இறுதிப்போட்டியில் பாகிஸ்தான்: இந்தியா ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை வெல்லுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், தினேஷ்குமார்
- பதவி, பிபிசி தமிழுக்காக
ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில், பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதின. பைனலுக்கு யார் செல்லப் போகிறார்கள் என்பதை முடிவு செய்யும் ஆட்டம் என்பதால், ஓர் அரையிறுதி ஆட்டம் போலவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது. இந்தியாவுடன் நேற்று முன்தினம் விளையாடிய வங்கதேசம், ஓய்வு நாள் இன்றி 24 மணி நேரத்திற்குள்ளாகவே அடுத்த பலப்பரீட்சையில் களமிறங்கியது. லிட்டன் தாஸ் முழுமையான உடற்தகுதியை எட்டாததால், நேற்றும் விக்கெட் கீப்பர் ஜாக்கர் அலியே வங்கதேசத்தை வழிநடத்தினார்.
டாஸ் வென்ற ஜாக்கர் அலி, சேசிங்கிற்கு சாதகமான துபை மைதானத்தில் பாகிஸ்தான் அணியை பேட் செய்ய பணித்தார். வங்கதேச அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவுக்கு எதிராக களமிறங்கிய சைபுதீன், நசும், தன்சித் ஆகியோர் நீக்கப்பட்டு, மெஹதி ஹசன், நூருல் ஹசன், டஸ்கின் அஹமது ஆகியோர் சேர்க்கப்பட்டனர். சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த ஆட்டத்தில் களமிறங்கிய அதே அணியுடன் களமிறங்கியது. காற்றில் ஈரப்பதம் காணப்பட்டதால் தொடக்க ஓவர்களில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழல் இருக்குமென எதிர்பார்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணியில், ஃபகார் ஜமானும் ஃபர்ஹானும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். டஸ்கின் அஹமதுவின் மூன்றாவது பந்திலேயே, பாயிண்ட் திசையில் பவுண்டரி அடித்து ரன் கணக்கை ஃபர்ஹான் துவக்கிவைத்தார். ஆனால், அனுபவ வேகப்பந்து வீச்சாளரான டஸ்கின், அடுத்த பந்தை இன்னும் கொஞ்சம் முழு நீளத்தில் வீச, மீண்டும் ஸ்கொயர் திசையில் அடிக்கும் முயற்சியில் ரிசாத் ஹுசைனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மிக மோசமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் சைம் அயூப் மூன்றாவது விக்கெட்டுக்கு உள்ளே வந்தார். நேற்றும் அவருக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவிலை என்றுதான் சொல்ல வேண்டும். ஆஃப் ஸ்பின்னர் மெஹதி ஹசனின் பந்தை, மிட் ஆன் தலைக்கு மேல் அடிக்கப் பார்த்து, சரியான டைமிங் கிடைக்காததால் மிட் ஆஃபில் ரிசாத் ஹுசைனிடம் கேட்ச் கொடுத்து ரன் ஏதுமின்றி நடையைக்கட்டினார். இது இந்த தொடரில், இவருடைய நான்காவது 'டக் அவுட்' ஆகும்.
டி20 கிரிக்கெட்டில் அதிகமுறை டக் அவுட்டான பாகிஸ்தான் வீரர்கள் வரிசையில் சைம்(9) இரண்டாமிடத்தில் உள்ளார். முதலிரு ஓவர்களில் இரண்டு விக்கெட்களை பறிகொடுத்த நிலையில், நான்காவது விக்கெட்டுக்கு கேப்டன் சல்மான் அகா களமிறங்கினார். பாகிஸ்தானை வழிநடத்தும் தகுதியில்லை என பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் விமர்சித்து வரும் நிலையில், முக்கியமான ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட வேண்டிய நெருக்கடி சல்மானுக்கு இருந்தது. புதிய பந்தில் கிடைத்த பளபளப்பையும் ஸ்விங்கையும் பயன்படுத்தி வங்கதேச பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர்.
பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி, 27 ரன்களை மட்டுமே எடுத்தது. ரன் ரேட்டை உயர்த்தும் நெருக்கடியில் லெக் ஸ்பின்னர் ரியாத் ஹுசைன் பந்தில் இன்சைட் அவுட் ஷாட் அடிக்க முயன்று லாங் ஆஃப் திசையில் கேட்ச் கொடுத்து ஜமான் (13) விக்கெட்டை இழந்தார். சமீபமாக நல்ல ஃபார்மில் இருந்த ஜமானும் விரைவில் ஆட்டமிழந்ததால், பாகிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
பிட்ச் அவ்வளவு மோசமாக இல்லை என்ற போதும் பாகிஸ்தான் பேட்டர்கள் அடிப்படை விஷயங்களை சரியாக செய்யாததால் தங்களுக்கு தாங்களே குழி தோண்டிக்கொண்டனர். பவுண்டரிகள் கிடைக்காத நிலையில், ஒற்றை, இரட்டை ரன்களை ஓடி எடுக்க வேண்டும் என்ற பாலபாடத்தையே அவர்கள் மறந்திருந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டலாட் (3) விக்கெட்டையும் ரியாத் ஹுசைன் கைப்பற்ற, 10 ஓவர்களில் பாகிஸ்தான் 4 விக்கெட்களை பறிகொடுத்த, 47 ரன்களை மட்டுமே எடுத்து தடுமாறியது.
வழக்கம்போல கட்டுக்கோப்பான லைன் அண்ட் லென்த்தில் வீசிய முஸ்தாபிசுர் ரஹ்மான், ஒரு கட்டர் பந்தில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகாவின்(19) விக்கெட்டை கைப்பற்றினார். ஆல்ரவுண்டர்கள் ஃபஹீம், நவாஸ் ஆகியோருக்கு முன்பாக ஏழாவது விக்கெட்டுக்கு ஷாஹீன் ஷா அப்ரிடி களமிறக்கப்பட்டார். நுழைந்த நொடி முதலே பேட்டை சுழற்றிய அப்ரிடிக்கு, ரியாத் ஹுசைனின் ஓவரில் மூன்று முறை அதிர்ஷ்டம் கைகொடுத்தது.
முதல் சில பந்துகளில் பெரிய ஷாட் ஒன்றும் வாய்க்காத நிலையில், தன்ஷிம், டஸ்கின் ஓவர்களில் சிக்சர்கள் விளாசிய அப்ரிடி, டஸ்கினின் ஃபுல் டாஸ் பந்தில் வீழ்ந்தார். அதே ஓவரில் நவாஸ் விக்கெட்டும் கிடைத்திருக்கும். ஆனால், எளிதான கேட்ச்சை எமோன் தவறவிட்டால், அது சிக்சராக மாறியது. தொடக்கத்தில் நன்றாக பீல்டிங் செய்த வங்கதேசம், இறுதிக்கட்டத்தில் சொதப்ப தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா உள்பட எல்லா அணிகளுமே பீல்டிங்கில் குறிப்பாக கேட்ச் பிடிப்பதில் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.
விக்கெட்கள் சரிந்தாலும் மறுபுறம் மிடில் ஓவர்களில் தாக்குப்பிடித்து விளையாடிய அதிரடி பேட்டர் முகமது ஹாரிஸ் (31), மெஹதி ஹசனின் கடைசி ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரன் ஏதுமில்லாத போது கேட்ச் வாய்ப்பு தவறவிடப்பட்ட நவாஸ்25(15) இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாட, இன்னிங்ஸ் முடிவில் பாகிஸ்தான், 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. வங்கதேசம் தரப்பில் அதிகபட்சமாக டஸ்கின் அஹமது 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். மெஹதி ஹசன், ரிசாத் ஹுசைன் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பட மூலாதாரம், Getty Images
ஸ்கோர் குறைவாக இருந்ததால் பெரிதாக ரிஸ்க் எடுக்க விரும்பாத அப்ரிடி, வழக்கமான முழு நீளத்தில் வீசப் பார்க்காமல், பேக் ஆஃப் எ லென்த் பந்துகளில் தொடங்கினார். பொறுமை இல்லாத எமோன் லெக் திசையில் பிக்–அப் ஷாட் ஆட முயன்று நவாஸ் கைகளில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் ஓவரிலேயே விக்கெட்டை இழந்த நிலையில், மூன்றாவது விக்கெட்டுக்கு ஹிருதோய் களமிறங்கினார். நேற்று முன்தினம் இந்தியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சைஃப் இரண்டாவது ஓவரில் ஃபஹீம் அஷ்ரஃப் பந்தில் சிக்சர் விளாசினார். பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவி கிடைத்ததால், கொஞ்சம் முன்னதாகவே ஹாரிஸ் ரவுஃபிடம் கேப்டன் சல்மான் அகா பந்தை கொடுத்தார். ஆனால், ரவுஃபின் முதல் ஓவரிலேயே சைஃப் சிக்சரும் பவுண்டரியும் பறக்கவிட்டார்.
தொடர்ச்சியாக அப்ரிடி மூன்று ஓவர்களை தொடக்கத்திலேயே வீசிய அப்ரிடி, ஒரு முழு நீளப் பந்தில் ஹிருதோய்(5) விக்கெட்டை வீழ்த்தினார். வங்கதேச பேட்டர்களின் ஷாட் தேர்வு மிகவும் மோசமாக இருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆல்ரவுண்டர் மெஹதி ஹசன், அப்ரிடி பந்தில் லெக் சைடில் ஒரு ஹூக் ஷாட் அடித்து கவனம் ஈர்த்தார். முதல் ஓவரில் வாங்கிய அடிக்கு பழிதீர்க்கும் விதமாக, இரண்டாவது ஓவரில் சைஃப்பின்(18) விக்கெட்டை ராஃப் தூக்கினார்.
ஐந்தாவது விக்கெட்டுக்கு இறங்கிய நூருல் ஹசனை ஒரு அட்டகாசமான லென்த் பந்தின் மூலம் ரவுஃப் வரவேற்க பேட் விளிம்பில் பட்ட பந்து, எட்ஜாகி தேர்ட் மேன் திசையில் சிக்சருக்கு பறந்தது. பாகிஸ்தான் போலவே மோசமாக தொடங்கிய வங்கதேசம், பவர்பிளே முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து 36 ரன்களுக்கு தடுமாறியது.

பட மூலாதாரம், Getty Images
பவர்பிளே முடிந்த கையோடு இரு முனைகளிலும் அப்ரார், நவாஸ் என பாகிஸ்தான் சுழல் தாக்குதல் தொடுத்தது. ஃபிளைட் கொடுத்து மேலே தூக்கிப்போட்ட பந்தில் நவாஸ் தூண்டில் போல, இறங்கிவந்த மெஹதி ஹசன் இன்சைட் அவுட் அடிக்கப் பார்த்து டலாட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். குறைவான இலக்கை வைத்துக்கொண்டு வங்கதேச பேட்டர்கள் ஏன் அபாயகரமான ஷாட்களை ஆடி ஆட்டமிழந்தனர் என்பது புரியாத புதிராக இருந்தது.
ஆறாவது விக்கெட்டுக்கு இறங்கிய ஷமிம் ஹொசைன், அப்ரார் அஹமது பந்தில் சிக்சர் அடிக்க, 10 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்களை இழந்து 58 ரன்களை எடுத்திருந்தது. பாகிஸ்தான் இதே கட்டத்தில் 47 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்ததால், ஆட்டம் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் நகரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
பேட்டிங்கில் சொதப்பிய சைம் அயூப், பெரிய ஷாட்டுக்கு சென்ற நூருல்(16) விக்கெட்டை கைப்பற்ற, அணியை மீட்க வேண்டிய பொறுப்பு கேப்டன் ஜாக்கர் அலி வசம் சென்றது. ஆனால், சைம் அயூப் பந்தில் கண்ணை மூடிக் கொண்டு சுற்றி லாங் ஆஃபில் கேட்ச் கொடுத்து கிளம்ப, ஆட்டம் பாகிஸ்தான் பக்கம் நகர்ந்தது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் நிதானமாக விளையாடிய ஷமிம், அப்ரார் பந்தில் சிக்சர் விளாச, கடைசி 5 ஓவர்களில் 51 ரன்கள் தேவைப்பட்டது. 4 விக்கெட்டுகள் மட்டுமே கைவசம் இருந்த நிலையில், வங்கதேச ரசிகர்களின் கடைசி நம்பிக்கையாக ஷமிம் ஹொசைன் மாறினார். அப்ரிடி தனது கடைசி ஓவரில் புத்திசாலித்தனமான குறைவேகப்பந்து மூலம், ஷமிம் விக்கெட்டை காலி செய்ய வங்கதேசத்தின் நம்பிக்கை தகர்ந்தது.
கடைசி 3 ஓவர்களில் 39 தேவைப்பட்ட நிலையில், ராஃபின் குறைவாக பந்தை சரியாக கணிக்காமல் விளையாடி தன்ஷிம் போல்டானார். அடுத்த இரண்டாவது பந்திலேயே டஸ்கின் அஹமது ஸ்டம்பையும் பதம்பார்க்க, கடைசி 12 பந்துகளில் 33 ரன்கள் தேவைப்பட்டது.
ஃபஹீமின் 19–வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 10 ரன்கள் கிடைக்க, கடைசி 6 பந்தில் வங்கதேசம் வெற்றிபெற்று பைனலில் இந்தியாவை சந்திக்க 23 ரன்கள் தேவைப்பட்டன. கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் ரிசாத்துக்கு பவுண்டரி கிடைத்தாலும், மூன்றாவது பந்தில் ரன் கிடைக்கவில்லை. கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட, ஓவரின் நான்காவது பந்தில் லாங் ஆன் திசையில் சிக்சர் விளாசினார் ரிசாத். ஆனால், கடைசி இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கிடைக்காததால், பாகிஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, பைனலுக்கு தகுதியேற்றது.
பைனலில் மீண்டும் ஒருமுறை இந்தியா Vs பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images
சமீபகாலமாக அப்ரிடியின் ஃபார்ம் விமர்சனத்துக்குள்ளான நிலையில், 3 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு பங்களித்துள்ளார். வேகப்புயல் ஹாரிஸ் ராஃபும் 3 விக்கெட்களை கைப்பற்றினார். குறைவான ஸ்கோர் அடித்த போதும், பந்துவீச்சு படை கைகொடுக்க பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றுள்ளது. பந்துவீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அசத்திய ஷாஹின் ஷா அப்ரிடி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா, இலங்கை அணிகள் சம்பிரதாயத்துக்கு மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பைனலுக்கு தகுதிபெற்று விட்டதால், ஆட்டத்தின் முடிவு பாதிப்பை ஏற்படுத்தாது.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 28) துபை மைதானத்தில் நடைபெறும் பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. நடப்பு ஆசிய கோப்பையில் இரு அணிகளும் மோதுவது இது மூன்றாவது முறையாகும். முதலிரு முறை பாகிஸ்தானை வென்றது போல மூன்றாவது முறையும் வாகை சூடி ஆசிய கோப்பையை வெல்லுமா இந்தியா?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












