சிக்கன் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகரிக்கும் என்பது உண்மையா?

சிக்கன் உடல் சூட்டை அதிகரிக்குமா? கோடைக் காலத்தில் சாப்பிடலாமா? நிபுணர் விளக்கம்

கோடைக்காலத்தில் சிக்கன் அதிகமாகச் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரித்துவிடும் என்ற பொதுவான எச்சரிக்கை நம் வீடுகளில் பரவலாகச் சொல்லப்படுகிறது. இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுவது என்ன?

“சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி, மீன், பன்றி என எந்த அசைவ உணவைச் சாப்பிடும்போதும் உடலின் வெப்பநிலை சிறிதளவு அதிகரிக்கும். உணவின் வெப்ப விளைவு (Thermic Effect) என்று இது அழைக்கப்படுகிறது. ஆனால், அது உடலை எந்த விதத்திலும் பாதிக்காது. அது செரிமான செயல்முறையின் ஒரு பகுதியே. அசைவ உணவுகளில் கிடைக்கும் கலோரிகளில் சுமார் 20-25% அவற்றின் செரிமானத்திற்கே பயன்படுத்தப்படும்” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.
நமது உடல், அதன் உட்புற வெப்பநிலையை 98.6°F என்ற அளவைச் சுற்றியே பராமரிக்க கடுமையாக உழைக்கிறது. இந்தச் செயல்முறை வெப்ப ஒழுங்குமுறை என்று அழைக்கப்படுகிறது. இது உயிர் வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது.
“ஹைபோதாலமஸ் என்ற மூளையின் ஒரு சிறிய பகுதி, நமது உட்புற உடல் வெப்பநிலையை தொடர்ந்து கண்காணித்து சரிசெய்கிறது. உடலைக் குளிர்விக்க, வியர்த்து, சருமத்திற்கு அதிக ரத்தத்தை அனுப்புகிறது, வெப்பத்தை வெளியிடுகிறது. சூடாக்க, நடுக்கத்தை ஏற்படுத்துகிறது, வெப்பத்தைத் தக்கவைக்க ரத்த நாளங்களைச் சுருக்குகிறது” என்று விளக்கினார் ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா அஷோக்.
மேற்கொண்டு பேசிய அவர், “ஒருவர் உண்ணும்போது, உடல் அதை ஜீரணிக்க ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இந்தச் செயல்முறைதான் உணவின் வெப்ப விளைவு. கோழி போன்ற புரதம் நிறைந்த இறைச்சி உணவுகளை ஜீரணிக்க அதிக ஆற்றல் தேவை. அதனால் உடலில் சிறிய அளவில் வெப்பம் உருவாகும். ஆனால், அது மொத்த ஆற்றல் பயன்பாட்டில் சுமார் 10% மட்டுமே என்பதால் கவலையடையத் தேவையில்லை” என்றார்.
வல்லுநர்களின் கூற்றுப்படி, ஓர் உணவை செரிமானம் செய்வதற்காக உடல் பயன்படுத்தும் ஆற்றலின் விளைவாக வெப்ப விளைவு ஏற்படுகிறது. சைவ உணவுகளில் கிடைக்கும் புரதத்தைவிட, அசைவ உணவுகளில் கிடைக்கும் புரதம் செரிமானம் ஆகும்போது வெப்ப விளைவு சற்று அதிகமாக இருக்கும்.
முனைவர் மீனாட்சி பஜாஜின் கூற்றுப்படி, எந்த இறைச்சி உணவாக இருந்தாலும், சாப்பிட்ட பிறகு சூடாக உணர்வது இயல்புதான். "அசைவ உணவுகளைச் சாப்பிடும்போது வியர்த்துக் கொட்டுவதை உணர்ந்திருப்போம். அது தற்காலிகமானது. அதற்குக் காரணம் செரிமான செயல்முறை நடக்கும்போது உற்பத்தியாகும் வெப்பம்தான். இந்தச் சூடு ஆரோக்கியத்தை பாதிக்காது.”
சிக்கன் சாப்பிட்ட பிறகு உடலின் வெப்பநிலை
எப்படி மாறுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எலிகளை வைத்து ஒரு பரிசோதனையை நடத்தினர். அதில் பிற உணவுகளைவிட சிக்கன் சாப்பிடும்
நேரத்தில் வெப்ப விளைவு உடலில் அதிகமாக இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், சிக்கனில் புரதத்தை மட்டுமே சாப்பிடும் வேளையில், வெப்ப விளைவால் உடல் சூடாகும் அளவு குறைவாக இருந்தது உணரப்பட்டதாக
இந்த ஆய்வு கூறுகிறது.
படக்குறிப்பு, உணவு உண்ட பிறகு உடலில் நடக்கும் வெப்ப விளைவு தொடர்பாகக் கடந்த 2013ஆம் ஆண்டில், எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில் சிக்கன் சாப்பிடும்போது வெப்பநிலை ஓரளவுக்கு அதிகரிப்பது உணரப்பட்டது.
“சராசரியாக ஒரு நபர் ஒரு நாளுக்கு 85 கிராம் அல்லது ஒரு வாரத்திற்கு 600 கிராம் வரை புரதம் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இதில், பருப்பு, சுண்டல் போன்ற சைவ உணவுகள், சிக்கன், மீன், மட்டன், மாட்டிறைச்சி போன்ற அசைவ உணவுகள் என அனைத்தும் கலந்திருக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் முனைவர் மீனாட்சி பஜாஜ்.
கோடையில் சிக்கன் சாப்பிடுவது தீங்கல்ல. அதனுடன் அதிக பழங்கள், காய்கறிகளையும் சேர்த்து உணவுமுறையைச் சீராகப் பராமரிக்க வேண்டும். அதிக தண்ணீர் மற்றும் ஆரோக்கியமான திரவங்களைப் பருக வேண்டும் என்று வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஊட்டச்சத்து நிபுணர் ரம்யா, "காற்றோட்டம் இல்லாத ஆடைகளை அணிவது, வெப்பமான காலநிலைக்கு அதிகமாக வெளிப்படுவது, நீர்ச்சத்தை இழப்பது, காரமான அல்லது எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிடுவது போன்ற காரணிகளே உடல் சூட்டை அதிகரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன," என்று எச்சரிக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு