தொழிலதிபராக விரும்பிய 'சரவணன்' திரையில் சூர்யாவாக மிளிர்ந்த கதை

    • எழுதியவர், பொன்மனச் செல்வன்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

சூர்யா தனது முதல் படத்தில் நடித்தபோது, அவருக்கு நடிக்கவே தெரியவில்லை, நடனம் வரவில்லை, முக பாவங்களை காட்டத் தெரியவில்லை என்பன உள்ளிட்ட விமர்சனங்கள் எழுந்தன.

பட்டை தீட்டத் தீட்டத்தான் வைரம் மிளிரும் என்பதற்கேற்ப தான் சந்தித்த விமர்சனங்களை எல்லாம் படிக்கற்களாக மாற்றி, தற்போது சூர்யா போன்று யாரும் நடிக்க முடியாது என்ற பெயரை ரசிகர்களிடம் பெற்றிருக்கிறார். அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகியிருக்கும் கங்குவா படத்தின் காட்சிகளே இதற்கு சாட்சி.

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான நடிகர்கள் எப்போதும் ஒரு வரையறையை வைத்துக்கொண்டு அதற்கேற்பவே திரைப் பயணத்தை தகவமைப்பார்கள். அந்த வகையில், சூர்யா தேர்வு செய்தது அறம்.

நடிப்புடன், அறம் சார்ந்த பணிகளை நேர்த்தியுடன் மேற்கொண்டு வரும் அவரை ரசிக மனோபாவத்தை எல்லாம் கடந்தும் மக்கள் கவனிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

ஆனால், இவை அனைத்துமே முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா மிளிரத் தொடங்கிய பிறகுதான். ஆரம்பத்தில் அச்சத்தை மட்டுமே தன் எல்லாமுமாக கொண்டிருந்த சரவணன், எதற்கும் துணிந்தவனாக மாறிய கதை அலாதியானது மட்டுமல்ல, அவசியமானதும்கூட.

தனது தந்தை தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் என்றாலும், அந்த அடையாளம் எதுவும் இல்லாமலே வளரும் நோக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே கடைபிடித்தார் சரவணன்.

பள்ளி, கல்லூரிகளில் இவர் சிவகுமாரின் மகன் என்பது பலருக்கு தெரியாமலேயே பார்த்துக்கொண்டார். கல்லூரியில் பி.காம் படிப்பை முடித்த சரவணன், ஒரு தனியார் கார்மென்ட்ஸில் ₹1,200 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்து பணியாற்றினார்.

அன்று உழைத்தால்தான் அடுத்த நாள் உணவு எனும் நிலையில், எல்லா கவலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, காலை முதல் இரவு வரை கலகலப்பாக உழைத்து தீர்த்தவர்களைப் பார்க்கையில் சரவணனுக்கு ஆச்சரியமாய் இருந்தது.

அங்கு நிற்காமல் ஓடிக்கொண்டிருந்த தையல் இயந்திரங்கள், சரவணின் மனதுக்குள் அச்சம் ஏற்படுத்திய கிழிசலையும் சேர்த்து தைத்தது. எல்லாத் தொழிலுக்கும் ஒரு சூத்திரம் உண்டு. 'உழைப்பு அதில் பொது' என்னும் தெளிவு கிடைத்தது.

தந்தை சிவகுமார் பெரிய நடிகராக இருந்தபோதும் சூர்யாவுக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை ஆரம்பத்தில் இல்லை. கார்மென்ட்ஸ் நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்பதே பெரும் கனவாக அவருக்கு இருந்தது. அதற்கேற்பவே, அங்கு பணிக்குச் சேர்ந்து வியாபார நுணுக்கங்களை கற்றுக்கொள்ளத் தொடங்கினார்.

சரவணன் சூர்யாவாக மாறியது எப்படி?

சரவணன் மிகப்பெரிய தொழிலதிபராக உயர்வார் என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்தில் இருந்து அவருக்கு அழைப்பு வந்தது. வசந்த் இயக்கத்தில் மணிரத்னம் தயாரித்த ‘நேருக்கு நேர்’ படத்தில் சரவணனை நடிக்க வைக்க மணிரத்னம் முடிவு செய்திருந்தார்.

விஜய் ஹீரோவாக நடித்த அந்தப் படத்தில் முதலில் அஜித்தை நடிக்க வைக்க திட்டமிட்டனர். ஆனால், ஒரு சில காரணங்களால் அது நடக்காமல் போக ‘நேருக்கு நேர்’ பட வாய்ப்பு சரவணனுக்கு வந்தது.

சரவணனை நேரில் அழைத்துப் பேசிய மணிரத்னம், ஏற்கெனவே சரணவன் பெயரில் வேறு நடிகர் இருந்ததால், தனக்குப் பிடித்த பெயரான சூர்யா என்பதை சூட்டினார். அதன் பிறகே சரவணனாக இருந்தவர் சூர்யாவாக மாறினார்.

‘நேருக்கு நேர்’, ‘காதலே நிம்மதி’ என இரண்டு படங்களில் இரண்டாவது நாயகனாக நடித்த சூர்யா, ‘சந்திப்போமா’ படத்தில் ஹீரோவானார். அந்தப் படம் வெற்றியை கொடுக்கவில்லை.

தொடர்ந்து, எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஜயகாந்த் படத்தில் நடிப்பதன் மூலம் மிகவும் பிரபலமடைய முடியும் என்பதை சூர்யாவும், அவரின் தந்தை சிவகுமாரும் நம்பினர். இந்தப் படத்தில் நண்பர் சூர்யாவிற்காக, பாடியிருந்தார் நடிகர் விஜய்.

நந்தா மூலம் கிடைத்த புகழ்

‘பெரியண்ணா’ படம் கவனிக்கப்பட்டாலும் சூர்யாவால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை. இந்த நிலையில், விஜயோடு இரண்டாவது முறையாக இணைந்தார் சூர்யா. சித்திக் இயக்கிய ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு இணைந்து நடித்த காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

முதல் ஏழு படங்களிலும் முக்கியத்துவம் இல்லாத ரோல்களில் தான் நடித்திருந்தார் சூர்யா. அந்த நிலையில்தான் இயக்குனர் பாலாவின் அறிமுகத்தால், ‘நந்தா’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு வந்தது.

நந்தா படத்துக்கு முன்பு வரை சாதாரண நடிப்பை வெளிப்படுத்தியிருந்த சூர்யா, இந்த படத்திற்குப் பிறகு தன்னுடைய தோற்றத்தையும், பாதையையும் மாற்றினார். நந்தாவில் தன்னுடைய நடிப்பாலும், கூர்மையான பார்வையாலும் மிரட்டினார்.

எந்த துறையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும், சலுகையோ, இரக்கமோ, சிபாரிசோ நம்மைக் காப்பாற்றாது. தகுதி மட்டுமே நம்மைத் தக்க வைக்கும். பயன்படாத ஒன்று இங்கு யாருக்கும் தேவையில்லை.

நம்மை நாமறிந்து, நம் மீது கொள்ளும் நம்பிக்கை மட்டுமே நம்மைக் காப்பாற்றும் என்பது எவ்வளவு பெரிய உண்மை என சூர்யாவுக்கு உணர்த்தியது `நந்தா' பட வாய்ப்பு.

இம்முறை படத்தில் நடிக்க இயக்குநரிடம் ஒப்புக்கொள்வது என்பதைத் தாண்டி, இயக்குநரிடம் தன்னை ஒப்படைத்துவிடுவது என்பதைச் செய்தார். படம் வெளியானது. விமர்சகர்கள் சூர்யாவைக் கொண்டாடினார்கள். இயக்குநர்கள் வியந்தார்கள்.

பிம்பத்தை மாற்றி வெற்றியை தன்வசப்படுத்தினார்

சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளுக்குப் பிறகே தனக்கு கிடைத்த பெயரையும், புகழையும் தக்க வைத்துக்கொள்ள கவனமாக செயல்பட்டார் சூர்யா. நந்தா படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்ரமனின் உன்னை நினைத்து படத்தை தேர்வு செய்தார்.

‘நந்தா’வில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த கதாபாத்திரத்திலும் நேர்த்தியாக நடித்து கொடுத்திருந்தார். ‘உன்னை நினைத்து’ படம் சத்தமே இல்லாமல் வெளியாகி நூறு நாட்களை தாண்டி ஓடியது.

‘மௌனம் பேசியதே’ படத்தில் காதலை வெறுக்கும் முரட்டு இளைஞன் கதாபத்திரத்தில் அசத்தலாக நடித்து பாராட்டை பெற்றிருந்தார் சூர்யா. இதில் காதலை வெறுக்கும்போதும், பின் காதல் வசப்படும் போதும் தகுந்த நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்த படம் வெளியான நேரத்தில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சூர்யா என்றால் இப்படித்தான் என்றிருந்த அடையாளங்களை மாற்ற தொடங்கிய அவர், அடுத்தடுத்த வெற்றிகளை தன்வசப்படுத்தினார். ‘நந்தா’விற்குப் பிறகான படங்களில் மெறுகேற்றிக் கொண்டே வந்த அவருக்கு, ‘காக்க காக்க’ திரைப்படம் மைல்கல்லாய் அமைந்தது. இதில் ஒரு போலீஸ் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதுபோல நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்திருந்தார் சூர்யா.

கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் நடை, உடை, பாவணை என அனைத்திலும் ஒரு விதமான மிடுக்கை கையாண்டிருந்தார் சூர்யா.

கமர்சியலில் ஹிட் அடித்த சூர்யா

சூர்யாவுக்கு வெற்றி படங்களாக அமைந்த ‘நேருக்கு நேர்’, ‘நந்தா’, ‘காக்க காக்க’ ஆகிய படங்களின் கதை முதலில் நடிகர் அஜித்துக்கு சொல்லப்பட்டவை. ஆனால், அவர் அந்த படங்களில் நடிக்க மறுத்த நிலையிலேயே சூர்யாவிடம் வந்தன. ‘காக்க காக்க’ படத்தை தொடர்ந்து நந்தா படத்தின் இயக்குனரான பாலாவோடு இரண்டாவது முறையாக இணைந்தார் சூர்யா.

நந்தாவில் சூர்யாவை முரடணாக காட்டிய பாலா, பிதாமகன் படத்தில் அனைவரும் ரசிக்கும்படியான கதாபாத்திரத்தை கொடுத்திருந்தார். இந்த படத்தில் சூர்யா வந்த ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை ரசிக்க வைத்தன. அந்த அளவுக்கு மிகவும் ஜாலியான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

முதல் பாதியில் ரசிகர்களை சிரிக்க வைத்த சூர்யா, க்ளைமேக்ஸூக்கு முன்பான காட்சிகளில் கண்ணீர்விட வைத்தார். பிதாமகன் படத்திற்கு பின் பேரழகன், ஆயுத எழுத்து, மாயாவி என மூன்று படங்கள் சூர்யாவுக்கு சறுக்கலை ஏற்படுத்தின.

இருந்தாலும் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆயுத எழுத்து திரைப்படத்தில் இடம்பெற்ற சூர்யாவின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

அடுத்தடுத்து மூன்று தோல்வி படங்கள் கொடுத்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸோடு சூர்யா முதன் முறையாக கூட்டணி வைத்தார். ’கஜினி’ என்ற பெயரில் உருவான அந்த படத்தில் தொழிலதிபர் சஞ்சய் ராமசாமியாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் சாயலில் அதுவரை சூர்யா நடித்ததில்லை. ஆனாலும், இருவேறு தோற்றங்களில் நடித்த சூர்யாவின் நேர்த்தி, அவரது மார்கெட்டையும் அவருக்கான ரசிகர்களையும் அதிகப்படுத்தியது.

கஜினி படத்தை தொடர்ந்து ஆக்‌ஷன் கமர்ஷியல் படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார். ஆறு படத்திற்கு பிறகு வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 என சூர்யா – ஹரி கூட்டணியில் திரைப்படங்கள் வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன.

சூர்யா ஏற்கனவே ‘காக்க காக்க’ படத்தில் போலீஸாக நடித்திருந்தாலும், சிங்கம் படங்களின் அதிரடி துரை சிங்கம் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அகரம் மூலம் கல்வி உதவிகள்

ஹரியை தொடர்ந்து கவுதம் மேனனோடும் நம்பிக்கைக்குரிய கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டார் சூர்யா. அதன்மூலம், ’வாரணம் ஆயிரம்’ என்ற படம் உருவானது. இதில் கவுதம் மேனன் எழுதிய காதல்காட்சிகளை, சூர்யா அற்புதமாக நடித்துக்கொடுத்தார்.

‘கஜினி’, ’சில்லுனு ஒரு காதல்’ ஆகிய படங்களுக்கு பிறகு சூர்யாவுக்கு பெண் ரசிகர்களை அதிகப்படுத்திய படம் என்றால் அது ‘வாரணம் ஆயிரம்’ மட்டுமே. அந்த அளவுக்கு காதலில் உருகி உருகி நடித்திருந்தார் சூர்யா.

தொடர்ந்து, ஏழாம் அறிவு, மாற்றான், காப்பான் என்.ஜி.கே. போன்ற படங்கள் வியாபார ரீதியாக தோல்வியடைந்தாலும், சூர்யாவின் புதிய பரிமாணங்களை ரசிகர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலேயே அமைந்திருந்தன.

ஒருபுறம் திரைத்துறையில் வெற்றிகரமான நடிகராக மாறத் தொடங்கிய நேரத்தில், மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையிலான ‘அகரம்’ அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்.

நடிகர் ஜெட்லீயின் ‘ஒன் ஃபவுண்டேஷன்’ போல் அனைத்து உதவிகளும் கிடைக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே அகரம் ஆரம்பிக்கப்பட்டதாய் குறிப்பிட்டிருக்கிறார் சூர்யா.

கல்வி சார் சமூகப் பணி என்பது உதவிகள் மட்டுமே அல்ல என்பதை புதிய கல்வி கொள்கை ஏழை மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்று கருத்து தெரிவித்ததன் மூலம் உணர்த்தியவர் சூர்யா.

அவரது கருத்துக்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோதும், தன் நிலைபாட்டில் இருந்து பின்வாங்காத சூர்யா, அது திரும்ப பெறப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கிறார்.

மாஸ் நாயகன் பிம்பத்தை அடையத்தான், அத்தனை ஹீரோக்களும் தவமாய் தவம் கிடக்கிறார்கள். எளிதில் கிடைத்திடாத அந்த பிம்பத்தை உழைப்பு எனும் மந்திரத்தால் அடைந்திருக்கிறார் சூர்யா.

ஆனால், அந்த பிம்பத்திற்குள் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் எல்லா விதமான கதைக் களங்களையும், கதாபாத்திரங்களையும் அவரால் செய்துபார்க்க முடிகிறதெனில் அது சினிமா எனும் கலையின் மீதான காதலும், அர்ப்பணிப்பும் மட்டுமே.

ஆறு, வேல், அயன், சிங்கம், காப்பான் என்று மாஸ் படங்களில் முத்திரை பதிக்கும் அதே நேரம், வாரணம் ஆயிரம், 24, சூரரைப் போற்று, ஜெய் பீம் என அழுத்தமான, வித்தியாசமான கதைகளிலும் தன்னை வளர்த்தெடுக்கிறார்.

ஒரு வட்டம் மட்டுமே தன் திரை வாழ்க்கை எனும் வரையறைகளின்றி, வானத்தை எட்டிப் பிடித்து விடும் கடின உழைப்பே, ஊர்க்குருவி என சொல்லியவர்களுக்கு மத்தியில் அதை பருந்தாக்கி உயர பறக்க வைத்திருக்கிறது. உழைப்பு மட்டுமே மூலதனமாக கொண்டிருக்கும் சூரர்களை போற்றுவோம் என்பதற்கு சூர்யாவின் வாழ்க்கையும் ஒரு பாடம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: