ரஷ்யாவுக்குள் தொடர்ந்து முன்னேறும் யுக்ரேன் ராணுவம் - என்ன நடக்கிறது?
ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் தொடர்ந்து முன்னேறும் யுக்ரேன் சீயம் நதியின் மேல் அமைந்துள்ள புவிசார் முக்கியத்துவம் கொண்ட பாலம் ஒன்றை அழித்துள்ளது.
ரஷ்யா இந்த பாலத்தை தங்களின் படைகளை நகர்த்தி செல்ல பயன்படுத்தியது. எனவே இந்த பாலத்தை அழிப்பது ரஷ்யாவின் முயற்சிகளுக்கு இடையூராக அமையும்.
குர்ஸ்கில் தங்களின் படைகளை வலுப்படுத்துவதாக தெரிவித்துள்ள யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி, தங்கள் கட்டுப்பாடில் உள்ள பகுதிகளை கொண்டு ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்கப்போவதாக தெரிவித்தார்
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து முதல் முறையாக யுக்ரேன் ரஷ்யாவிற்குள் இத்தனை தூரம் சென்று தாக்குதல் நடத்தி வருகிறது.
யுக்ரேனின் இந்த தாக்குதல் நடவடிக்கையால் இதுவரை ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
யுக்ரேன், ரஷ்யாவில் சில பகுதியை தங்களின் கட்டுப்பாடிற்குள் வைத்திருந்தாலும், ரஷ்யாவை ஆக்கிரமிக்கும் எண்ணம் தங்களுக்கு இல்லை என யுக்ரேன் தெரிவித்து வருகிறது.
ரஷ்ய பிராந்தியங்களை ஆக்கிரமிக்கும் எண்ணம் யுக்ரேனுக்கு இல்லை என யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கியின் மூத்த உதவியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
யுக்ரேனின் இந்த நடவடிக்கையின் இலக்கு பேச்சுவார்த்தையில் எங்களின் தரப்பும் ஆலோசிக்கப்பட வேண்டும் என்பதே என மிகைலோ பொடோல்யாக் தெரிவித்துள்ளார்.
குர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு நியாயமான பேச்சுவார்த்தையில் ரஷ்யாவை ஈடுபடுத்த ராணுவம் எப்படி பயன்படுகிறது என்பதை நாம் கண்கூடாக பார்க்கலாம் என அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யுக்ரேன் ராணுவத்தின் தலைவர் ஒலக்சாண்டர் சிர்ஸ்கி, யுக்ரேன் தனது தாக்குதலில் முன்னேறியுள்ளதாக வெள்ளியன்று தெரிவித்தார்.
படைகள் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன. சில இடங்களில் எதிரிகளை நோக்கி ஒன்றிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் வரை நாம் முன்னேறியுள்ளோம் என அவர் யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கியிடம் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
எல்லையிலிருந்து சுமார் 13கிமீ தூரத்தில் இருக்கும் மலா லோகன்யா என்ற கிராமத்தில் பலரை சிறைப்பிடிப்போம் என நம்புவதாக சிர்ஸ்கி தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதால் யுக்ரேன் எல்லையை ஒட்டியுள்ள ரஷ்யாவின் பெல்கராட் பிராந்தியத்தில் திங்களன்று மேலும் ஐந்து கிராமத்தை சேர்ந்த மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க அவர்களை வெளியேற்றவிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் மேற்கு பகுதியில் யுக்ரேன் முன்னேறி வரும் அதே வேளையில் யுக்ரேனின் கிழக்கு பகுதியில் ரஷ்ய படைகள் முன்னேறி வருகின்றன.
வெள்ளியன்று ரஷ்யா தனது படைகள் செர்ஹிவ்கா நகரை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. சமீப வாரங்களில் ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட நகரங்களில் இதுவும் ஒன்று.
முன்னதாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் யுக்ரேனின் டோனெட்ஸ்க் பகுதியில் யுக்ரேன் வணிக வளாகம் ஒன்றின் மீது நடத்திய தாக்குதலில் ஏழு பேர் வரை காயமடைந்துள்ளதாக ரஷ்யாவால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



