You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வடக்கு மாசிடோனியாவில் கேளிக்கை விடுதியில் தீ விபத்து: 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு
வடக்கு மாசிடோனியாவில் இரவுநேர கேளிக்கை விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும்,155க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஸ்கோப்ஜேவிலிருந்து கிழக்கே 100 கிமீ (60 மைல்) தொலைவில் உள்ள கோக்கானி(Kocani) என்ற இடத்தில் உள்ள பல்ஸ் கிளப்பில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள காட்சிகள் கட்டடம் தீப்பிடித்து எரிவதையும், இரவு வானத்தில் புகை பரவுவதையும் காட்டுகின்றன.
சேனல் 5 தொலைக்காட்சி ஊடகத்துக்கு பேட்டியளித்த மரிஜா டசேவா எனும் 20 வயதான பெண் கூறுகையில், விபத்து ஏற்பட்டவுடன் அனைவரும் வெளியே செல்ல முயன்றதால், நெரிசலில் சிக்கிக் கொண்டதாகவும் பின்னர் எப்படியோ வெளியேறியதாகவும் தெரிவித்தார்.
அவருடைய 25 வயது சகோதரியை அவரது குடும்பம் இன்னும் தேடிவருகிறது. அவரை எந்த உள்ளூர் மருத்துவமனையிலும் கண்டுபிடிக்க முடியவில்லை, அவர் மேல் சிகிச்சைக்காக ஸ்கோப்ஜே மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.
வாண வேடிக்கை சம்பந்தப்பட்ட பொருட்களிலிருந்து தீ பரவியிருக்கலாம் என, முதல்கட்ட தகவல்களின்படி தெரியவந்துள்ளதாக உள்துறை அமைச்சர் பான்ஸ் டோஸ்கோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கோகனி காவல் நிலையம் முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்களால் ஆன கூரை மீது தீப்பொறி விழுந்ததால் கிளப் முழுவதும் தீ பரவியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக, நான்கு பேருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இசைக்குழு நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தபோது கூரையில் தீப்பற்றி வேகமாக பரவியதை காணொளி காட்சிகள் வழியாக பார்க்க முடிகிறது.
இந்த விபத்து தொடர்பாக, "தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும், தீப்பற்றியதற்கான காரணம் குறித்து கண்டறியப்படும் என்றும்" பிரதமர் ஹ்ரிஸ்டிஜன் மிக்கோஸ்கி தெரிவித்தார்.
"நாட்டுக்கு மிகவும் கடினமான, வேதனையான நாள் இது," என அவர் தெரிவித்தார்.
கோகனி மருத்துவமனையில் முதல்கட்டமாக 90 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுள் பலருக்கு படுகாயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுள் 18 பேர் மோசமான நிலையில் உள்ளதாக, சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பலரும் மேல் சிகிச்சைக்காக ஸ்கோப்ஜேவில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் பிரபலமான ஹிப்-ஹாப் இரட்டையர் இசைக்குழுவான ஏ.டி.என் (ADN) நடத்திய நிகழ்ச்சியின் போது அங்குள்ள நேரப்படி அதிகாலை 3:00 மணியளவில் (02:00 GMT) தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. விபத்து நேரிட்டு சில மணிநேரம் கடந்த பின்னரும் கூட அங்கே தீ இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது.
இசை நிகழ்ச்சியில் 1,500 பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இசை நிகழ்ச்சி நடந்த மேடையில் வாண வேடிக்கை சாதனங்களை பயன்படுத்தியதால் தீப்பற்றியிருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், மேடையில் இருந்து வெளிப்பட்ட பொறியால் கூரையில் தீப்பற்றி வேகமாக பரவும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)