், இந்தியாவின் அதிக வரிகளின் மீது கவனம் செலுத்தினார். ஹார்லி டேவிட்சன் இருசக்கர வாகனங்கள் மீதான 100 சதவீத வரியை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று பலமுறை விமர்சித்து வந்தார்.
மேலும், கடந்த காலத்தில் அவர் இந்தியாவை "வரி மன்னன் " என்றும் வர்த்தக உறவுகளை "துஷ்பிரயோகம் செய்பவர்" என்றும் பலமுறை சுட்டிக்காட்டினார்.
இந்தியா தனது முன்னணி வர்த்தக கூட்டாளியான அமெரிக்காவுடன் வர்த்தக உபரியைக் கொண்டுள்ளது. அதாவது அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்வதை விட, அமெரிக்காவிற்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது இந்தியா.
2023 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 190 பில்லியன் டாலரை (150 பில்லியன் யூரோவைத்) தாண்டியது. 2018 முதல், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஏற்றுமதி, 40 சதவீதம் அதிகரித்து, 123 பில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. அதே நேரத்தில், சேவை வர்த்தகம் 22 சதவீதம் அதிகரித்து, 66 பில்லியன் டாலர் மதிப்பை எட்டியது.
மறுபுறம், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக உள்ளது.
ஆனால் இரு சக்கர வாகனங்களுக்கான இறக்குமதி வரிகளை குறைப்பதுடன், செயற்கைக்கோள் தரை அமைப்புகளுக்கான இறக்குமதி வரிகளையும் இந்தியா முற்றிலுமாக நீக்கியுள்ளது. இதன் மூலம், செயற்கைக்கோள் தரை அமைப்புகளை இந்தியாவுக்கு வழங்கும் அமெரிக்க ஏற்றுமதியாளர்கள் பலனடைவார்கள். 2023 ஆம் ஆண்டில் 92 மில்லியன் டாலர் மதிப்புள்ள செயற்கைக்கோள் தரை அமைப்புகளை அவர்கள் ஏற்றுமதி செய்துள்ளனர்.
செயற்கை சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரிகளை இந்தியா 100 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாகக் குறைத்துள்ளது (கடந்த ஆண்டு அமெரிக்க ஏற்றுமதியில் 21 மில்லியன் டாலர் மதிப்புடையது), மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தீவனத்திற்கான மீன் ஹைட்ரோலைசேட் மீதான வரியை 15 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் ஆக குறைத்துள்ளது.(2024 இல் அமெரிக்க ஏற்றுமதியில் 35 மில்லியன் டாலர் மதிப்புடையது).
கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட கழிவுகள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்களின் மீதான வரிகள் நீக்கப்பட்டுள்ளன. இந்த கடந்த ஆண்டு 2.5 பில்லியன் டாலர் மதிப்பில் அமெரிக்காவால், ஏற்றுமதி செய்யப்பட்டது.
கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் (14 பில்லியன் டாலர் மதிப்புடையது), எல்என்ஜி, நிலக்கரி, மருத்துவ சாதனங்கள், அறிவியல் கருவிகள், ஸ்கிராப் உலோகங்கள், டர்போஜெட்டுகள், கணினிகள் மற்றும் பாதாம் ஆகியவை 2023 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு அமெரிக்காவிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
"இந்தியாவின் வரிக் கொள்கைகளை டிரம்ப் விமர்சித்திருந்தாலும், சமீபத்தில் குறைக்கப்பட்டுள்ள வரிகள், ஒரு கொள்கை மாற்றத்தை குறிக்கிறது. இது பல்வேறு துறைகளில் அமெரிக்க ஏற்றுமதியை மேம்படுத்தக்கூடியது''என்று ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.
"தொழில்நுட்பம், கார்கள், தொழில்துறைப் பொருட்கள் மற்றும் கழிவு இறக்குமதி ஆகியவற்றின் மீதான முக்கியமான வரிகளை இந்தியா குறைத்து வருகிறது. உலகளாவிய வர்த்தகச் சூழல் பதற்றமாக இருந்தாலும், வர்த்தகத்தை ஊக்குவிக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது".
வர்த்தக மாற்றம்
இதற்கிடையில், ஜவுளி, மருந்துப் பொருட்கள் மற்றும் பொறியியல் சார்ந்த பொருட்கள் முதல் பெட்ரோலிய எண்ணெய்கள், இயந்திரங்கள் மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் வரை இந்தியா பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன்கள், வாகன உதிரிபாகங்கள், இறால், தங்க நகைகள், காலணிகள், இரும்பு மற்றும் எஃகு போன்றவற்றையும் ஏற்றுமதி செய்கிறது. இதனால் உலகளாவிய வர்த்தகத்தில், இந்தியா முக்கியப் பங்கு வகிக்கிறது.
"இதுபோன்ற பல்வேறு பொருட்கள், இந்தியாவின் பரந்த ஏற்றுமதி தளத்தையும் அமெரிக்காவுடனான அதன் வலுவான வர்த்தக உறவையும் பிரதிபலிக்கிறது."என்கிறார் ஸ்ரீவஸ்தவா.
இந்தியா ஒரு காலத்தில் உலகின் மிகவும் பாதுகாப்பான பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது. 1970களில், அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜோசப் கிரிகோ, "வெளிநாட்டில் செய்யப்படும் நேரடி முதலீடுகளை ஒழுங்குபடுத்தும், மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட, ஆட்சிகளில் ஒன்று'' என இந்தியாவை விவரித்தார்.
மேலும், இந்தியா தனது சொந்தப் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தியதால், 1948 இல் உலக வர்த்தகத்தில் 2.42 சதவீதமாக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி பங்கு 1991 இல் வெறும் 0.51 சதவீதமாகக் குறைந்தது.
Globalizing India: How Global Rules and Markets are Shaping India's Rise to Power, எனும் நூலின் ஆசிரியரான அசீமா சின்ஹா அப்போதைய இந்தியக் காலகட்டம் பற்றி, "சுயமாக இயக்கப்படும் தொழில்மயமாக்கல் சார்ந்த முயற்சிகள், ஏற்றுமதியில் உள்ள அவநம்பிக்கை, மற்றும் உலகளாவிய கூட்டணிகள் குறித்த சந்தேகம்" என்று குறிப்பிடுகிறார்.
இறுதியாக, 1990கள் மற்றும் 2000களில், இந்தியா தனது வர்த்தகத் தடைகளை குறைக்கத் தொடங்கியது.1990ம் ஆண்டில் இருந்த 80 சதவீத வரியிலிருந்து, 2008ம் ஆண்டில் 13 சதவீதமாக சராசரி இறக்குமதி வரிகள் குறைக்கப்பட்டன.
ஆனால் இந்தியாவில் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மோதி தனது "மேக் இன் இந்தியா" கொள்கையை அறிமுகப்படுத்திய பிறகு, சுங்க வரி மீண்டும் சுமார் 18 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
இது சீனா, தென் கொரியா, இந்தோனீசியா மற்றும் தாய்லாந்து போன்ற பிற ஆசிய நாடுகளால் நிர்ணயிக்கப்பட்ட வரிகளை விட அதிகமாகும்.
மறுபுறம், டிரம்பின் " அமெரிக்கா முதலில் " எனும் கொள்கையின் கீழ், இந்தியா இப்போது முக்கிய இலக்காக உள்ளது என்று வர்த்தக நிபுணர் பிஸ்வஜித் தார் நம்புகிறார்.
இந்தக் கொள்கையானது அதிக இறக்குமதி வரிகளைக் கொண்ட நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதையும், அமெரிக்காவுடன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ள நாடுகளுடனான வர்த்தக உறவுகளை மறு ஆய்வு செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
அது மட்டுமின்றி, இந்தியாவின் விவசாயச் சந்தைகளை அணுகுவதில் அமெரிக்காவுக்கு இன்னும் சிக்கல்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
2023 ஆம் ஆண்டில், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பாதாம், ஆப்பிள், கொண்டைக்கடலை, பருப்பு மற்றும் அக்ரூட் மீது பதிலடியாக விதிக்கப்பட்ட வரிகளை இந்தியா நீக்கியது.
ஆனால், இன்னும் அதிகமான சலுகைகளை டிரம்ப் எதிர்பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. ஆனால், உள்நாட்டு அரசியல் சூழலில் உள்ள விவசாயப் பிரச்னைகளின் காரணமாக இந்தியா உறுதியாக இருக்கலாம்.
"இங்குதான் நாம் கடுமையான பேரம் பேசுவோம், பிரச்னைகள் எழக்கூடும்" என்று தார் கூறுகிறார்
ஆனால், சீனாவை எதிர்க்கும் குவாட் கூட்டணியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவுடனான இந்தியாவின் வலுவான உறவு, வர்த்தக பதற்றங்களைக் குறைக்க உதவும் என்றும் தார் குறிப்பிடுகிறார்.
கூடுதலாக, அமெரிக்காவில் ஆவணமற்று குடியேறிய இந்திய மக்களை, எந்த எதிர்ப்பும் இல்லாமல் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இந்தியா தெரிவிப்பது, நேர்மறையான சமிக்ஞையை வெளிக்காட்டுகிறது என விளக்குகிறார் தார்.
மறுபுறம், டிரம்புடனான மோதியின் நல்லுறவு, அமெரிக்க- இந்திய உறவை மேம்படுத்த உதவும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
டிரம்பின் அழைப்பின் பேரில் மோதி இந்த மாதம் வெள்ளை மாளிகைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, ஏதேனும் தெளிவு கிடைக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)