காணொளி: மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கலந்துக்கொண்ட கூட்டத்தில் நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, மோதி முன்னிலையில் மேடையில் நடந்தது என்ன?
காணொளி: மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் கலந்துக்கொண்ட கூட்டத்தில் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் வெள்ளிக்கிழமையான இன்று நடைபெற்றது. இதில், பிரதமர் மோதி, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

2024 மக்களவை தேர்தலை அதிமுக, பாஜக தனித்தனியே எதிர்கொண்ட நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலுக்காக இருகட்சிகளும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளன. இந்தக் கூட்டணியில் வேறு எந்த பெரிய கட்சிகளும் இணையாமல் இருந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, கடந்தாண்டு செப்டம்பரில் என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து விலகிய டிடிவி தினகரனும் மீண்டும் கூட்டணியில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதையடுத்து, அனைத்து கூட்டணி தலைவர்களும் ஒரே மேடையில் இன்று தோன்றினர். இந்தக் கூட்டத்தில் பேசிய அமமுகவின் டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை அண்ணன் என குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் நலன் கருதி இந்தக் கூட்டணியில் மீண்டும் இணைந்ததாக டிடிவி தினகரன் கூறினார்.

பின்னர் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனை சகோதரர் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலின் குடும்ப அரசியல் செய்வதாக விமர்சித்தார்.

மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும் வழங்கவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவலை கூறுவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியின் போது மத்திய அரசு எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாட்டுக்கு வழங்கியதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசுடன் தாங்கள் இணக்கமாக இருந்ததே காரணம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பின்னர் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, திமுக அரசை முடிவுக்கு கொண்டு வருவதற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என கூறினார்.

தமிழ்நாட்டில் டபுள் இஞ்சின் அரசு ஆட்சிக்கு வரும் என்றும் தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, ஊழலற்ற, பாதுகாப்பான மாநிலமாக மாற்றுவோம் என்றும் பிரதமர் மோதி கூறினார்.

பின்னர் இந்த விமர்சனத்துக்கு எக்ஸ் தளத்தில் பதிலளித்த முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின், பிரதமர் சொல்லும் "டபுள் எஞ்சின்" எனும் "டப்பா எஞ்சின்" தமிழ்நாட்டில் ஓடாது. மாண்புமிகு பிரதமர் அவர்களே… ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. என தெரிவித்தார்.

பின், எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் மற்றும் அன்புமணி ராமதாஸ் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, தனக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்துவிட்டதாக கூறினார்.

டிடிவி தினகரன் பேசும் போது இருவரும் இணைய வேண்டும் என அமித் ஷா கேட்டுக்கொண்டதாகவும், 2017 வரை அண்ணன் தம்பியாக இருந்தது போல தற்போது இணைந்துள்ளதாக கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு