You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் கைது செய்யப்படுவாரா? கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக 4 பேர் மீது வழக்குப்பதிவு
கரூரில் தவெக தலைவர் விஜயின் பரப்புரைக் கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது. பரப்புரை நடந்த இடத்தில் பொதுமக்கள் அணிந்து வந்த ஆயிரக்கணக்கான செருப்புகள், துண்டுகள், தண்ணீர் பாட்டில்கள் சிதறி கிடந்தன.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்பட நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் சென்றார். மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்ட அமைச்சர்கள் கரூரிலேயே முகாமிட்டுள்ளனர். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் கரூர் செல்கிறார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் கரூர் சென்ற வண்ணம் உள்ளனர்.
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும் என தவெக சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதே சமயம் விஜய் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் மறுத்துள்ளார்.
கரூரில் என்ன நடக்கிறது?
தவெக குற்றச்சாட்டுகளை மறுக்கும் காவல்துறை
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
அதே சமயம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வைக்கப்பட்ட குற்றச்சாட்டையும் மின்வாரிய அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
செய்தியாளர்களிடம் பேசிய டேவிட்சன் தேவாசீர்வாதம், "23-ஆம் தேதி கொடுத்த கடிதத்தில் முதலில் லைட் ஹவுஸ் ரவுண்டானாவில் அனுமதி கேட்டார்கள். ஆனால் அங்கு ஒருபுறம் மிகப்பெரிய எரிபொருள் நிலையம் ஒன்றும் மறுபுறம் அமராவதி ஆறும் உள்ளது. அதனால் அங்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறவே உழவர் சந்தையை கேட்டார்கள். அது மிகவும் குறுகலான பகுதி. காவல்துறை வேலுசாமிபுரத்தை பரிந்துரைத்தபோது அவர்கள் ஏற்றுக்கொண்டு தான் அனுமதி வழங்கப்பட்டது. 500 காவல்துறையினர் காவல் பணியில் ஈடுபட்டனர்."
"கல் எறிந்ததாக எந்தச் சம்பவமும் இல்லை. பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை. குறித்த நேரத்திற்கு அவர் (விஜய்) வரவில்லை. நாமக்கலில் இருந்து புறப்பட்டு கரூர் ரவுண்டானாவை அடைவதற்கு 6 மணி ஆகிவிட்டது. அங்கிருந்து பிரசாரம் நடைபெறும் இடத்திற்குச் செல்ல 1 மணி நேரம் ஆனது. இதனால் வழியில் இரு தரப்பும் கூடியிருந்தவர்கள் பிரசார இடம் நோக்கிச் சென்றதும் சிக்கலுக்கு காரணமானது."
"கூட்டம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்திற்கு 50 மீட்டருக்கு முன்பே நிறுத்திக் கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஒருங்கிணைப்பாளர்கள் அதற்கும் மறுத்துவிட்டனர். பிரசார இடத்தை நெருங்கியும் 10 நிமிடங்களுக்கு மேல் யாராலும் அவரைப் பார்க்க முடியவில்லை. அதனால் இடது புறமும் வலது புறமும் மக்கள் நகர்ந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது." என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் நேரில் ஆறுதல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவோடு இரவாக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனைக்குச் சென்றார். அங்கே, உடற்கூறு செய்யப்பட்ட 5 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அவர், உறவுகளை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களிடம் அவர் நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கனத்த இதயத்தோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். நேற்று(27/09/2025) இரவு 7.45 மணி அளவில் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்த போது கரூரில் அரசியல் பிரசாரத்தில் பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தது. உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அனுப்பி வைத்தேன். அடுத்ததாக கலெக்டரை தொடர்புகொண்டு அவரை அனுப்பினேன். அடுத்தடுத்து மரணச்செய்தி அதிகமானதால் அருகில் உள்ள மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன். அன்பில் மகேஷ், மற்றும் டி.ஜி.பி.,யை அனுப்பி வைத்தேன். அடுத்தடுத்த வந்த துயரச்செய்திகள் எனது மனதை கலங்கடித்தது. மூத்த அமைச்சர் எ.வ.,வேலுவுடன் தலைமை செயலகத்தி்ல் ஆலோசனை நடத்தினேன்." என்றார்.
'ஒரு நபர் விசாரணை ஆணையம்'
மேலும் தொடர்ந்த அவர், "ஒரு அரசியல் கட்சி நடத்திய கூட்டத்தில் இத்தனை பேர் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இனிமேல் இதுபோன்று நடக்கக்கூடாது. இறந்தவர்களுக்கு நான் என்ன ஆறுதல் சொல்வேன். இறந்தவர்களுக்கு 10 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும்.
தொலைக்காட்சியில் இந்த கொடூரமான காட்சிகளை கண்டபோது என்னால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை உடனே கிளம்பி வந்துவிட்டேன். ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்." என்றார்.
விஜய் கைது செய்யப்படுவாரா?
விஜய் கைது செய்யப்படுவாரா? என்று செய்தியாளர் ஒருவர் முதல்-அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "அதற்கு தான் உயர்நீதிமன்றத்தினுடைய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்படிருக்கிறது. அந்த ஆணையம் விசாரித்து முழுமையாக சொல்லும். இதற்கிடையில், நீங்கள் கேட்பது போல அரசியல் நோக்கத்தோடு எதையும் நான் சொல்ல விரும்பவில்லை. மீண்டும்மீண்டும் இதை தான் சொல்லப் போகிறேன். ஆணையம் அதற்காக தான் அமைத்திருக்கிறோம். ஆணையத்தின் மூலம் உண்மை வெளிவரும். உண்மை வெளி வரும்போது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறினார்.
தமிழக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலையிலேயே கரூர் அரசு மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, அங்கே சிகிச்சை பெறுபவர்களிடம் நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததே இந்த அசம்பாவிதத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார்.
"முந்தைய கூட்டங்களில் திரண்ட கூட்டத்தை ஆய்வு செய்து அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருக்க வேண்டும். என்னுடைய பரப்புரைக் கூட்டங்களுக்கும் கூட 3, 4 மாவட்டங்களைத் தவிர மற்ற இடங்களில் போதிய பாதுகாப்பு தரப்படவில்லை. தொலைக்காட்சியில் பார்க்கும் போதே அங்கே பாதுகாப்பு ஏற்பாடுகள் சரிவர செய்யப்படவில்லை என்பது தெரிகிறது. மின் வெட்டு ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வந்துள்ளன. கூட்டத்திற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறை செய்திருக்க வேண்டும். ஆளுங்கட்சி கூட்டங்களுக்கு தரப்படுவதைப் போல எதிர்க்கட்சிகளின் கூட்டங்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை " என்று அவர் குற்றம்சாட்டினார்.
விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை
மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி தவெக தலைவர் விஜய்க்கும் ஆலோசனை கூறினார். "அரசியல் கட்சித் தலைவரும் நிலைமையை புரிந்து கொண்டு ஆலோசித்து செயல்பட்டிருக்க வேண்டும். கூட்டத்திற்கு பல மணி நேரம் கழித்து தாமதமாக வருவதை தவிர்க்க வேண்டும். அனுபவமுள்ள பழைய கட்சிகளைப் பார்த்து புதிய கட்சிகள் கூட்டம் நடத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டும். " என்று அவர் அறிவுறுத்தினார்.
புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு
விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்தது தொடர்பாக தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புஸ்ஸி ஆனந்த், மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்மல்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விஜய் வீட்டருகே என்ன நடக்கிறது?
சென்னை நீலாங்கரையில் தவெக தலைவர் விஜயின் வீடு உள்ள சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். த.வெ.க. தொண்டர்கள் தொடர்ந்து அங்கு வருகை தந்த வண்ணம் இருப்பதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டிற்கு மத்திய ரிசர்வ் காவல் படையினர் வந்துள்ளனர். ஏற்கெனவே அவருக்கு மத்திய அரசின் சார்பில் 'ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படையினர் விஜய் வீட்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக தகவல் பரவிய நிலையில் அக்கட்சியின் நிர்வாகிகள் சென்னையில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபானியின் இல்லத்தில் முறையிட்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தவெகவின் இணைப் பொதுச் செயலாளரான சிடிஆர் நிர்மல்குமார், "நாளை மதியம் 2.15 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. அதன் பின்னர் எங்கள் கருத்தை தெரிவிக்கிறோம்." என்றார்.
பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு
கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 52 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 11 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கின்றனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் - நயினார் நாகேந்திரன்
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களை பாஜக தலைவர்கள் நேரில் சந்தித்தனர். அப்போது தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "கரூரில் நடந்துள்ள துயரமான சம்பவம் இந்தியாவையே உலுக்கியிருக்கிறது. குழந்தைகள் உயிரிழந்திருப்பது துயரமான சம்பவம். இந்தச் சம்பவத்தை உச்சநீதிமன்ற அமர்வு நேரடியாக விசாரணை நடத்த வேண்டும். உடனடியாக யாரையும் குறை சொல்ல முடியாது. தீர விசாரிக்க வேண்டும். அதனால் தான் நீதிமன்றம் உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறுகிறோம்." என்று தெரிவித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "ஒரு காலத்தில் நாங்களும் காவல்துறைக்கு எதிராக பேசியிருக்கிறோம். இது போன்ற பெரும் திரளை திரட்டும் போது காவல்துறைக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது கட்டாயம் என்பதை உணர்ந்திருக்கிறோம். காவல்துறையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாம் செயல்படுகிற போது ஓரளவுக்காவது பாதிப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பாதுகாப்பு வழங்குவதற்கு காவல்துறை தவறிவிட்டது என்று நாம் போகிற போக்கில் சொல்லிவிட முடியாது." என்றார்.
"கடந்த 30 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரைத் திரட்டி மாநாடு, பேரணி நடத்தி உள்ளோம். நமக்குத்தான் தெரியும் எவ்வளவு மக்கள் வருகிறார்கள் என்று. காவல்துறையினர் யூகத்தின் அடிப்படையில் அதை தீர்மானிக்க முடியாது. நாம் சொல்கிற அளவிற்கு ஏற்ப இடத்தையும் பாதுகாப்பையும் வழங்குவார்கள். நம்மை நோக்கி வருபவர்கள் எத்தகைய சக்தியும் துடிப்பும் உள்ளவர்களாக இருக்கிறார்கள், ஒரே இடத்தில் எத்தனை பேர் திரளுவார்கள், ஒரே இடத்தில் நீண்ட நேரம் தேங்க வைப்பது எவ்வளவு ஆபத்தானது உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு ஒரு கட்சித் தலைவர் அதற்கான செயல் திட்டங்களை வரையறுக்க வேண்டும் என்பதுதான் நான் கற்றுக் கொண்ட பாடம்." என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசு, தவெக நிவாரணம் அறிவிப்பு
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது மத்திய அரசின் சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சமும் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்க பிரதமர் மோதி அறிவித்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதே போல கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசல் தொடர்பாக நீண்ட பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தவெக தலைவர் விஜயையும் நிவாரணம் அறிவித்துள்ளார்.
தவெக சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு