காணொளி: ஹெச்-1பி விசாக்களுக்கு பெரும் தொகை கேட்கும் டிரம்ப் அரசு - புதிய உத்தரவு என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திறன்சார் வெளிநாட்டு பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசாவுக்கான கட்டணத்தை 1,00,000 அமெரிக்க டாலராக உயர்த்தி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளார். ஒரு லட்சம் அமெரிக்க டாலர் என்பது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்.
இனி புதிய கட்டணத்தை செலுத்தவில்லையென்றால் திறன்சார் வெளிநாட்டு பணியாளர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது.
ஹெச்-1பி திட்டம் அமெரிக்க பணியாளர்களுக்கு பாதகமாக இருப்பதாக அதை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். ஆனால், ஈலோன் மஸ்க் உள்ளிட்ட இத்திட்டத்தின் ஆதரவாளர்கள் இது உலகம் முழுவதுமிருந்து திறமைசாலிகளை அமெரிக்காவிற்குள் அழைத்து வர அனுமதிப்பதாக வாதிடுகின்றனர்.
"ஹெச்-1பி விசாக்களுக்கு வருடத்திற்கு 1 லட்சம் டாலர் கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு அனைத்து பெரிய நிறுவனங்களும் ஒப்புதல் தெரிவித்துள்ளன என அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் கூறினார்.
நம்முடைய வேலையை எடுத்துக் கொள்ள வெளியிலிருந்து ஆட்களை அழைத்து வருவதை நிறுத்துங்கள் . நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்க வேண்டுமென்றால் நமது நாட்டிலுள்ள சிறப்பான பல்கலைக்கழகங்களிலிருந்து வரும் பட்டதாரிகளுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அமெரிக்கர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
டிரம்பின் உத்தரவு செப்டம்பர் 21 முதல் அமலுக்கு வர உள்ளது. இது புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். நிறுவனங்கள் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் ஆறு ஆண்டுகளுக்கு அதே தொகையை செலுத்த வேண்டும் என்றும் லுட்னிக் தெரிவித்தார்.
2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக 85,000 ஹெச்-1பி விசாக்கள் வழங்கப்படுகிறது. தற்போது வரை ஹெச்-1பி விசாக்களுக்கு நிர்வாக கட்டணமாக1,500 டாலர் வசூலிக்கப்பட்டு வருகிறது.
வாட்சன் இம்மிக்ரேஷன் லாவின் நிறுவனரான வழக்கறிஞர் தாஹ்மினா வாட்சன் பிபிசியிடம் பேசுகையில், இந்த புதிய உத்தரவு தனது வாடிக்கையாளர்களான சிறு வணிக நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்களுக்கு "சவப்பெட்டியில் அடித்த ஆணி" போல எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கே 1 லட்சம் டாலர் கட்டணம் என்பது நாசகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என கூறும் அவர், பணியிடங்களை நிரப்ப முடியாததால்தான் நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்கின்றன என்கிறார்.
ஹெச்-1பி திட்டத்தின் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது இந்தியா போன்ற நாடுகளில் குறிப்பிடத்தகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அமெரிக்காவுக்கு ஹெச்-1பி விசா கேட்டு விண்ணப்பங்கள் அதிகம் வரும் நாடுகளில் இந்தியா முன்னணி வகிக்கிறது.
குறிப்பாக தனியார் மென்பொருள் நிறுவனங்கள் மத்தியில் இந்த அறிவிப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



