"முதுகுக்குப் பின்னால் சதி" : எமர்ஜென்சியை அமல்படுத்த இந்திரா காந்திக்கு இருந்த காரணங்கள்

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

இந்திரா காந்திக்கு எதிரான அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, அவரது புகழ் உச்சத்தில் இருந்த வங்கதேசப் போருக்குப் பிறகு உடனடியாக வந்திருந்தால், அன்றைய சூழல் முற்றிலும் வேறுபட்டதாக மாறியிருக்கும்.

ஆனால் போர் நடைபெற்ற1971 க்குப் பிறகு, மூன்று ஆண்டுகளில் நாட்டு மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டிருந்தது. 1971 போருக்குப் பிறகு, உச்சத்திற்குச் சென்ற இந்திரா காந்தியின் புகழ் அடுத்த மூன்று ஆண்டுகளில் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.

அதிலும், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு, இந்திரா காந்திக்கு பகிரங்கமாக ஆதரவு கொடுக்க வெகு சிலரே இருந்தனர்.

பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான ஜேம்ஸ் கேமரூன், "தவறான இடத்தில் தனது காரை நிறுத்தியதற்காக அரசாங்கத்தின் தலைவர் ஒருவரை ராஜினாமா செய்யச் சொல்வது போன்றது" என்று கருத்து தெரிவித்தார்.

ஜூன் 12, 1975 அன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் இந்திரா காந்தியின் தேர்தல் வெற்றியை ரத்து செய்தது.

அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, அமைச்சரவை உறுப்பினர்கள் சஃப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்திற்கு வரத் தொடங்கினார்கள். ஆனால் இந்திரா காந்தி ஒரு சிலரிடம் மட்டுமே பேசினார்.

பிரபல பத்திரிகையாளர் இந்தர் மல்ஹோத்ரா தனது 'Indira Gandhi: A Personal and Political Biography' என்ற புத்தகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: "1975 ஜூன் 12ஆம் நாளன்று, இந்திரா காந்தி ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்திருந்தார். தனக்கு பதிலாக ஸ்வரண் சிங்கை பிரதமராக்குவது குறித்தும் அவர் யோசித்துக்கொண்டிருந்தார்."

"உச்ச நீதிமன்றத்தில் தனது மேல்முறையீடு ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், தனது தேர்தல் வெற்றி மீட்டெடுக்கப்பட்ட பிறகு, மீண்டும் பிரதமராகிவிடலாம் என்றே அவர் நினைத்தார். இந்திரா காந்தியின் தலைமையில் பணியாற்றுவதில் தனக்கு மகிழ்ச்சி என, மூத்த அமைச்சர் ஜக்ஜீவன் ராம் சமிக்ஞைகளை வழங்கினார். இந்த நிலையில், ஸ்வரண் சிங்கை தற்காலிக பிரதமராக்குவது சரியாக வருமா? மூப்பு அடிப்படையில் ஜக்ஜீவன் ராம், தான் பிரதமராக வேண்டும் என்று கோருவார்." என்பதே இந்திராவின் யோசனைக்கு முக்கியக் காரணமாக இருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்புக்கு முன்னதாகவே தான் ராஜினாமா செய்தால், அது பொதுமக்களிடையே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தனக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கினால், மீண்டும் பதவியேற்றுக் கொள்ளலாம் என்றும் இந்திரா காந்தி கணக்குப் போட்டார்.

பதவியை ராஜினாமா செய்யும் முடிவை மாற்றிக்கொண்ட இந்திரா காந்தி

இந்திரா காந்தியின் செயலாளராக இருந்த பி.என். தார், தனது 'Indira Gandhi, The 'Emergency', and Indian Democracy ' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதியுள்ளார், "எதிர்க்கட்சித் தலைவர்கள், குறிப்பாக ஜே.பி., பதவி விலகும் முடிவை இந்திராவிடமே விட்டுவிட்டிருந்தால், அவர் ராஜினாமா செய்திருக்கலாம். ஆனால் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட ஜே.பி., இந்திரா காந்தியின் ராஜினாமா முடிவுக்கு தானே கட்டாயப்படுத்தியதாக உலகுக்குக் காட்ட விரும்பினார்."

"ஜே.பி., தனது கூட்டங்களிலும், பொது அறிக்கைகளிலும் இந்திரா காந்தியை சிறுமைப்படுத்த முயன்றார். இதுபோன்ற தனிப்பட்ட விரோதப் போக்கும் தாக்குதலும் இந்திராவின் போர்க்குணத்தை சீண்டிவிட்டது. என்ன விலை கொடுத்தாவது தன்னைத் தற்காத்துக் கொள்ளும் அவரது முடிவை வலுப்படுத்தியது."

மேலோட்டமாகப் பார்க்கும்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் இந்திராவிடம் தங்கள் விசுவாசத்தைக் காட்டினர், ஆனால் அடையக்கூடிய தூரத்தில் பிரதமர் பதவி இப்போது வந்துவிட்டதையும் அனைவரும் உணர்ந்திருந்தனர்.

இந்திராவின் ராஜினாமாவை விரும்பிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள்

"இந்திராவை பகிரங்கமாக ஆதரித்துக் கொண்டே, அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் பலர், தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்" என கூமி கபூர் தனது 'The Emergency: A Personal History' என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இந்திரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தவர்களில் ஜக்ஜீவன் ராம், கரண் சிங், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜலகம் வெங்கல் ராவ் மற்றும் கர்நாடக மாநில முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ் ஆகியோர் அடங்குவர். ஆனால் இதை நேரடியாக இந்திரா காந்தியிடம் சொல்லும் தைரியம் யாருக்கும் இல்லை."

பிறருக்கு அந்த தைரியம் இல்லையென்றாலும், ராஜினாமா செய்வதே நல்லது என கரண் சிங் இந்திரா காந்தியிடம் மறைமுகமாக தெரிவித்ததாக நம்பப்படுகிறது.

இந்திரா காந்தியின் அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த கரண் சிங், ராஜினாமா செய்வது தொடர்பாக இந்திரா காந்தியிடம் பேசியதாகவும், இதைப் பற்றி கரண் சிங்கே, தன்னிடம் கூறியதாக நீர்ஜா செளத்ரி தனது 'How Prime Ministers Decide' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.

"உங்கள் ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதுவுக்கு அனுப்புவது நல்லது. அவர் உங்கள் ராஜினாமாவை நிராகரித்து, உச்ச நீதிமன்றத்தின் இறுதி முடிவு வரும் வரை உங்கள் பதவியில் தொடருமாறு கேட்கலாம்" என்று கரண் சிங், இந்திரா காந்திக்கு அறிவுறுத்தினார்.

தனது அறிவுரையை கேட்டுக் கொண்ட இந்திரா காந்தி, அதற்கு பதில் சொல்லவில்லை என்றும், இருப்பினும் "இந்திரா காந்திக்கு அது பிடிக்கவில்லை என நான் உணர்ந்தேன்" என நீர்ஜா சவுத்ரியிடம், கரண் சிங் கூறினார்.

இந்திராவின் ராஜினாமாவை எதிர்த்த சஞ்சய் காந்தி

இந்திராவின் ராஜினாமா முடிவை எதிர்த்தவர்களில் முக்கியமானவர், அவரது இளைய மகன் சஞ்சய் காந்தி. அதேபோல, இந்திராவின் உதவியாளரும், தனிச் செயலாளருமான ஆர்.கே. தவண் மற்றும் ஹரியானா முதல்வர் பன்சிலால் ஆகியோர் ராஜினாமா செய்யத் தேவையில்லை என்று கூறி, இந்திராவின் பதவி விலகல் முடிவை எதிர்த்தனர்.

"ராஜினாமா செய்யலாம் என்ற இந்திரா காந்தியின் எண்ணம் சஞ்சய் காந்திக்கு தெரிந்ததும், அவர் தனது தாயை தனியறைக்கு அழைத்துச் சென்று பேசினார். அவரை பதவியில் இருந்து விலக விடமாட்டேன் என்றும் கூறினார்" என்று இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்தில் புபுல் ஜெயகர் குறிப்பிட்டுள்ளார்.

"உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு முடிவடையும் வரை, இந்திரா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கலாம் என்றும், அந்த சிறிது காலத்திற்கு தான் பிரதமராக பதவியில் இருப்பதாக தேவ்காந்த் பரூவா கூறியது சஞ்சய் காந்தியின் சீற்றத்தைத் தூண்டியது. விசுவாசமாய் இருப்பதாக அனைவரும் நடிப்பதாக இந்திராவிடம் கூறிய சஞ்சய், உண்மையில் அனைவரும் அதிகாரத்தைத் தேடி ஓடுகிறார்கள், என்று சொன்னார்."

இந்திராவுக்கு மாற்றாக யாரை முன்னிறுத்துவது? காங்கிரஸ் கட்சியின் தேடல்

இந்திரா காந்தியின் பாதுகாப்பின்மை உணர்வே, எமர்ஜென்சி என்ற அவசரநிலையை அறிவிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் ஜெயபிரகாஷ் நாராயணின் இயக்கம் தவிர, தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களே தன்னை அதிகாரத்திலிருந்து அகற்ற தனது முதுகுக்குப் பின்னால் சதி செய்வதாகவும் இந்திரா காந்திக்கு கவலை இருந்தது.

குல்தீப் நாயர் தனது 'தி ஜட்ஜ்மென்ட்' புத்தகத்தில், "நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ்காரர்கள் இந்திராவை நீக்கும் பிரசாரத்தை மேற்கொண்டிருந்தனர். அவரது மிகப்பெரிய ஆதரவாளர் என்று கூறிக்கொண்ட தேவகாந்த் பரூவா கூட, காங்கிரஸ் தலைவர் சந்திரஜித் யாதவின் வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டார். அவரும் இந்திராவை விட்டு விலக நினைத்தார். கட்சியின் மிகவும் மூத்தத் தலைவரான ஜக்ஜீவன் ராம் மற்றும் 1952 முதல் மத்திய அமைச்சராக இருந்த மூத்தத் தலைவர் ஸ்வரண் சிங் ஆகிய இருவரில் யாரை பிரதமராக்கலாம் என்ற விசயத்தில், அந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்ட அமைச்சர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை" என்று எழுதுகிறார்.

சந்திரஜித் யாதவும், தேவ்காந்த் பரூவாவும் அந்தக் கூட்டத்தில் இந்திரா காந்திக்கு எதிரான சூழலை உருவாக்க முயன்று கொண்டிருந்த அதே சமயத்தில், இளைஞர் தலைவர்கள் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர், கிருஷ்ணகாந்த், மோகன் தாரியா போன்றவர்கள் பத்திரிகைகள் மூலமாகவும் பொதுமக்கள் முன்னிலையிலும் இந்திரா காந்திக்கு எதிராக வெளிப்படையாகக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.

கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் மற்றும் பிரதினவ் அனில் ஆகியோர் தங்கள் 'India's First Dictatorship The Emergency, 1975-77' என்ற புத்தகத்தில், "கட்சியைக் காப்பாற்றுவது என்பது பிரதமரின் வாழ்க்கையை விட முக்கியமானது என்று இந்தத் தலைவர்கள் குரல் எழுப்பினார்கள். விசாரணையை எதிர்கொண்டிருக்கும் ஒரு பிரதமரின் தலைமையில் 1976 பிப்ரவரியில் நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட முடியாது என்று கட்சித் தலைவர்கள் கருதினார்கள். அதிலும், இந்திராவை பாதுகாக்க காங்கிரஸ் முன்வந்தால், நாட்டில் புரட்சி ஏற்படும் என்றும், இந்திரா காந்தி மூழ்குவதுடன், அவருடன் சேர்ந்து கட்சியும் மூழ்கிவிடும் என்றே கிருஷ்ண காந்த் நம்பினார்" என்று குறிப்பிட்டுள்ளனர்

எதிர்கட்சியினரின் எதிர்ப்பை விட சொந்தக் கட்சியினரின் கிளர்ச்சியே இந்திராவின் கவலையை அதிகரித்தது

இவை ஒருபுறம் என்றால், இந்திரா காந்திக்கு எதிரான கிளர்ச்சியை ஆதரித்த உத்தரபிரதேச முதலமைச்சர் ஹேம்வதி நந்தன் பகுகுணா மற்றும் கிருஷ்ண காந்த் ஆகியோருடன் ஜக்ஜீவன் ராம் தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

இந்திராவின் ஆதரவாளரான யஷ்வந்த் ராவ் சவாண், கட்சியில் ஒற்றுமையைப் பேணுமாறு மோகன் தாரியாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.

"ஜூன் 12 முதல் 18 வரை, காங்கிரஸ் எம்.பி.க்கள் மத்தியில் ஜக்ஜீவன் ராமுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாகத் தெரிந்தது. கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் அம்ரித் டாங்கே மற்றும் காங்கிரஸ் இடதுசாரித் தலைவர் கே.டி. மாளவியா ஆகியோர் ஜக்ஜீவன் ராமுக்கு ஆதரவு தேடும் பிரசாரத்தை முன்னெடுத்தனர்" என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட் மற்றும் பிரதினவ் அனில் எழுதுகிறார்கள்.

"தனது எதிரிகளை விட, கட்சி உறுப்பினர்களைப் பற்றியே இந்திரா காந்தி அதிகம் கவலைப்பட்டார்" என்று பிரபல பத்திரிகையாளர் நிகில் சக்ரவர்த்தி நம்பினார்.

இந்த நேரத்தில் இந்திரா காந்தியை விட வேறு யாரும் பாதுகாப்பற்றவர்கள் அல்ல என்று அவரது வெளிப்புற எதிரிகளும் உணரத் தொடங்கிய நேரம் அது.

1975 ஆகஸ்ட் ஒன்பதாம் நாளன்று நியூ ரிபப்ளிக்ஸில் ஒரியானா ஃபல்லாசி எழுதிய 'இந்திரா காந்தியை எதிர்க்கும் மொரார்ஜி தேசாய்' என்ற கட்டுரையில் மொரார்ஜி தேசாய் கூறியதை அவர் குறிப்பிடுகிறார். "அவரை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்துவதே எங்கள் நோக்கம். பெண்கள் நாட்டை வழிநடத்த முடியாது என்பதை இந்திரா காந்தியை பார்த்து உறுதியாக நம்புகிறேன். இந்தப் பெண்ணால் எங்கள் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாது."

இந்திராவுக்கும் ஜகஜீவன் ராமுக்கும் இடையிலான நீண்ட கால கருத்து வேறுபாடுகள்

இந்திரா காந்தியை எதிர்ப்பதற்கு இளம் காங்கிரஸ் தலைவர்களுக்கு தனிப்பட்ட காரணங்கள் இருந்தன. ஜெயபிரகாஷ் நாராயணனுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்த மோகன் தாரியாவை மூன்று மாதங்களுக்கு முன்பு தான் இந்திரா காந்தி அமைச்சரவையில் இருந்து நீக்கினார்.

இந்திரா காந்தியின் எதிர்ப்பையும் மீறி 1972 ஆம் ஆண்டு சந்திரசேகர் காங்கிரஸ் செயற் குழுவின் உறுப்பினரானார்.

"இந்திரா காந்திக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று ஜக்ஜீவன் ராம் கூறியது தவறான உறுதிமொழி தான். ஏனெனில் அவர் பிரதமர் பதவியை ஏற்கக் காத்திருந்தார். இந்திராவுக்கும் ஜக்ஜீவன் ராமுக்கும் நீண்ட காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்தன என்பது அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த விசயம்தான்" என்று கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலாட் மற்றும் பிரதினவ் அனில் தங்கள் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கவலையளித்த உளவுத்துறை அறிக்கை

350 காங்கிரஸ் எம்.பி.க்களில் 191 பேரின் ஆதரவு மட்டுமே இந்திரா காந்திக்கு இருப்பதாக உளவுத்துறைத் தகவல்கள் தெரிவித்திருந்தது.

ஷா கமிஷனில் சாட்சியமளித்த இந்திரா காந்தியின் முன்னாள் செயலாளர் பி.என். தார், "அப்போதைய உளவுத்துறை அமைப்பின் இயக்குநர் ஆத்மா ஜெயராம், 350 காங்கிரஸ் எம்.பி.க்களில் 159 எம்.பி.க்கள் கட்சியின் எதிர்தரப்பினரின் ஆதரவாளர்கள் என்று என்னிடம் கூறியிருந்தார்" என்று கூறினார்.

"இளம் தலைவர்களுக்கு 24 எம்.பி.க்களின் அதரவு இருந்தது. யஷ்வந்த்ராவ் சவாணுக்கு 17, ஜக்ஜீவன் ராமுக்கு 13, பிரம்மானந்த் ரெட்டிக்கு 11, கமலாபதி திரிபாடிக்கு 8, ஹேம்வதி நந்தன் பகுகுணாவுக்கு 5, டி.பி. மிஸ்ராவுக்கு 4, ஷியாமா சரண் சுக்லாவுக்கு 3 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தது. இது தவிர, தனிப்பட்ட, அரசியல் மற்றும் பிற காரணங்களால் 15 எம்.பி.க்கள் இந்திரா காந்தியை எதிர்க்கின்றனர்." (ஷா கமிஷன் ஆவணங்கள், பொருள் கோப்பு 1, பக்கம் 25-26)

இந்திரா காந்திக்கு இருதரப்பு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை எழுந்தது. கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் மற்றும் பிரதினவ் அனில் ஆகியோரின் கூற்றுப்படி, "அரசியலமைப்பை திருத்தலாம் என்றால் அதற்கு நாடாளுமன்றத்தில் அவருக்கு தேவையான பெரும்பான்மை இல்லை என்பது முதலாவது பிரச்னை. அடுத்து, இந்திரா காந்தியின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 191 என்பதிலிருந்து 175 அல்லது அதற்கும் குறைவாகிவிட்டால், தங்கள் கட்சியின் வேறொரு தலைவரின் தலைமையை ஏற்றுக் கொண்டு காங்கிரஸ் எம்.பி.க்கள் இந்திராவை கைவிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்ததை நிராகரிக்க முடியாது."

திசை மாறிய காற்று

ஆனால் ஜூன் 18ஆம் தேதிக்குள், காற்று இந்திராவின் பக்கம் வீசத் தொடங்கியது. இதற்குக் காரணம், அதுவரை நிலைமை அமைதியாக அவதானித்துக் கொண்டிருந்த யஷ்வந்த்ராவ் சவாணும், ஸ்வர்ண் சிங்கும் இந்திராவிற்கு சாதகமாக வந்தனர்.

அதற்குள் தனக்கு முன்னால் மாபெரும் சவால் இருப்பதை ஜக்ஜீவன் ராம் உணர்ந்துவிட்டார்.

ஒருபுறம், டெல்லியில் காலியாகவிருக்கும் பதவிக்கு போட்டியாளர்கள் பலர் இருந்தனர் என்றாலும், அவர்கள் போட்டியிட வேண்டியது இந்திரா காந்தியுடன் என்பது முக்கியமானதாக இருந்தது. பிரதமராக அவர் பதவி வகிக்கலாமா என்பதில் சிக்கல் எழுந்திருக்கலாம், ஆனால் கட்சி அமைப்பில் இந்திராவின் பிடி தளரவில்லை.

இந்திராவின் தலைமையின் மீதான நம்பிக்கையை உறுதி செய்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான 'Two faces of Indira Gandhi' புத்தகத்தில் உமா வாசுதேவ் இவ்வாறு எழுதுகிறார், "தலைமைக்கான போட்டியில் இணைந்தால், மிகப் பெரிய நெருக்கடி ஏற்படும் என்பதை ஜக்ஜீவன் ராம் உணர்ந்திருந்தார். அத்துடன் கட்சி மீண்டும் பிளவுபடவும் வாய்ப்பிருந்தது, அதற்கு அவர் தயாராக இல்லை."

ஜக்ஜீவன் ராம் எதிர்க்கவில்லை என்ற தகவல் இந்திரா காந்திக்கு தெரியவந்ததும், அவர் தனது தலைமையின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்த காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு கூட்டத்தை கூட்டுமாறு சித்தார்த்த சங்கர் ரே மற்றும் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் வி.பி. ராஜு ஆகியோரிடம் கேட்டுக் கொண்டார்.

ஜூன் 18 அன்று நடைபெற்ற கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த மொத்தம் 518 காங்கிரஸ் எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இந்திரா காந்தியின் தலைமையின் மீது தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், இந்திராவின் தலைமை நாட்டிற்கு இன்றியமையாதது என்றும் கூறினார்கள்.

ஆரம்பத்தில் சுமார் 70 காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற இளம் காங்கிரஸ் தலைவர் சந்திரசேகருக்கு கட்சியில் ஆதரவு குறையத் தொடக்கியது. ஜெயபிரகாஷ் நாராயணனை பெருமைப்படுத்தும் வகையில் சந்திரசேகர் கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தபோது, 20-25 காங்கிரஸ் உறுப்பினர்கள் மட்டுமே அதில் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் இந்திராவுக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்களுடன் இருந்த ஒடிசா மாநில முதலமைச்சர் நந்தினி சத்பதி, ஜூன் 18ஆம் தேதிக்குள் இந்திரா காந்தியுடன் இணைந்தார். அடுத்த சில நாட்களில், காங்கிரஸ் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்கள் இந்திராவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிக்கத் தொடங்கிவிட்டனர்.

இருந்தபோதிலும் காங்கிரஸ் தலைவர்களிடையே தனக்கு முழு ஆதரவு இல்லை என்பதை இந்திரா காந்தி உணர்ந்தார். இந்த உணர்தலே, அவசரநிலையை அறிவிக்கும் அவரது முடிவுக்கு வலு சேர்த்தது.

எமர்ஜென்சி குறித்த தனது முடிவை மாற்றிக்கொண்ட இந்திரா காந்தி

1975 ஆகஸ்ட் மாதத்திற்குள், நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சி நிலையில் சிறிது தளர்வு அளிக்க அல்லது அதை முற்றிலுமாக நீக்க திட்டமிட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

மழை நன்றாக பெய்தது, பணவீக்கம் மற்றும் வேலையின்மை விகிதம் குறைந்திருந்தது. எதிர்க்கட்சிகள் முற்றிலும் பலவீனமடைந்திருந்தன, அடுத்த ஆறு அல்லது ஏழு மாதங்களில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெறவிருந்தன என எமர்ஜென்சியை தளர்த்தவோ, அகற்றவோ பல காரணங்கள் இருந்தன.

"ஆகஸ்ட் 15 ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றவிருந்த உரையில் இந்திரா காந்தி எமர்ஜென்சி தொடர்பான தளர்வை அல்லது ரத்து செய்வதை அறிவிக்கவிருந்தார், ஆனால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலை வங்கதேசத்தில் நடந்த மோசமான சம்பவம் இந்தியாவின் அரசியல் சமன்பாட்டை மாற்றியது" என்று புபுல் ஜெயகர் எழுதுகிறார்.

ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படுகொலை, இந்திரா காந்திக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செங்கோட்டையில் உரை நிகழ்த்துவதற்கு முன், தனது நண்பர் புபுல் ஜெயக்கரிடம், "நான் யாரை நம்புவது?" என்று இந்திரா காந்தி கேட்டார். வங்கதேசத்தில் நடந்த கொலையின் எதிரொலி, தனது சொந்த பாதுகாப்பைப் பற்றிய இந்திராவின் கவலைகளை அதிகரித்தது.

இந்திராவின் உயிருக்கு ஆபத்து

1975 ஆகஸ்ட் 19ஆம் நாளன்று, எதிர்க்கட்சியைச் சேர்ந்த என்.ஜி. கோருக்கு வங்கதேசத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட்டு எழுதிய கடிதத்தில், "உயிருக்கு ஆபத்து அதிகரித்துள்ள நேரத்தில், அவசரநிலையைத் தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை" என்று எழுதினார்.

"ஷேக் முஜிபுர் ரஹ்மான் படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, 'The Day of the Jackal' பாணியில் இந்திரா காந்தியைக் கொல்லும் நோக்கத்துடன் இருந்த தஜா ராம் சாங்வான் என்ற ராணுவ கேப்டன், டெலஸ்கோபிக் துப்பாக்கியுடன் பிடிபட்டார்" என்று குல்தீப் நாயர் தனது 'தி ஜட்ஜ்மென்ட்' புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

அதே ஆண்டு மார்ச் 18ஆம் தேதி, எமர்ஜென்சிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, இந்திரா காந்தி சாட்சியமளிக்க ஆஜராக வேண்டியிருந்த அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துப்பாக்கியுடன் இருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, இந்தியாவில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்தியதன் பின்னணியில், அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர, இந்திரா காந்தியின் தலைமைக்கு எதிரான சவால், காங்கிரஸின் உட்கட்சிப்பூசல், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஜே.பி.யின் இயக்கம் மற்றும் இந்திரா காந்தியின் உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் என பல முக்கியமான காரணங்கள் இருந்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு