புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்

பட மூலாதாரம், Ajeeb Komachi
- எழுதியவர், மெரில் செபாஸ்டியன்
- பதவி, பிபிசி நியூஸ், கொச்சி
கேரளாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் காலமானார், அவருக்கு வயது 91.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன் மூச்சுத்திணறல் காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அனைவராலும் கொண்டாடப்படும் எழுத்தாளராக மட்டுமல்லாமல், புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் திகழ்ந்தார்.
மலையாள எழுத்துலகில் முன்னோடியாகக் கருதப்படும் வாசுதேவன் நாயரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'
- ரஜினிகாந்த்: 'தலைமுறைகள் கடந்த வெற்றிக்குக் காரணம் இதுதான்' - அலசும் பிரபலங்கள், எழுத்தாளர்கள்
- இசைவாணி 6 ஆண்டுகளுக்கு முன்பு பாடிய ஐயப்பன் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்?
- பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து 'நாம் மதமற்றவர்கள்' என்று 167 ஆண்டுக்கு முன்பே முழங்கிய 14 வயது சிறுமி

தீவிர வாசிப்பாளரான வாசுதேவன்
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் 1933-ம் ஆண்டு பிறந்த வாசுதேவன் நாயரின் குடும்பத்தில் வாசிப்பு என்பது ஊக்குவிக்கப்படவில்லை என்றாலும், அவர் தீவிர வாசிப்பாளராக இருந்தார். மிக இளம் வயதிலேயே எழுதத் தொடங்கினார். பல்வேறு இதழ்களில் அவருடைய படைப்புகள் வெளியாகின.
"என் வயதையொத்த சிறுவர்களை போன்று, எனக்கு விளையாட்டில் அவ்வளவாக ஆர்வம் இல்லை. நான் தனிமையில் விளையாடும் ஒரே விளையாட்டு 'எழுதுவதுதான்'," என 'அவுட்லுக்' இதழுக்கு அளித்த பேட்டியில் வாசுதேவன் நாயர் தெரிவித்திருந்தார்.
கல்லூரியில் வேதியியல் படித்த அவர், பள்ளி மாணவர்களுக்கு கணிதம் கற்பித்தார். பின்னர் அவர், புகழ்பெற்ற மாத்ருபூமி வார இதழில் பணிக்கு சேர்ந்தார். விரைவிலேயே, பல நாவல்கள், சிறுகதைகள் தொகுப்பு, செய்தித்தாள்களில் கட்டுரைகள், நினைவுக்குறிப்புகள் மற்றும் பயணக் கட்டுரைகள் என, எழுத்தாளராகவும் பத்திரிகை ஆசிரியராகவும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.
பத்திரிகை ஆசிரியராக பல இளம் எழுத்தாளர்களை கண்டறிந்து, அவர்களின் எழுத்துகளை வெளியிட்டதற்காக வாசுதேவன் நாயர் அதிகம் பாராட்டப்படுகிறார். அந்த இளம் எழுத்தாளர்கள் பலர் தற்போது பிரபலமானவர்களாக உள்ளனர்.
புகழ்பெற்ற புத்தகங்கள்
நாயரின் 'நாலுகெட்டு' எனும் நாவல், கூட்டுக் குடும்பங்கள் குறைந்துவருவது குறித்துப் பேசுகிறது. இந்த நாவலுக்கு 1959-ம் ஆண்டுக்கான கேரளாவின் உயர் இலக்கிய விருது கிடைத்தது. பத்தாண்டுகள் கழித்து, இந்த புத்தகத்தைத் தழுவி, அரசாங்கத்தின் தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக படமாக எடுக்கப்பட்டது. அப்படத்திற்கு மாநில அரசின் விருது கிடைத்தது.
இந்து புராணமான மகாபாரதத்தை பீமன் கதாபாத்திரத்தின் வாயிலாக கூறிய 'ரந்தமூழம்' எனும் நாவல், இந்திய இலக்கியத்தில் மிக உன்னதமான படைப்பாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Pinarayi Vijayan/X
தன்னுடைய வாழ்நாளில் ஞானபீடம் உள்ளிட்ட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.
இலக்கியத்தைத் தாண்டி மலையாள சினிமாவில் திரைக்கதையாசிரியராகவும் இயக்குநராகவும் புகழ்பெற்று, பல தேசிய மற்றும் மாநில விருதுகளை வென்றுள்ளார்.
கேரளாவில் 16-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்ட 'ஒரு வடக்கன் வீரகதா' திரைப்படத்தில், பிரபலமான நாட்டுப்புறக் கதையில் வில்லத்தனம் மற்றும் கௌரவம் ஆகியவை குறித்த பொதுவான கருத்தை கேள்விக்குட்படுத்தியிருப்பார்.
மிக வலுவான வசனங்கள் மற்றும் நடிப்புகளுடன் மலையாள சினிமாவின் மிகச்சிறந்த படமாக இது கருதப்படுகிறது.
பிரபலங்கள் கூறுவது என்ன?
சமீபத்தில் அவருடைய சிறுகதைகளை தழுவி, மனோரதங்கள் என்ற பெயரில் திரை-தொடர் உருவாக்கப்பட்டு வருகிறது. அதில் கமல்ஹாசன், மம்முட்டி, மோகன் லால், ஃபஹத் ஃபாசில் போன்ற தென்னிந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.
இந்த தொடரில் நடித்த மோகன்லால், நாயரை 'கேரளாவின் பெருமை' என்று அழைத்துள்ளார்.
"நீங்கள் எந்த ஒரு படத்திலும் அதன் வசனத்தை மாற்ற இயலும். ஆனால் எம்.டி.நாயரின் படத்தில் வரும் வசனங்களை மாற்ற இயலாது. ஏனெனில், கதையை புரிந்துகொள்வதற்கு அவரின் வசனங்கள் மிக முக்கியம்," என்றார் மோகன்லால்.
நேர்காணல்களில் வாசுதேவன் நாயர் பேசும் போது, அடிக்கடி அவர் படிக்கும் புத்தகங்கள் பற்றி பேசுவார்.
கடந்த ஆண்டு அவர் தன்னுடைய 90வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்துகள் தெரிவிக்கும் படி எழுதிய கட்டுரையில், மாத்ரூபூமியின் நிர்வாக இயக்குநர் ஸ்ரேயம்ஸ் குமார், "வாசுதேவன் நாயர் எப்போதும் புத்தகங்களை மீண்டும் மீண்டும் வாசிப்பார்", என்று குறிப்பிட்டிருந்தார்.
"நான் உட்பட வருங்கால சந்ததியினர் நாயரிடம் இருந்து எதைக் கற்றுக்கொள்ளலாம் என்று யோசிப்பேன். அது நிச்சயமாக அவருடைய கவனம் சிதறாமல் இருக்கும் போக்கு தான். அவரை நான் பார்க்கும் போது, புத்தகங்களுடனே காணப்படுவார். அதில் மொத்தமாக மூழ்கி, கிட்டத்தட்ட ஒரு தவம் மேற்கொள்வது போல் புத்தகங்கள் படிப்பார். மார்குய்ஸ் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் மற்றுமின்றி, சமீப காலங்களில் வெளியான புத்தகங்களும் அவருடைய மேசையில் எப்போதும் இருக்கும்," என்று எழுதினார் ஸ்ரேயம்ஸ் குமார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












