பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை கரம் பிடித்த இந்திய பெண்ணை அந்நாட்டு காவல்துறை தேடுவது ஏன்?

இந்தியா - பாகிஸ்தான், எல்லை தாண்டிய காதல், சரப்ஜித் கவுர்

பட மூலாதாரம், Lawyer Ahmad Pasha

படக்குறிப்பு, பாகிஸ்தான் சென்று மதம் மாறி காதலரை மணம் முடிந்த இந்திய பெண்
    • எழுதியவர், எத்தேஷாம் ஷமி
    • பதவி, பிபிசி உருது

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், நவம்பர் 13 அன்று விசா காலாவதியான பிறகும் இந்தியாவுக்குத் திரும்பாத ஒரு இந்தியப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

அந்தப் பெண் சீக்கிய யாத்திரீகர்களுடன் பாகிஸ்தான் வந்துள்ளார். பிறகு ஒரு பாகிஸ்தான் குடிமகனை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் ஷேக்புரா மாவட்ட காவல்துறை அதிகாரி பிலால் ஜாஃபர் ஷேக் கூறுகையில், 48 வயதான சரப்ஜித் கவுர் என்ற சீக்கியப் பெண், பாகிஸ்தான் குடிமகன் நசீர் ஹுசைனை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, இருவரும் தலைமறைவாகி விட்டனர் என்று குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களைத் தேடி வரும் நிலையில், விசாரணைக்குப் பிறகு தான் முழு தகவலும் கிடைக்கும் என்று போலீசார் கூறுகின்றனர்.

சரப்ஜித் கவுர் நவம்பர் 4 ஆம் தேதி சீக்கிய யாத்திரீகர்களுடன் பாகிஸ்தானுக்கு சென்றார். மறுநாள் பாபா குரு நானக்கின் பிறந்தநாளை முன்னிட்டு நன்கானா சாஹிபுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.

நவம்பர் 7 அன்று, அவர் ஷேக்புரா மாஜிஸ்திரேட் முன்பு தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார்.

அதில், தன்னுடைய விருப்பத்தால் இஸ்லாத்திற்கு மாறி, நசீர் ஹுசைன் என்ற பாகிஸ்தான் குடிமகனை திருமணம் செய்ததாக அவர் கூறியிருந்தார்.

அவரது வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா, இந்தத் திருமணம் சம்பந்தப்பட்ட ஷேக்குபுரா யூனியன் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

சரப்ஜித் கவுரும் நசீர் ஹுசைனும் சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமானவர்கள் என்றும் அவர் கூறுகிறார்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்து கொண்டார்

சரப்ஜித் கவுர் 48 வயதுடையவர் என்று கருதப்படுகிறது.

பட மூலாதாரம், Police

படக்குறிப்பு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருமணச் சான்றிதழின்படி, நசீர் ஹுசைன் 43 வயதுடையவர் என்றும், சரப்ஜித் கவுர் 48 வயதுடையவர் என்றும் கருதப்படுகிறது.

நவம்பர் 15 அன்று, "இரு நாடுகளின் அதிகாரிகளின் முன்னிலையில் அவர்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இருவரையும் எனது அறைக்கு அழைத்தேன். ஆனால் அவர்கள் வரவில்லை, இப்போது நசீர் ஹுசைனின் கைபேசியும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது"என்று வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா கூறினார்.

'தங்களுக்கு எதிராக ஏதேனும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் அவர்கள் இருக்கலாம் ' என்றும் அவர் தெரிவித்தார்.

சரப்ஜித் கவுரின் விசா இன்னும் நீட்டிக்கப்படவில்லை என்றும், இந்த விவகாரம் குறித்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் பாஷா கூறினார்.

இந்த மனு திங்கட்கிழமை விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது.

ஷேக்புரா காவல்துறையினரின் கூற்றுப்படி, சரப்ஜித் மற்றும் நசீர் ஹுசைன் ஆகியோரை கண்டுபிடிக்க அதிகாரிகள் குழு ஃபரூக்காபாத்துக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அங்குள்ள வீடு பூட்டப்பட்டிருந்தது.

நசீர் ஹுசைன் மற்றும் அவரது குடும்பத்தினர் எங்கே இருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை என்று போலீசார் கூறுகின்றனர்.

ஷேக்புரா மாஜிஸ்திரேட் முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, சரப்ஜித் கவுர் இஸ்லாத்தைத் தழுவி 'நூர்' என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

அவர் இஸ்லாத்திற்கு மாறியதற்கான சான்றிதழ் நவம்பர் 5 அன்று வழங்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட திருமணச் சான்றிதழில், நசீர் ஹுசைனின் வயது 43 என்றும், திருமணச் சான்றிதழின்படி, டொவர் (இஸ்லாம் முறைப்படி கணவர் தனது மனைவிக்கு வழங்கும் பணம்) தொகை ரூ.10,000 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

மேலும், நசீர் ஹுசைன் ஏற்கெனவே திருமணமானவர் என்றும், இரண்டாவது திருமணத்திற்கு அவர் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

'எனக்கு அவரை ஒன்பது வருடங்களாகத் தெரியும்'

 உதவி காவல் கண்காணிப்பாளர் திரேந்திர வர்மா

பட மூலாதாரம், Pradeep Sharma/BBC

படக்குறிப்பு, கபுர்தலா உதவி காவல் கண்காணிப்பாளர் திரேந்திர வர்மா

சரப்ஜித் கவுர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் கபுர்தலா மாவட்டத்தில் வசிப்பவர். அங்கு வழக்கு விசாரணையில் இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் தகவல்படி, அவர் சுமார் 2,000 சீக்கிய யாத்திரீகர்களைக் கொண்ட குழுவில் ஒருவராக இருந்துள்ளார்.

10 நாள் பயணத்தை முடித்து அனைத்து யாத்திரீகர்களும் நவம்பர் 13 அன்று இந்தியா திரும்பினர். ஆனால் சரப்ஜித் கவுர் அவர்களுடன் திரும்பவில்லை.

சரப்ஜித்தின் மதமாற்றம் உறுதிப்படுத்தப்படவில்லை என்று கபுர்தலா காவல்துறை ஏஎஸ்பி திருமேந்திர வர்மா தெரிவித்தார். 2024 ஜனவரியில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்திய ஊடகங்களின் தகவல்படி, சரப்ஜித் விவாகரத்து பெற்றவர். முந்தைய திருமணத்தின் மூலம் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். முன்னாள் கணவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

கிராம தலைவரிடம் இருந்து இந்த விவரங்கள் அவருக்குக் கிடைத்ததாக கபுர்தலா மாவட்டம் தல்வண்டி சவுதாரியன் கிராம எஸ்.எச்.ஓ நிர்மல் சிங் தெரிவித்தார். சரப்ஜித் கவுரின் குடும்பத்தினருடன் இன்னும் போலீசார் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், வழக்கறிஞர் அகமது ஹசன் பாஷா பிபிசியுடன் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார். அதில், சரப்ஜித் தாம் விவாகரத்து பெற்றவர் என்றும், தன்னுடைய விருப்பத்தால் இஸ்லாத்தைத் தழுவி நசீர் ஹுசைனை திருமணம் செய்ததாகவும் கூறுகிறார். அவரை ஒன்பது ஆண்டுகளாக தனக்குத் தெரியும் என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

சரப்ஜித் மற்றும் நசீர் இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்ததாக வழக்கறிஞர் பாஷா கூறினார்.

காவல்துறையினர் துன்புறுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

சரப்ஜித் மற்றும் நசீர் இருவரும் இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகி, ஆறு மாதங்களுக்கு முன் திருமணம் செய்ய முடிவு செய்ததாக வழக்கறிஞர் பாஷா கூறினார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, நசீர் ஹுசைனை ஒன்பது வருடங்களாகத் தெரியும் என்று சரப்ஜித் கூறுகிறார்.

இந்த வழக்கில், பாகிஸ்தான் காவல்துறை மிரட்டல் விடுத்து பொய்யான வழக்கைப் பதிவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் முன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சரப்ஜித் கவுர் தன் விருப்பத்தால் நசீர் ஹுசைனை திருமணம் செய்ததாக தெரிவித்தார்.

"என்னை யாரும் கடத்தவில்லை, நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் திருமணம் செய்து கொண்டேன். நான் என் பெற்றோரின் வீட்டிலிருந்து மூன்று ஆடைகள் மட்டுமே எடுத்துக்கொண்டு வந்தேன், வேறு எதுவும் இல்லை" என்று அவர் கூறியுள்ளார்.

"எனது திருமணத்தால் போலீசார் மிகவும் கோபமாக உள்ளனர், நவம்பர் 5 ஆம் தேதி இரவு 9 மணிக்கு, போலீஸ் அதிகாரிகள் எங்கள் வீட்டுக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து என்னை அவர்களுடன் வரச் சொன்னார்கள், ஆனால் நான் மறுத்தபோது அவர்கள் கோபமடைந்தனர்"என்றும் அவர் கூறியுள்ளார்.

தனக்கும் தனது கணவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு சரப்ஜித் கவுர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மறுபுறம், ஷேக்புரா காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராணா யூனிஸ் பிபிசி உருதுவிடம் கூறுகையில், காவல்துறை சரப்ஜித் கவுரையோ அல்லது அவரது பாகிஸ்தான் கணவரையோ துன்புறுத்தவில்லை என்றார்.

"இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு முரணானவை, காவல்துறைக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று கூறிய அவர்,

"இந்த விஷயம் உணர்திறனுடையது(Sensitive) என்பதால், பல்வேறு முகமைகளும் இதைப் பரிசீலித்து வருகின்றன, மேலும் பாகிஸ்தானின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு