You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல்- தங்கம் வென்ற அவ்னி லேகரா, வெண்கலத்தையும் கைப்பற்றிய இந்தியா
பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் இந்தியாவை சேர்ந்த அவ்னி லேகரா.
பாரிஸில் நடக்கும் பாராலிம்பிக் போட்டியில்,பெண்களுக்கான 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவ்னி லேகரா தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
2021 ஆம் ஆண்டிற்கான பிபிசியின் சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருதிற்காக பரிந்துரை பட்டியலில் அவ்னி இருந்தார்.
பாராலிம்பிக் போட்டியில் முதலில், கொரிய துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான யுன்ரி லீயை விட அவ்னி 0.8 புள்ளிகள் பின்தங்கி இருந்தார். கடைசி சுற்றில் கொரிய வீராங்கனையால் 6.8 புள்ளிகளை மட்டுமே பெற முடிந்தது. ஆனால் அவ்னி 10.5 புள்ளிகள் எடுத்தார்.
மொத்தமாக அவ்னி 249.7 புள்ளிகளையும், யுன்ரி லீ 246.8 புள்ளிகளையும் பெற்றனர். இறுதி சுற்றில் அதிக புள்ளிகள் எடுத்து அவ்னி முதலிடம் பெற்றார்.
இதே போட்டியில் கலந்து கொண்ட மற்றொரு இந்திய வீராங்கனையான மோனா அகர்வால் 228.7 புள்ளிகள் பெற்று, வெண்கலப் பதக்கம் வென்றார்.
யார் இந்த அவ்னி லேகரா?
அவ்னி ஜெய்பூர் நகரை சேர்ந்தவர், அவர் சட்டப்படிப்பு படித்துள்ளார்.
10 வயதில் அவருக்கு விபத்து ஏற்பட்டது. அதிலிருந்து அவர் சக்கர நாற்காலியில் இருந்து வருகிறார். பாராஷூட்டிங் அவருக்கு ஒரு புதிய வாழ்க்கையை கொடுத்தது.
விபத்தினால் நடந்த பாதிப்பில் இருந்து அவர் மீண்டு வர, அவரது தந்தை முக்கிய பங்காற்றினார். உடல் மற்றும் மன வலிமையை மீண்டும் பெற விளையாட்டு துறையில் ஆர்வம் காட்டுமாறு அவர் அவ்னியை வழிநடத்தினார்.
உடலில் பாதிப்புகள் ஏற்பட்ட போதும், அவ்னியின் வலுவான மன தைரியத்தால், வில் வித்தை பயிற்சியை மேற்கொண்டார். இந்த விளையாட்டிற்கு துல்லியம், கவனம் ஆகியவை மிகவும் தேவை.
இந்தியா துப்பாக்கி சுடும் வீரரான அபினவ் பிந்த்ராவின் சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு அவ்னி துப்பாக்கி சுடும் போட்டிக்கு பயிற்சி பெற தொடங்கினார். அவரது விடாமுயற்சி மற்றும் உறுதி கொண்டு அவர் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் விரைவாக வெற்றிகளை குவிக்கத் தொடங்கினார்.
இதற்கு முன்னதாக அவர் டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று, பாராலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றை படைத்திருந்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)