மெக்காவில் காபா அருகே வரும் பிரமாண்டமான 'கிங் சல்மான் கேட்' எதற்காக தெரியுமா?

பட மூலாதாரம், @PIF_en
- எழுதியவர், சாரா ஹாசன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
செளதி அரேபிய நகரமான மெக்காவில் 'கிங் சல்மான் கேட்' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இதன் கீழ் மஸ்ஜித் அல்-ஹராம் (கானா-இ-காபா) சுற்றி நான்கு புறமும் விரிவாக்கம் செய்வதன் மூலம் மேலும் ஒன்பது லட்சம் பேர் தொழுகை நடத்த முடியும் என்று கூறப்படுகிறது.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் புதன்கிழமை இந்த திட்டத்தை அறிவித்ததாக செளதி அரேபியாவின் அரசு செய்தி நிறுவனமான செளதி கெஜட் தெரிவித்தது.
நகர்ப்புற உள்கட்டமைப்பை மாற்றும் திட்டம் இது என்று செளதி கெஜட் தெரிவித்துள்ளது, இருப்பினும் மெக்கா நகரின் மையப்பகுதியில் கட்டப்படும் இந்த திட்டம் எப்போது நிறைவடையும் அதற்கு எவ்வளவு பணம் செலவிடப்படும் என்பது தெரிவிக்கப்படவில்லை.
மேற்கு செளதி அரேபியாவின் மெக்கா நகரின் மையத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அல்-ஹராம், இஸ்லாத்தின் மிகப்பெரிய மற்றும் புனிதமான மசூதியாகக் கருதப்படுகிறது.
சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இந்த மசூதி தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு தற்போது, 15 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவில் விரிவடைந்துள்ளது. இது 30 லட்சம் மக்கள் தொழுகை நடத்துமளவிற்கு பரந்து விரிந்துள்ளது.
மஸ்ஜித் அல்-ஹராமின் மையத்தில் காபா உள்ளது, இஸ்லாமிய நம்பிக்கையின்படி, இது அல்லாஹ்வை வணங்குவதற்காக பூமியில் உருவாக்கப்பட்ட முதல் இடமாகும். ஹஜ் மற்றும் உம்ராவுக்காக ஆண்டுதோறும் கோடிக்கணக்கான மக்கள் இந்த இடத்திற்கு வருகை தருகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், செளதி அரசாங்கம் விசா மற்றும் பயண வசதிகளை மேம்படுத்திய பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து ஆண்டு முழுவதுமே மெக்கா மற்றும் மதீனாவுக்கு மக்கள் வருகை தருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
கிங் சல்மான் கேட் திட்டம் என்றால் என்ன?
மெக்காவில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராமின் சுற்றுப்பகுதியில் அறிவிக்கப்பட்டுள்ள கிங் சல்மான் கேட் திட்டத்தின் நோக்கம், மெக்காவிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களுக்கு நவீன வசதிகளை வழங்குவது என செளதி கெஜட் கூறுகிறது.
ஆன்மீகப் பயணத்துடன், மெக்காவின் கலாசாரத்தை நெருக்கமாகப் பார்க்கும் வாய்ப்பையும் இங்கு வருபவர்களுக்கு வழங்குவதே இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.
செளதி அரேபிய அரசாங்க செய்தி நிறுவனத்தின்படி, இந்த திட்டம், ஒரு கோடியே இருபது லட்சம் சதுர மீட்டர் அளவில் செயல்படுத்தப்படும்.
'கிங் சல்மான் கேட்' திட்டம் மஸ்ஜித் அல்-ஹராமுக்கு அருகிலுள்ள ஒரு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உருவாக்கப்படுகிறது, அங்கு மெக்காவிற்கு வருகை தரும் மக்களுக்கு தேவையான தங்குமிடம் மற்றும் பிற வசதிகள் செய்து தரப்படும்.
'கிங் சல்மான் கேட்'பகுதியை, மஸ்ஜித் அல்-ஹராமுடன் இணைக்க பொதுப் போக்குவரத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்படும்.
இந்தத் திட்டத்திற்கான பணிகளை செளதி நிறுவனமான ரூஹ் அல்-ஹராம் அல்-மக்கி மேற்கொள்ளும்.
சர்வதேச ரியல் எஸ்டேட் தரத்தை மனதில் கொண்டு இங்கு வசிப்பவர்கள் மற்றும் யாத்ரீகர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பணிகளை இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாக செளதி செய்தி நிறுவனம் கூறுகிறது.
செளதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், தன்னுடைய 'எக்ஸ்' சமூக ஊடக வலைத்தளப் பக்கத்தில் 'கிங் சல்மான் கேட்' திட்டத்தின் காணொளியை வெளியிட்டுள்ளது.
இந்த காணொளியில், மலைகளுக்கு மத்தியில் மெக்கா நகரில் உள்ள மஸ்ஜித் அல்-ஹராமைச் சுற்றி ஒன்றுபோல் கட்டப்பட்ட டஜன்கணக்கான பல மாடி கட்டடங்கள் இருப்பதைக் காணலாம்.
இந்த காணொளி, மெக்காவைச் சுற்றியுள்ள ஒரு புதிய, நவீன நகரத்தைக் குறிப்பதாகத் தெரிகிறது. அதில் சந்தைகள், தெருக்கள் மற்றும் ஏராளமான உயரமான, பல மாடி கட்டடங்கள் உள்ளன. மெக்கா நகரின் முக்கிய நுழைவுப் பகுதி மற்றும் சுற்றுப்புற வசதிகள் நவீனமயப்படுத்தப்பட உள்ளன.
செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட இந்த காணொளியில், கட்டடத்தில் உள்ளவர்கள் ஜமாஅத் எனப்படும் கூட்டுத் தொழுகை நடத்துவதைக் காணலாம்.
இந்த திட்டம் புனித நகரமான மெக்காவிற்கான பல்நோக்கு திட்டம் என்று பொது முதலீட்டு நிதியம் கூறுகிறது.
மெக்காவின் பழைய மற்றும் புதிய வடிவமைப்புகளின் கலவையான இந்தத் திட்டம், 2036-ஆம் ஆண்டுக்குள் மூன்று லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என செளதி கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியாவின் விஷன் 2030 மற்றும் பிற திட்டங்கள்
செளதி அரேபியாவின் பொருளாதாரம் பெரும்பாலும் எண்ணெய் வருவாயைச் சார்ந்துள்ளது.
2017-ஆம் ஆண்டில், செளதி அரேபியா தனது பொருளாதாரம் எண்ணெய் சார்ந்திருப்பதைக் குறைக்கும் நோக்கில், விஷன் 2030 திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களில் டிரில்லியன்கணக்கான அமெரிக்க டாலர்கள் அளவிலான மூலதன முதலீடுகள் செய்யப்படுகின்றன.
செளதி இளவரசர் முகமது பின் சல்மான் 2017-ஆம் ஆண்டு தொலைநோக்குப் பார்வையுடன் இந்தத் திட்டத்தை அறிவித்தார், இதில் ஒரு நகரத்தை நவீனமாக விரிவுபடுத்தும் திட்டமும் அடங்கும்.
செளதி அரேபியாவின் பொருளாதாரத்திற்கு ஹஜ் யாத்திரை குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, 2019-ஆம் ஆண்டில், செளதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ரா மூலம் 12 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான வருவாய் ஈட்டியது.
செளதி அரேபியா, விஷன் 2030 திட்டத்தின் கீழ், ஆண்டுதோறும் ஹஜ் மற்றும் உம்ரா யாத்ரீகர்களின் எண்ணிக்கையை 30 மில்லியனாக அதிகரிக்க விரும்புவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
'கிங் சல்மான் கேட்' திட்டத்தின் மூலம், செளதி அரசாங்கம் மெக்கா நகரத்திற்கு நவீன வசதிகளை வழங்குவதோடு, அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், இந்த திட்டம் ஹஜ் மற்றும் உம்ராவிற்கு வரும் மக்களுக்கு மேம்பட்ட வசதிகளையும் வழங்கும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












