You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாராலிம்பிக் வில்வித்தை: இரு கைகளும் இல்லாமலேயே சாதிக்கும் இந்திய வீராங்கனை தங்கம் வெல்வாரா?
- எழுதியவர், ஆயூஷ் மஜூம்தார்
- பதவி, விளையாட்டு செய்தியாளர்
இந்திய வில்வித்தை வீராங்கனையான ஷீத்தல் தேவி, கையில் வில்லை எடுத்து, அதில் அம்பினை பொறுத்தி 50 மீட்டர் (164 அடி)தொலைவில் உள்ள இலக்கினை நோக்கி கவனமாக குறிவைக்கிறார்.
இந்தியாவில் உள்ள ஒரு பயிற்சி நிலையத்தில், ஷீத்தலை போலவே அவரது சக போட்டியாளரும் வில் வித்தையில் பயிற்சி பெறுகின்றனர்.
இவர்களுக்குள் வித்தியாசம் என்னவென்றால், ஷீத்தல் ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது வலது காலால் வில்லை உயர்த்தி, வலது தோள்பட்டை மூலம் வில்லின் சரத்தை பின்னுக்கு இழுத்து, தாடையின் வலிமையைப் பயன்படுத்தி அவர் அம்பு எய்கிறார்.
இந்த பயிற்சி முழுவதையும் ஷீத்தல் மிகவும் பொறுமையாக கையாள்கிறார்.
ஷீத்தல் ஃபோகோமெலியா (phocomelia) என்ற பிறவியிலேயே அரிய வகை பாதிப்புடன் பிறந்தார். கைகள் இல்லாமல் விளையாடும் வெகு சில வில்வித்தை வீராங்கனைகளில் ஒருவராக அவர் உருவாகினார்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இவர், தற்போது ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாரிஸில் தொடங்க இருக்கும் பாராலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார்.
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
"இன்று வரை நான் வென்று இருக்கும் பதக்கங்களைப் பார்க்கும்போதெல்லாம், மேலும் வெல்ல வேண்டும் என்ற உத்வேகத்தை உணர்கிறேன். குறிப்பாக எனக்கு தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும். நான் இப்போது தான் எனது விளையாட்டு பயணத்தை தொடங்கியுள்ளேன்" என்கிறார் அவர்
இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் 22 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. அதில் உலகம் முழுவதில் இருந்து சுமார் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
1960 ஆம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்டதில் இருந்து வில்வித்தை விளையாட்டு ஒரு பகுதியாக இருந்து வருகிறது.
பிரிட்டன், அமெரிக்கா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் பதக்க எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கலந்து கொண்ட 17 ஒலிம்பிக்கில் வில்வித்தையில் இந்தியா ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்றுள்ளது.
பாராலிம்பிக்கில் வில்வித்தை விளையாட்டு வீரர்கள் அவர்களது மாற்றுத்திறனை பொறுத்து குழுக்களாக பிரிக்கப்படுகின்றனர்.
வீரர்கள் அம்பு எறிய வேண்டிய தூரமும் ஒவ்வொரு குழுவை பொறுத்து வேறுபட்டதாக இருக்கும். மேலும் ஒரு வில்வித்தை வீரர் அம்பு எய்வதற்கு சக்கர நாற்காலி போன்ற உதவி சாதனங்களைப் பயன்படுத்தலாமா என்பதும் இதை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
W1 எனும் பிரிவில் போட்டியிடும் வில்வித்தை வீரர்கள் சக்கர நாற்காலியைப் பயன்படுத்துவார்கள். இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் என நான்கில் குறைந்தது மூன்றில் தசை வலிமை, ஒருங்கிணைப்புத் திறன் அல்லது அவற்றை செயல்படுத்துவதில் பாதிப்புகள் இருக்கும் வீரர்கள் இந்த பிரிவில் போட்டியிடுவார்கள்.
திறந்த நிலை பிரிவில் போட்டியிடுபவர்கள் தங்கள் உடலின் மேல் பாதி அல்லது கீழ் பாதி அல்லது ஒரு பக்கத்தில் மட்டும் பாதிப்பு கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த பிரிவில் போட்டியாளர்கள் உடல் சமநிலைக்காக சக்கர நாற்காலி அல்லது ஸ்டூலில் நின்றோ அமர்ந்தோ போட்டியிடுவார்கள். போட்டியை பொறுத்து, வீரர்கள் ரீகர்வ் வில் (recurve bow) அல்லது கூட்டு வில்(compound bow) என்ற வில் வகைகளுள் ஒன்றைப் பயன்படுத்துவார்கள்.
ஷீத்தல் தற்போது கூட்டு வில்லை பயன்படுத்தும் பெண்களுக்கான திறந்த நிலை பிரிவில் உலக அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டு, அவர் பாரா-ஆர்ச்சரி உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனால் பாரிஸ் நகரில் நடைபெறும் பாராலிம்பிக் விளையாட்டுகளுக்கு அவர் தகுதி பெற்றார்.
பாரிஸில் பாராலிம்பிக் போட்டிகளில், அவர் வில்வித்தை வீரர்களுள் உலகின் மூன்றாம் இடத்தில் உள்ள வீராங்கனையான ஜேன் கார்லா கோகல் மற்றும் நடப்பு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளின் வெற்றியாளர் ஓஸ்னூர் குரே உள்ளிட்ட சவாலான போட்டியாளர்களை எதிர்கொள்வார்.
ஆனால் ஷீத்தலை அறிந்தவர்கள் அவர் இந்த விளையாட்டில் போட்டியிட்டு வெற்றி பெற பிறந்தவர் என்று கூறுகிறார்கள்.
"ஷீத்தல் வில்வித்தையைத் தேர்ந்தெடுக்கவில்லை, வில்வித்தை தான் ஷீத்தலைத் தேர்ந்தெடுத்தது" என்கிறார் ஷீத்தலின் தேசிய அளவு போட்டிக்கான இரண்டு பயிற்சியாளர்களில் ஒருவரான அபிலாஷா சௌத்ரி.
ஒரு சிறிய கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்த ஷீத்தல், 15 வயது வரை வில் அம்பினை பார்த்ததே இல்லை.
2022 ஆம் ஆண்டு ஷீத்தல், அவரது வீட்டிலிருந்து சுமார் 200 கிமீ (124 மைல்) தொலைவிலுள்ள ஜம்முவின் கத்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி ஆலய வாரியத்தின் விளையாட்டு வளாகத்திற்கு உறவினர்களின் பரிந்துரையின் பேரில் சென்றபோது அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
அங்கு, அவர் அபிலாஷா சௌத்ரி மற்றும் மற்ற பயிற்சியாளரான குல்தீப் வேத்வானைச் சந்தித்தார். அவர்கள் ஷீத்தலை வில்வித்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினர். அவர் விரைவில் கத்ரா நகரில் உள்ள பயிற்சி முகாமுக்கு மாறினார்.
ஷீத்தலின் உறுதி பயிற்சியாளர்களை கவர்ந்ததாக அவர்கள் கூறினர்.
ஷீத்தலுக்கு பயிற்சி அளிப்பது சவாலானதாக தோன்றியதாகவும், ஆனால் ஷீத்தலின் கால்கள் மற்றும் மேல் உடலில் உள்ள வலிமையைப் பயன்படுத்தி அவரை வில்வித்தை வீரராக மாற்றுவதையே இந்த பயிற்சியாளர்கள் நோக்கமாக கொண்டு இருந்தனர். இறுதியில் இதில் அவர்கள் வெற்றி கண்டனர்.
பல ஆண்டுகளாக எழுதுவது, நண்பர்களுடன் மரம் ஏறுவது உள்ளிட்ட பெரும்பாலான செயல்களுக்கு தனது கால்களைப் பயன்படுத்தியதன் மூலம் உடல் வலிமை கிடைத்ததாக ஷீத்தல் கூறினார்.
"இது சாத்தியமற்றது என்று நான் நினைத்தேன். தொடக்கத்தில் என் கால்கள் மிகவும் வலிக்கும், ஆனால் எப்படியோ நான் இதை செய்தேன்", என்று ஷீத்தல் கூறினார்.
ஷீத்தல் சோர்வாக உணரும்போது, அமெரிக்க வில்வித்தை வீரர் மாட் ஸ்டுட்ஸ்மேனிடமிருந்து உத்வேகத்தைப் பெறுவார். மாட் ஸ்டுட்ஸ்மேன் அவருக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட சாதனத்தைப் பயன்படுத்தி தனது கால்களால் அம்பு எய்து பிரபலமான விளையாட்டு வீரராவர்.
ஷீத்தலின் குடும்பத்தால் இதே போன்ற அம்பு எய்யும் இயந்திரத்தை வாங்க முடியவில்லை. எனவே அவரது பயிற்சியாளர் வேத்வான் அவருக்காக ஒரு வில்லை உருவாக்கினார்.
அவர் உள்ளூரில் இருந்து பெறப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி, ஷீத்தலுக்கான தேவைகளுக்கு ஏற்ப இயந்திரத்தை உருவாக்கினார்.
ஆனால் உண்மையான சவால் என்னவென்றால், ஷீத்தலின் கால்களை மட்டும் வைத்து நன்கு வளைந்து வலுவான அம்பு எறியும் நுட்பத்தை கண்டுபிடிப்பதாகும்.
"அவருடைய கால்களின் வலிமையை எவ்வாறு சமன் செய்வது, அதை மாற்றியமைத்து எவ்வாறு அம்பு எய்ய பயன்படுத்துவது என்பதை நாங்கள் கண்டறிய வேண்டியிருந்தது," என்று சௌத்ரி விளக்குகிறார்.
"ஷீத்தலுக்கு வலுவான கால்கள் உள்ளன, ஆனால் அவர் முதுகு பகுதியையும் பயன்படுத்தி அவர் எவ்வாறு விளையாடுவார் என்பதை நாங்கள் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது."
ஷீத்தல் மற்றும் அவரது இரண்டு பயிற்சியார்கள் இணைந்து அவருக்காக பயிற்சி முறையை கண்டறிய உறுதியாக இருந்தனர். முதலில் வில்லுக்குப் பதிலாக ரப்பர் பேண்ட் அல்லது தேரா பேண்டைப் (Thera Band) பயன்படுத்தி 5 மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளில் அம்பு எய்து பயிற்சியை தொடங்கினார்.
இதனால் ஷீத்தலின் தன்னம்பிக்கை அதிகரித்ததால், இலக்கு தூரத்தின் அளவும் அதிகரித்தது. பயிற்சி தொடங்கிய நான்கு மாதங்களுக்குள், அவர் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வில்லைப் பயன்படுத்தத் தொடங்கினார். திறந்த வெளிப் பிரிவிற்கான இலக்கான 50 மீட்டரை நோக்கி அம்பு எய்யத் தொடங்கினார்.
இரண்டே ஆண்டுகளில், குறுகிய தூரம் இருக்கும் இலக்குகளில் அம்பு எய்வதில் இருந்து, 2023 ஆம் ஆண்டு ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான தனி நபர் இறுதிப் போட்டியில் தொடர்ச்சியாக ஆறு 10 புள்ளிகளை எட்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.
இலக்கு பலகையில் உள்ள நடுவட்டத்தில் சரியாக ஒரு அம்பை எய்வதன் மூலம் ஒரு வீரர் அதிகபட்ச புள்ளியான 10 புள்ளிகளை பெற முடியும்.
"நான் ஒன்பது புள்ளிகள் பெற்றால் கூட, அடுத்த முறை அதை எப்படி 10 புள்ளியாக ஆக மாற்றுவது என்பது பற்றி மட்டுமே யோசித்துக்கொண்டிருக்கிறேன்" என்று ஷீத்தல் கூறினார்.
இது கடின உழைப்பினால் மட்டும் நடந்ததல்ல, பல தியாகங்களும் வழியில் நடந்து இருக்கின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பயிற்சிக்காக கத்ராவுக்குச் சென்றதிலிருந்து ஒருமுறை கூட வீட்டிற்குச் செல்லவில்லை என்று ஷீத்தல் கூறினார்.
பாராலிம்பிக்ஸ் முடிந்த பின்னரே,"ஒரு பதக்கத்துடன்" வீடு திரும்ப அவர் இப்போது திட்டமிட்டுள்ளார்.
எப்படியிருந்தாலும், தன்னால் முடிந்தவரை சிறப்பான ஆட்டத்தை விளையாட அவர் உறுதியாக இருக்கிறார்.
"யாருக்கும் எந்த வரம்புகளும் இல்லை என்று நான் நம்புகிறேன், இது ஒன்றை விரும்பி அதற்காக, உங்களால் முடிந்த வரை கடினமாக உழைப்பது பற்றியது" என்று அவர் கூறினார்.
"என்னால் முடிந்தால், வேறு யாராலும் முடியும்." என்று ஷீத்தல் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)