ஷாருக் - சல்மான் இருவரும் கசப்பை மறந்து நண்பர்களாக பாபா சித்திக் என்ன செய்தார்?

பாபா சித்திக், ஷாருக் - சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2013-ஆம் ஆண்டு இஃப்தார் விருந்தில் பாபா சித்திக்குடன் நடிகர்கள் ஷாருக் கான், சல்மான் கான்
    • எழுதியவர், மது பால்
    • பதவி, பிபிசி ஹிந்திக்காக, மும்பை

முன்னாள் மகாராஷ்டிர அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பாபா சித்திக் மும்பையில் சுட்டு கொல்லப்பட்டார்.

சனிக்கிழமை இரவு மும்பையின் பாந்த்ரா பகுதியில் அவர் துப்பாக்கிச்சூடு தாக்குதலுக்கு இலக்கானார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் மகாராஷ்டிர அரசியலில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாபா சித்திக் பாலிவுட் நட்சத்திரங்களுடன் ஆழமான நட்பைக் கொண்டிருந்தார். அவரின் இறப்பிற்கு பலரும் தங்களின் வருத்தங்களை பதிவு செய்துகின்றனர்.

ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் இருந்த நடிகர் சல்மான் கான் இந்த செய்தி கேட்டதும் படப்பிடிப்பை பாதியில் நிறுத்திவிட்டு லீலாவதி மருத்துவமனைக்கு சென்ற அவர் சித்திக்கின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

நடிகர்கள் சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோரும் லீலாவதி மருத்துவமனைக்கு விரைந்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாலிவுட்டில் நீங்காத அடையாளத்தைப் பெற்ற பாபா சித்திக்

அரசியல் வட்டாரங்களில் மட்டுமின்றி ஹிந்தி திரையுலகிலும் பிரபலமான நபராக அறியப்பட்டவர் பாபா சித்திக்.

மும்பையில் இஃப்தார் நிகழ்வை மிகப்பெரிய கொண்டாட்டமாக மாற்றிய முதல் தலைவர் பாபா சித்திக். மிகப்பெரிய கொண்டாட்டமாக பல இடங்களில் தற்போது இஃப்தார் நிகழ்வுகள் அரங்கேறினாலும் கூட பாபா சித்திக் நடத்தும் நிகழ்வு எல்லாவற்றையும் விஞ்சிய பிரமாண்டமாக இருக்கும்.

ஃபிலிம் ஃபேர் விருது வழங்கும் நிகழ்வுகள் எவ்வாறு பாலிவுட்டில் மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டதோ அவ்வாறே இவரின் இஃப்தார் நிகழ்வும் கருதப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்வது என்பது பாலிவுட் நட்சத்திரங்களின் செல்வாக்கையும் அந்தஸ்த்தையும் குறிக்கும் செயலாகவே பார்க்கப்பட்டது.

மிகப்பெரிய நட்சத்திரங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வார்கள். பாலிவுட் நட்சத்திரங்கள் மட்டுமின்றி, தொழிலதிபர்கள், அமைச்சர்கள் போன்ற பலரும் இந்த இஃப்தார் நிகழ்வில் பங்கேற்பதுண்டு.

பாபா சித்திக், ஷாருக் - சல்மான்

பட மூலாதாரம், Baba Siddique

படக்குறிப்பு, சுனில் தத்துடன் பாபா சித்திக்

ஹிந்தி திரையுலகத்துடனான பாபா சித்திக்கின் உறவு

ஆண்டு முழுவதும் பாபா சித்திக் பற்றிய செய்திகள் வருகின்றவோ இல்லையோ, ரம்ஜான் மாதத்தின் போது பேசுபொருளாக மாறிவிடுவார் பாபா சித்திக்.

பாபா சித்திக் பாலிவுட் நட்சத்திரங்களின் வட்டாரத்தில் ஆழமான உறவை கொண்ட நபராக மாறியது எப்படி?

இதுபற்றி பிபிசி ஹிந்தியிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ராமச்சந்திரன் ஶ்ரீனிவாசன், "ஆரம்ப காலங்களில் பாந்த்ராவில் தான் பாபா சித்திக்கின் அரசியல் பணியிடம் அமைந்திருந்தது. இங்கு தான் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரின் வீடுகளும் அமைந்திருக்கின்றன. தன்னுடைய அரசியல் வாழ்வை ஆரம்பித்த தருணத்தில் அவர் சுனில் தத்தை சந்தித்தார்," என்று நினைவு கூறூகிறார்.

"சுனில் தத்தும் பாபா சித்திக்கும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அதே நட்பு சுனில் தத்தின் மகனான சஞ்சய் தத்துடனும் தொடர்ந்தது. அநேக பாலிவுட் கேளிக்கை நிகழ்வுகளில் சஞ்சய் தத்தை பார்க்க இயலாது. ஆனால் அவர் எப்போதும் பாபா சித்திக் நடத்தும் நிகழ்வுகளுக்கு சென்றுவிடுவார். சஞ்சய் தத் சிறையில் இருந்து பிணையில் வெளிவந்த போதெல்லாம், 'பார்ட்டிக்காக' செல்லும் முதல் இடம் பாபா சித்திக்கின் இஃப்தார் நிகழ்வு தான்," என்றும் அவர் மேற்கோள்காட்டினார்.

பாபா சித்திக், ஷாருக் - சல்மான்

பட மூலாதாரம், Baba Siddique

படக்குறிப்பு, பாபா சித்திக் நடத்தும் இஃப்தார் நிகழ்வு பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் பிரபலம்

சல்மான் கானுடன் நீண்ட நட்பு

சல்மான் கானும் பாபாவும் நீண்ட நாள் நண்பர்கள். அதனால் தான் ஏதேனும் சமூகம் சார்ந்த பிரச்னை என்றாலும் இருவரும் சேர்ந்தே குரல் கொடுத்தனர்.

2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கொரோனா ஊடரங்கின் போதும் சல்மான் கானின் குழுவினரும், பாபாவின் மகன் ஜீஷன் சித்திக்கும் சேர்ந்து மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள். ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டபோது அவர்களால் இயன்ற உதவியை செய்தனர்.

மிகவும் மோசமான காலங்களில் சல்மான் கானுக்கு ஆதரவை வழங்கினார் பாபா. சாலை விபத்து, மான் வேட்டை போன்ற சர்ச்சைகளில் சல்மான் கான் சிக்கிய போதும் கூட அவருக்கு துணை நின்றார் பாபா சித்திக்.

சல்மான் கானின் வழக்குகள் விசாரணைக்கு வந்த போதெல்லாம் சித்திக் அவருடன் நீதிமன்றத்தில் இருப்பார் அல்லது சல்மானின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நிற்பார்.

சல்மான் கானுக்கு சமீபத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் குழு கொலை மிரட்டல் விடுத்த போது அதற்கு எதிராக தன்னுடைய கண்டனங்களை பாபா சித்திக் பதிவு செய்தார். சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்கள் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

பாபா சித்திக், ஷாருக் - சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2013-ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்வில் சல்மான் - ஷாருக் இருவரையும் பங்கேற்கச் செய்த பாபா சித்திக், இருக்கும் இடையிலான கசப்பை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பாபா சித்திக்கால் மீண்டும் நண்பர்களான சல்மான், ஷாருக்

2013ம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வில் பங்கேற்கும்படி சல்மான், ஷாருக் இருவருக்கும் அழைப்பு விடுத்தார் பாபா சித்திக்.

இன்று அந்த இரண்டு நடிகர்களையும் ஒன்றாக பார்க்க முடிகிறது என்றால் அதற்கு காரணம் சித்திக் தான். ஆனால் அந்த இஃப்தார் நிகழ்வுக்கு முன்பு ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளக் கூட அவர்கள் விரும்பியதில்லை.

அந்த ஆண்டுக்கு முன்னதாக ஐந்து வருடங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. எந்த படங்களிலும் இணைந்தும் நடிக்கவில்லை.

அவர்களுக்குள் இருந்த கசப்பான உறவை முடிவுக்கு கொண்டு வர வைத்தது 2013ம் ஆண்டு நடைபெற்ற இஃப்தார் நிகழ்வு. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து இதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று பாபா சித்திக் வலியுறுத்தினார்.

மூத்த ஊடகவியலாளரான நிஷாந்த் பூசே இது தொடர்பாக பேசும் போது, "சாலை விபத்து விவகாரத்தில் சல்மான் கானுக்கு தேவையான உதவிகளை பாபா சித்திக் வழங்கினார். சல்மான் கானுக்கு எப்போதெல்லாம் பிரச்னை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் அவருக்கு பாபா சித்திக் உறுதுணையாக இருந்துள்ளார்," என்றார்.

"லீலாவதி மருத்துவமனைக்கு சென்று பாபாவின் உடலை பார்த்த சல்மான் கான் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். பாபாவின் மனைவி மற்றும் மகளுக்கு ஆறுதலை கூறினார்" என்று குறிப்பிடும் நிஷாந்த், "பாபாவின் படுகொலைக்கு பிறகு சல்மான் கானுக்கான பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்படும்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)