காணொளி: வெனிசுவேலாவின் எண்ணெய் கையிருப்புகளை அமெரிக்கா கட்டுப்படுத்த முடியுமா?
"உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவிடம் வரப் போகின்றன. அவை உலகிலேயே மிகப்பெரியவை. பில்லியன் கணக்கான டாலர்களை செலவழித்து, கடுமையாக சேதமடைந்த உள்கட்டமைப்பை, எண்ணெய் உள்கட்டமைப்பை சரிசெய்து, நாட்டுக்காக பணம் சம்பாதிக்கப் போகிறோம்."
அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த பின் அமெரிக்க அதிபர் டிரம்ப் சொன்ன வார்த்தைகள் இவை.
ஆனால், டிரம்பின் இந்த திட்டத்தில் மிகப் பெரிய சவால்கள் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்கா உண்மையில் வெனிசுவேலாவின் எண்ணெய் கையிருப்புகளை கட்டுப்படுத்த முடியுமா? டிரம்பின் திட்டம் வெற்றி பெறுமா?
மிகப்பெரிய எண்ணெய் கையிருப்பு
சுமார் 303 பில்லியன் பேரல் அளவிலான எண்ணெய் இருப்புகளுடன், உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் கையிருப்புகளை கொண்ட நாடாக வெனிசுவேலா உள்ளது. ஆனால், இதோடு ஒப்பிடுகையில் தற்போது இங்கு உற்பத்தியாகும் எண்ணெய் அளவு மிகக் குறைவு.
சர்வதேச ஆற்றல் முகமை (International Energy Agency) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின் படி, நவம்பர் மாதத்தில் வெனிசுவேலா தினமும் சுமார் 8 லட்சத்து 60 ஆயிரம் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பான அதன் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இது மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவு.
2000-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் இருந்து எண்ணெய் உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளது. அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான PDVSA மீது முன்னாள் அதிபர் ஹூகோ சாவேஸ், அதன் பின் மடூரோ நிர்வாகம் கட்டுப்பாட்டை கடுமையாக்கியதன் விளைவாக, அனுபவம் வாய்ந்த பலரும் அந்நிறுவனத்தை விட்டு வெளியேறினர்.
அமெரிக்க நிறுவனமான செவ்ரான் உட்பட சில மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் வெனிசுவேலாவில் செயல்பட்டு வந்தாலும், அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தி எண்ணெய் ஏற்றுமதிகளை குறிவைத்ததன் காரணமாக, அவர்களின் செயல்பாடுகளும் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளன. இது, மதுரோவின் முக்கிய பொருளாதார ஆதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகும்.
முதன்முதலில் 2015‑இல் ஓபாமா நிர்வாகத்தின்போது வெனிசுவேலா மீது தடைகள் அமல்படுத்தப்பட்டன.
நிபுணர்கள் சொல்வது என்ன?
"வெனிசுவேலாவுக்கு உள்ள உண்மையான பெரிய சவால், அவர்களின் உட்கட்டமைப்புதான்," என இன்வெஸ்டெக் நிறுவனத்தின் பொருட்கள் பிரிவு தலைவர் கேலம் மெக்ஃபர்சன் கூறுகிறார்.
Kpler நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளர் ஹோமயூன் ஃபலக்ஷாஹி கூறுகையில், "வெனிசுவேலாவின் எண்ணெய் கையிருப்புகளை பயன்படுத்த விரும்பும் எண்ணெய் நிறுவனங்களுக்கு சட்ட மற்றும் அரசியல் சார்ந்தவை முக்கிய தடைகளாக இருக்கும்" என்றார்.
பிபிசி-யிடம் பேசிய அவர், வெனிசுவேலாவில் எண்ணெய் எடுக்க விரும்புபவர்கள் அரசுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டியிருக்கும், மதுரோவுக்குப் பிறகு, புதிய ஆட்சி அமையும் வரை அது சாத்தியமில்லை என்றார்.
மேலும், எதிர்கால வெனிசுவேலா அரசின் நிலைத்தன்மையை நம்பி, நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்வது ஒரு பெரிய சூதாட்டமாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.
வெனிசுவேலாவின் முந்தைய எண்ணெய் உற்பத்தி அளவை மீட்டெடுக்க பல பில்லியன் டாலர்கள் செலவாகும் என்றும், அதற்கு ஒரு தசாப்தம் வரை ஆகலாம் என்றும் பகுப்பாய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கேபிடல் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் குழு தலைமை பொருளாதார நிபுணர் நீல் ஷீரிங் கூறுகையில், "டிரம்பின் இந்த திட்டங்கள் உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும், எண்ணெய் விலையிலும் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்தும்." என்றார்.
மேலும் பேசிய அவர், "இதற்கு எடுக்கும் காலம் மிகவும் அதிகம். அதனால் 2026ல் ஆண்டில் எண்ணெய் விலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை" எனவும் பிபிசி-யிடம் தெரிவித்தார்.
மேலும் "முன்பை போல தினமும் சுமார் 30 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தி செய்தாலும் கூட, வெனிசுவேலா உலகின் முன்னணி 10 எண்ணெய் உற்பத்தியாளர்கள் பட்டியலில் இடம்பெறாது" என்கிறார் அவர்.
செவ்ரானின் பங்களிப்பு
வெனிசுவேலாவில் தற்போது செயல்பட்டு வரும் ஒரே அமெரிக்க எண்ணெய் நிறுவனம் செவ்ரான்.
வெனிசுவேலாவின் மொத்த எண்ணெய் எடுப்பில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு செவ்ரான் வசமுள்ளது. ஊழியர்களின் பாதுகாப்புக்கே முன்னுரிமை எனவும் இது தொடர்பான அனைத்து சட்டங்களையும், விதிமுறைகளையும் முழுமையாக பின்பற்றி செயல்பட்டு வருகிறோம் எனவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுபற்றி மற்ற எண்ணெய் நிறுவனங்கள் பொதுவெளியில் மௌனம் காத்து வருகின்றன.
ஆனால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வது பற்றி எண்ணெய் நிறுவனங்களின் தலைவர்கள் உள்மட்டத்தில் ஆலோசனை நடத்தி வருவதாக பலக்ஷாஹி கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



