You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நெல்லையப்பர் கோவிலில் கிடைத்த பழமையான செப்புப் பட்டயங்கள் கூறுவது என்ன?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
திருநெல்வேலியில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் பல பழங்கால செப்புப் பட்டயங்களும் செப்பேடுகளும் கிடைத்திருக்கின்றன. இந்தச் செப்பேடுகளை எழுதிய மன்னர்கள் யார், இந்தச் செப்பேடுகள் சொல்லும் செய்திகள் என்ன?
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள சுமார் 46,000 கோவில்களிலும் இருக்கக்கூடிய ஓலைச் சுவடிகள், செப்புப் பட்டயங்கள் ஆகியவற்றைத் தேடி எடுத்து, அவற்றைப் படித்து நூலாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதற்கென ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவினர் இதுவரை 232 கோவில்களில் கள ஆய்வை மேற்கொண்டு 20 செப்புப் பட்டயங்களை அடையாளம் கண்டுள்ளனர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறைத் தலைவர் சு. தாமரைச் செல்வன் தலைமையிலான இந்தக் குழுவினர் சில நாட்களுக்கு முன்பாக, நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு 8 செப்புப் பட்டயங்களும் 2 செப்பேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டன.
13-ம் நூற்றாண்டு செப்பேடு கூறுவது என்ன?
இங்கு கிடைத்ததிலேயே மிகப் பழைய செப்பேடு பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தச் செப்பேடு கி.பி. 1299ல் எழுதப்பட்டது. இந்தச் செப்பேடு, வஞ்சி சேர குல ராமபாண்டியன் என்ற மன்னன் தன்னுடைய படைத் தலைவர்களில் ஒருவரும் நாங்கீசுவரனேரி என்ற ஊருக்குப் பொறுப்பாக இருந்தவருமான மாதேவன் சேரமான் பிள்ளையின் நிலங்களுக்கு வரி விதித்தது குறித்துப் பேசுகிறது.
முன்னதாக சேரமான் பிள்ளையின் நிலங்களுக்கு நிரந்தர வரியாக கலி பணம் 880 நிர்ணயிக்கப்பட்டது. புதிதாக குளங்கள் வெட்டப்பட்டு, தரிசு நிலங்கள் திருத்தப்பட்டதால் இந்த வரியை அதிகரித்து உத்தரவிட்டதை இந்தச் செப்பேடு குறிப்பிடுகிறது. வரியாக வழங்கப்படும் நெல்லில் 7 கோட்டை நெல்லை திருநெல்வேலியில் உள்ள திருநாகீஸ்வரர் - சிவகாமி அம்மன் கோவிலின் உதய மார்த்தாண்டன் கட்டளைக்கும் பூலாவுடையார் கோவிலுக்கு முக்கால் கோட்டைக்கு சற்று அதிகமான நெல்லை வழங்கவும் உத்தரவிட்ட செய்தியை இந்தச் செப்பேடு கூறுகிறது.
இந்த மன்னனின் பெயரில் சேரன் என்ற பெயர் வந்தாலும், இவர்கள் உண்மையான சேர மன்னர்கள் அல்ல என்கிறார் வரலாற்று ஆய்வாளர் அ.க. பெருமாள். "சங்க கால சேர மன்னர்கள் இரண்டாம் நூற்றாண்டோடு முடிந்துபோய்விட்ட நிலையில், கேரளப் பகுதிகளை வேநாட்டு மன்னர்களே ஆண்டார்கள். அவர்களில் சிலர் இந்தப் பட்டங்களைச் சூட்டிக்கொண்டனர். பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகிலிருந்து 1740வரை களக்காட்டில் துவங்கி இவர்கள் திருநெல்வேலிப் பகுதியை ஆண்டனர். அவர்களில் ஒரு மன்னராக இவர் இருக்கலாம்," என்கிறார் அ.க. பெருமாள்.
1772-ல் எழுதப்பட்ட செப்பேடு என்ன கூறுகிறது?
இரண்டாவது செப்பேடு பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இந்தச் செப்பேடு 1772ல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசூர் வள நாட்டைச் சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்ம நாயக்கரின் மகன் செக வீரராம பாண்டிய கட்டபொம்ம நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயம் இது.
இந்தச் செப்புப் பட்டயத்தில் கீழ வேம்பு நாட்டைச் சேர்ந்த முத்துலிங்க பட்டரின் புத்திரன் சிவஞான பட்டருக்கு தர்ம பிரதான சாஸனம் செய்யப்பட்டுள்ளது. இந்த செகவீரராம பாண்டிய கட்டபொம்மன், பிரிட்டிஷாரால் தூக்கிலிடப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தவர்.
திருநெல்வேலி கோவிலுக்கான தானத்தை கூறும் செப்புப் பட்டயம்
செப்புப் பட்டயங்களைப் பொறுத்தவரை, 5 பட்டயங்கள் தெளிவான செய்திகளைத் தருகின்றன. அவை அனைத்துமே கோவில்களுக்கு வழங்கிய தானங்களைப் பற்றியவை.
இதில் முதலாவது செப்புப் பட்டயம், பதினேழாம் நூற்றாண்டில் கிபி. 1682ல் எழுதப்பட்டுள்ளது. மதுரையை ஆட்சி செய்துவந்த நாயக்க மன்னர்களான ரங்க கிருஷ்ண முத்து வீரப்ப நாயக்கர் மற்றும் திருவேங்கடநாதர் ஆகியோரின் பெயரில் இந்த பட்டயம் எழுதப்பட்டுள்ளது. அதாவது, இந்த இருவருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திருநெல்வேலி நாதசுவாமி - வடிவம்மன் கோவிலில் அறக்கட்டளை ஒன்றை வன்னிக்குட்டத்து தலைவர்கள் நிறுவிய செய்தியை இந்த பட்டயம் கூறுகிறது. இதற்காக தானமாக வழங்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
2-வது பட்டயத்தில் திருப்புடைமருதூர் கோவிலுக்கான தானம்
இரண்டாவது செப்புப் பட்டயம் கி.பி. 1695ஆம் ஆண்டு எழுதப்பட்டுள்ளது. இந்தச் செப்புப் பட்டயம் விஸ்வநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரெங்க கிருட்டிண வீரப்ப நாயக்கர், விசயரெங்க சொக்கநாத நாயக்கர், தளவாய் நரசப்பய்யன், திருவேங்கட நாதரய்யன், வடமலையப்ப பிள்ளை, அனந்த பத்பநாத பிள்ளை, அட்டவணை கரணிக்கப் பிள்ளை, காரியக்காரர் மக்கள் ஆகியோருக்குப் புண்ணியம் கிடைத்திட தானம் வழங்கப்பட்ட செய்தி கூறப்பட்டுள்ளது.
திருப்புடைமருதூரில் உள்ள கோவிலுக்கு நித்திய பூசை, மாத விழா, திருப்பணி, சந்தனாதி தைல நிவேதனம் ஆகியவை நடப்பதற்காக தேவதானப் பிரமாணம் உருவாக்க, வீரகேரள முதலியார் கட்டளையிட்ட செய்தியை இந்த செப்புப் பட்டயம் கூறுகிறது. இந்தப் பட்டயத்தில் பாண்டிய மன்னர்கள் தங்களுக்கு புண்ணியம் கிடைக்க வேண்டும் என்பதற்காக மேலே குறிப்பிட்ட கோயிலுக்குச் செய்த தேவதாயத்தை கல்லில் எழுதி வைத்தது பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
மூன்றாவது பட்டயம் 17-ம் நூற்றாண்டை சேர்ந்தது
அதேபோல, களக்காடு வீர மார்த்தாண்ட ராசா என்பவருக்கு புண்ணியம் கிடைக்க இதே கோயிலுக்கு கொடுக்கப்பட்ட நிலதானம் பற்றிய குறிப்பும் பட்டயத்தில் உள்ளது.
மூன்றாவது செப்புப் பட்டயமும் கி.பி. 1695ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுள்ளது. இப்பட்டயமும் இதே கோயிலுக்கு வழங்கப்பட்ட தானத்தையே விவரிக்கிறது. முந்தைய பட்டயத்தைப் போலவே விஸ்வநாத நாயக்கர், சொக்கநாத நாயக்கர், ரங்க கிட்டிண முத்துவீரப்ப நாயக்கர், விசயரெங்க சொக்கனாத நாயக்கர், தீட்சதரய்யன், தளவாய் நரசப்பய்யன், அன்னவ ராசய்யன், வடமலையப்ப பிள்ளை, வெங்கிடாத்திரி நாயக்கரய்யன், வெங்கப்பய்யன், அனந்த பற்பநாத பிள்ளை, அட்டவணை கரணிக்கப் பிள்ளை, காரியக்காரர்கள் ஆகியோருக்கு புண்ணியம் சேர்ந்திட வேண்டும் என இந்தக் கோவிலில் பூசை செய்யவும் திருப்பணி செய்திடவும் வீரகேரள முதலியார் கட்டளையிட்டது பற்றியும் இப்பட்டயம் பேசுகிறது.
லாலுகான் சாய்பு நலனுக்கான 5-வது பட்டயம்
நான்காவது செப்புப் பட்டயம் கி.பி. 1700ல் எழுதப்பட்டுள்ளது. இந்தப் பட்டயம் தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கர், சங்கர சாஸ்திரி என்பவருக்குப் பழைய பேட்டை எனும் பகுதியைக் கொடையாகக் கொடுத்தது பற்றி செப்புப் பட்டயம் கூறுகிறது. அவ்வூரில் உள்ள பல தரப்பட்ட மக்கள் மீது விதித்துள்ள வரி வருவாயினைக் கொண்டு திருநெல்வேலி காந்திமதி அம்மனுக்கு அர்த்த சாம பூசை செய்யவும் நாள்தோறும் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்தது குறித்தும் இந்தப் பட்டயம் பேசுகிறது.
ஐந்தாவது செப்புப் பட்டயம் கி.பி. 1751ல் எழுதப்பட்டிருக்கிறது. இச்செப்புப் பட்டயம் லாலு கான் சாய்புவின் நலனுக்காகத் திருநெல்வேலி குறவர் தெருவில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நித்திய அபிஷேகம், நெய்வேத்தியம் நடப்பதற்கு திருநெல்வேலி மகைமைக்காரர், சில்லுனறி மகமைக்காரர், விடுப்பு மகமைக்காரர், புகையிலை குத்தகை உள்ளிட்டோர் தங்கள் துறையில் மாதம் ஒன்றிற்கு ஒரு பணம் வசூலித்து வழங்குவது என்று சம்மதித்து சாசனம் எழுதிக் கொடுத்ததைச் சொல்கிறது.
செப்பேட்டில் வரையப்பட்டுள்ள இயந்திரம் எது?
மேலும் ஒரு செப்பேட்டில் எந்திரம் வரையப்பட்டுள்ளது. அது எப்போது எழுதப்பட்டது என்ற குறிப்பு இல்லை. திருபனந்தாள் மடம் சார்ந்த இன்னும் இரண்டு செப்பேடுகளும் கிடைத்துள்ளன. இவை இரண்டும் கி.பி. 1958ல் எழுதப்பட்டவை. இதில் ஒரு செப்பேட்டில் மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவையின் 20 பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், குமரகுருபரர் இயற்றிய மதுரை மீனாட்சியம்மை இரட்டை மணி மாலையின் 5வது பாடலும் இதே செப்பேட்டில் எழுதப்பட்டுள்ளது.
மற்றொரு செப்பேட்டில், குமரகுருபரர் எழுதிய கந்தர் கலிவெண்பாவின் 122 கண்ணிகள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.
செப்பேடுகள் என்றால் என்ன?
மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரச செய்திகளை அறிவிக்க கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் அந்தச் செய்திகள் பொறிக்கப்பட்டன. இதில் கல்வெட்டுச் செய்திகள் பெரும்பாலும் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளாக இருக்கும். ஆனால், செப்பேட்டுகளைப் பொறுத்தவரை அரசரின் மெய் கீர்த்திகளைத் தவிர, தனி நபருக்காக அளிக்கப்படும் சாசனங்களாகவோ, செய்தியாகவோ இருக்கும். கல்வெட்டில் அறிவிக்கப்பட்ட தானங்கள்கூட மீண்டும் செப்பேட்டில் பொறிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபருக்கு அளிக்கப்படும்.
"பல்லவர் காலகட்டத்திலேயே செப்புப் பட்டயங்களை எழுதும் வழக்கம் வந்துவிட்டது. தங்கப் பட்டயங்களும் உண்டு. ஓலையிலும், கல்லிலும் அடித்து வைப்பார்கள். நிவந்தங்கள், அரசர்களின் பிரதாபங்கள், வழக்கின் தீர்ப்புகள் ஆகியவை இதில் எழுதிவைக்கப்படும். சோழர்களின் காலத்தில் மெய்க்கீர்த்திகள் செப்புப்பட்டயங்களில் எழுதப்பட்டன" என்கிறார் அ.க. பெருமாள்.
கோவில்களில் கிடைக்கும் சுவடிகளையும் இந்து சமய அறநிலையத் துறை மின்படியாக்கம் செய்துவருகிறது. இந்தக் குழுவினர் மேற்கொண்ட தேடலில், இதுவரை 1,80,612 சுருணை ஏடுகள் இதுவரை கிடைத்துள்ளன. இது தவிர, 348 இலக்கியச் சுவடிக்கட்டுகள் கிடைத்துள்ளன. இதில் சுமார் 33,000 ஏடுகள் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நெல்லையப்பர் கோவிலில் நடந்த தேடலில் சில பழமையான சுவடிகளும் கிடைத்துள்ளன. அதில் ஒரு சுவடியில் திருஞானசம்பந்தர் எழுதிய முதல் மூன்று திருமுறைகள் அடங்கிய தேவாரப் பாடல்கள் இருந்தன. சுவடியில் சுவடியைப் பிரதி செய்தவர், பிரதி செய்யப்பட்ட காலம் பற்றிய குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. சுவடியில் உள்ள எழுத்தை வைத்துப் பார்க்கும்போது சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சுவடி பிரதி செய்யப்பட்டிருக்கலாம் எனக் கருதுவதாக தாமரைச் செல்வன் தெரிவித்தார். இந்தச் சுவடியில் மொத்தம் 281 ஏடுகள் இருந்தன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்