You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் நிறைவு - மசூதிக்கான இடத்தில் என்ன நடக்கிறது?
- எழுதியவர், சையத் மோஜிஸ் இமாம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது. நவம்பர் 25-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கொடியேற்றி இதன் கட்டுமானப் பணி நிறைவடைந்ததை அறிவித்தார்.
ஆனால், மசூதிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் புதிய மசூதிக்கான கட்டுமானம் இதுவரை தொடங்கப்படவில்லை.
2019 ஆம் ஆண்டில் அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், மசூதி கட்டுவதற்கும் அயோத்தியிலேயே இடம் ஒதுக்கப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருந்தது. இதன் பின்னர், 2020 ஆம் ஆண்டில் அயோத்தியிலிருந்து சுமார் 20-25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூர் (Dhannipur) கிராமத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது.
சுன்னி மத்திய வக்ஃப் வாரியம், 'இந்தோ-இஸ்லாமிய கலாசார அறக்கட்டளை' என்ற பெயரில் ஓர் அறக்கட்டளையை நிறுவி மசூதி கட்டும் திட்டத்தைத் தயாரித்தது. ஆனால், இதுவரை கள அளவில் எந்தப் பணியும் தொடங்கப்படவில்லை.
மசூதி கட்டப்படாததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் அயோத்தியில் இருந்து உள்ள தூரம், அறக்கட்டளைக்குள் உள்ள கருத்து வேறுபாடுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை ஆகியவை அடங்கும்.
"அறக்கட்டளையிடம் நிதி இல்லை, அதனால்தான் வேலையைத் தொடங்க முடியவில்லை," என அறக்கட்டளையின் தலைவர் ஜுஃபர் அகமது ஃபாரூக்கி தெரிவித்தார்.
"நிலம் ஒதுக்கப்பட்ட பிறகு, கோவிட் தொடங்கியது. அதனால்தான் தாமதம் ஏற்பட்டது. பின்னர் நாங்கள் ஒரு வரைபடத்தை இறுதி செய்தோம், ஆனால் அதைக் கொண்டு நாங்கள் வெளியே சென்று இந்தியா முழுவதும் பலரிடம் பேசியபோது, வடிவமைப்பில் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன," என்றார்.
வழக்கும் சர்ச்சையும்
அயோத்தி வழக்கைச் சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் டிசம்பர் 18, 1961 அன்று நீதிமன்றத்தில் தொடர்ந்தது.
1949 வரை பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டது என்று வாரியம் உரிமை கோரியது. ஆனால், டிசம்பர் 22-23, 1949 அன்று இந்து தரப்பினர் அங்கு சிலைகளை வைத்ததாகக் கூறப்பட்டது. அதன்பிறகு, அரசு அதற்கு சீல் வைத்தது.
இந்த சர்ச்சையின் மையமாக 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி இருந்தது. இந்து தரப்பினர், அங்கே ஒரு இந்துக் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டது என்று வாதிட்டனர்.
டிசம்பர் 6, 1992 அன்று பாபர் மசூதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது.
அயோத்தி பிரச்னை தொடர்பாக செப்டம்பர் 30, 2010 அன்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள நிலம் இந்து தரப்பினருக்கு வழங்கப்பட்டது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக அனைத்துத் தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது, முழு நிலத்தையும் ராம் லல்லா விராஜ்மானுக்கு வழங்கியது. மசூதி கட்டுவதற்காகச் சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு அயோத்தியில் ஐந்து ஏக்கர் மாற்று நிலத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில், "சுன்னி மத்திய வக்ஃப் வாரியத்துக்கு மத்திய அரசு 1993 இல் கையகப்படுத்திய நிலத்தில் இருந்து ஐந்து ஏக்கர் நிலத்தைக் கொடுக்க வேண்டும் அல்லது மாநில அரசு அயோத்தியின் முக்கிய இடத்தில் நிலத்தை ஒதுக்க வேண்டும்," என்று கூறியது.
ஆனால், அரசு ஒதுக்கிய நிலம் அயோத்தியிலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோஹாவல் வட்டத்தில் உள்ள தன்னிப்பூர் கிராமத்தில் உள்ளது.
'தன்னிப்பூருக்கு அல்ல, அயோத்திக்கே மசூதி வழங்கப்பட்டது'
"நிலம் அயோத்தி நகராட்சி எல்லைக்குள் கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது, ஆனால் நிலம் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னிப்பூரில் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நான் ஆர்டிஐ விண்ணப்பித்துள்ளேன்," என்றார் ஆர்டிஐ ஆர்வலர் ஓம் பிரகாஷ் சிங்.
இவ்வளவு தொலைவில் உள்ள மசூதிக்குச் சாதாரண மக்கள் தொழுகை நடத்த வரமாட்டார்கள் என்று அயோத்தியைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
"அயோத்தி மக்கள் 25 கி.மீ. தொலைவில் தொழுகை நடத்தச் செல்ல மாட்டார்கள். நிலத்தை நகராட்சி எல்லைக்குள் அல்லது அதற்கு அருகில் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியிருந்தது, ஆனால் உத்தரவு மீறப்பட்டுள்ளது," என அயோத்தி அஞ்சுமன் முஹாஃபிஸ் மசாஜித் வ மகபீர் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகமது ஆசாம் காத்ரி தெரிவித்தார்.
"அரசு நினைத்தால் வளர்ச்சிப் பணிகளைச் செய்துவிட முடியும். ராமர் கோயில் அதற்கு ஒரு உதாரணம். அரசு விரும்பியிருந்தால் மசூதியும் கட்டப்பட்டிருக்கலாம்," என்று அவர் மேலும் கூறுகிறார்.
இருப்பினும், சுன்னி வக்ஃப் வாரியத்தின் தலைவர் ஜுஃபர் அகமது ஃபாரூக்கி, "அப்போது அனைவரும் இந்தத் தீர்ப்பை ஏற்றுக்கொண்டனர். அதனால் கிடைத்த நிலம் குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. தன்னிப்பூரில் முஸ்லிம் மக்கள் தொகை உள்ளது, மக்கள் தொழுகை நடத்துவார்கள்," என்கிறார்.
"தன்னிப்பூர் பகுதியில் ஏற்கனவே டஜன் கணக்கான மசூதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றம் மசூதிக்கான நிலத்தை அயோத்தி மக்களுக்குத்தான் கொடுத்தது, தன்னிப்பூர் மக்களுக்கு அல்ல," என்கிறார் உள்ளூர் பத்திரிகையாளர் இந்து பூஷன் பாண்டே.
பாபர் மசூதி சர்ச்சையில் முன்னாள் மனுதாரர் இக்பால் அன்சாரியின் பார்வை வேறு. அவர் கூறுகையில், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாடு முழுவதும் ஏற்றுக்கொண்டது, நாங்களும் ஏற்றுக்கொண்டோம். நீங்கள் வாழும் நாட்டின் சட்டத்தைப் பின்பற்றுங்கள் என்றுதான் எங்கள் மதமும் கூறுகிறது," என்றார்.
"நிலம் எங்கே கிடைத்தாலும் அங்கும் மசூதிகள் உள்ளன," அதனால் இதை விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர் கூறுகிறார்.
மசூதியின் வரைபடம் நிராகரிப்பு
2020ஆம் ஆண்டில், லக்னோ-அயோத்தி நெடுஞ்சாலையில் ரவுனாஹி காவல் நிலையத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் மசூதிக்காக ஐந்து ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கியது.
அதற்கு அருகில், வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று கூறப்படும் ஒரு பழங்கால தர்காவும் உள்ளது.
மசூதி மற்றும் அதன் வளாகத்திற்காக ஒரு விரிவான வரைபடத்தை அறக்கட்டளை தயாரித்தது, ஆனால் கட்டுமானம் இதுவரை தொடங்கப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து ஆர்.டி.ஐ. ஆர்வலர் ஓம் பிரகாஷ் சிங் தகவல் கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த அயோத்தி மேம்பாட்டு ஆணையம் (Ayodhya Development Authority - ADA), "தீயணைப்புத் துறை, பொதுப்பணித் துறை மற்றும் வனத்துறை உள்ளிட்ட 14-15 துறைகளில் இருந்து தேவையான ஆட்சேபனை இல்லாத சான்றிதழ்களை அறக்கட்டளை சமர்ப்பிக்காததால் வரைபடம் நிராகரிக்கப்பட்டது," என்று கூறியது.
ஆனால், அறக்கட்டளை தனது வாதத்தை முன்வைக்கிறது. "நாங்கள் ஒரு புதிய வரைபடம் மற்றும் புதிய கட்டமைப்பில் மசூதியைக் கட்டத் திட்டமிட்டோம், அதனால்தான் எந்தத் துறையிலிருந்தும் என்.ஓ.சி. கேட்கப்படவில்லை," என தலைவர் ஜுஃபர் அகமது ஃபாரூக்கி கூறுகிறார்.
அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் அனுராக் ஜெயின் இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.
அறக்கட்டளை இப்போது மசூதிக்காக ஒரு புதிய கோபுர வடிவமைப்பு வரைபடத்தைத் தயாரித்துள்ளது. டிசம்பர் 31ஆம் தேதிக்குள் புதிய வரைபடம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று அறக்கட்டளை கூறுகிறது.
"மசூதியின் புதிய வடிவமைப்பு கிட்டத்தட்டத் தயாராக உள்ளது. மசூதி 1400 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும், மீதமுள்ள வளாகம் பின்னர் உருவாக்கப்படும்,"என்றார் ஜுஃபர் ஃபாரூக்கி.
'அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட வருவதில்லை'
தாமதம் குறித்துத் தன்னிப்பூர் மக்களிடையே குழப்பம் நிலவுகிறது. இந்த கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த மக்கள் இந்த விவகாரம் குறித்துப் பேசத் தயங்குகின்றனர்.
தன்னிப்பூர் கிராமத்தில் இனிப்புக் கடை வைத்திருக்கும் மாஜித் கூறுகையில், "ஆரம்பத்தில் பரபரப்பு இருந்தது, ஆனால் இப்போது யாரும் கேட்பதில்லை. எல்லாம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக இப்போது கேள்விப்படுகிறோம். அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட வருவதில்லை," என்கிறார்.
கிராமத்திற்கு செல்லும் வழியில் பலரிடம் பேசியபோது, தன்னிப்பூர் கிராமத்திலேயே இரண்டு மசூதிகள் இருப்பதாக மக்கள் கூறினர்.
"ஊடகவியலாளர்கள் மட்டுமே வருகிறார்கள், அவர்களுக்குப் பதிலளித்து நாங்கள் சோர்வடைந்துவிட்டோம். வியாழக்கிழமைகளில் மட்டுமே தர்காவிற்கு யாத்ரீகர்கள் வருகிறார்கள்," என்று அவ்வழியாகச் சென்ற நெஹால் அகமது தெரிவித்தார்.
கோயில் கட்டுமானத்திற்குப் பிறகு மசூதி கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து எதிர்க்கட்சிகள் அரசைக் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரத்தில் அரசின் அணுகுமுறை ஆரம்பத்திலிருந்தே பாரபட்சமாக இருந்து வருவதாகச் சமாஜ்வாதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முகமது ஆசாம் கூறுகையில், "மசூதிக்கான இடம் அயோத்தியில் முக்கிய இடத்தில் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது, ஆனால் அதை அரசு 20 கி.மீ. தொலைவில் கொடுத்துவிட்டது. சுன்னி மத்திய வக்ஃப் வாரியம் ஒரு அரசு இயந்திரம் போலச் செயல்பட்டு, மசூதி கட்டுமானத்தில் மெத்தனமாக உள்ளது," என்றார்.
இதற்குப் பதிலளித்த பாஜக, இந்த விவகாரத்திற்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று கூறியுள்ளது. "கோயிலுக்கு மக்களிடம் ஆர்வம் இருந்தது, ஆனால் மசூதிக்கு அந்த உற்சாகம் இல்லை. மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை, ஆனால் வக்ஃப் வாரியம் தொடர்ந்து முயற்சி செய்கிறது," என பாஜக சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் குன்வர் பாசித் அலி தெரிவித்தார்.
அறக்கட்டளை உறுப்பினர்களும் நிதிப் பற்றாக்குறை குறித்துப் பேசுகின்றனர். பணம் கொடுக்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.
மருத்துவமனை அமைக்கும் திட்டம்
மசூதியின் வடிவமைப்பில் மக்கள் உடன்படாததால், 2024 ஆம் ஆண்டில் மும்பையில் நடந்த அறக்கட்டளையின் கூட்டத்தில் 150 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு வடிவத்தை மாற்ற முடிவெடுத்தனர்.
ஜுஃபர் ஃபாரூக்கி கூறுகையில், "முதல் வடிவமைப்பு குறித்து மக்களுக்கு ஆட்சேபனை இருந்தது, இது ஒரு வளாகம் போலத் தோன்றுகிறது என்றார்கள். எனவே கோபுர வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. பழைய வடிவமைப்பு மசூதி போல இல்லை என்று சமூகத்தில் ஒரு கருத்து உருவாகியிருந்தது, அதனால் நாங்கள் அதை மாற்றினோம்," என்றார்.
அந்த மசூதிக்கு, நபிகள் நாயகத்தின் பெயரான 'முகமது பின் அப்துல்லா' என்று பெயரிடப்பட்டுள்ளது. முதலில் மசூதி கட்டப்படும், அதன் பிறகு மற்ற திட்டங்கள் தொடங்கப்படும்.
அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் இருந்து வரைபட அங்கீகாரம் கிடைத்த பிறகு, மசூதி கட்ட நன்கொடை வசூலிக்க அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. சட்டரீதியான தடைகளோ அல்லது அரசின் அழுத்தமோ எதுவும் இல்லை என்று அறக்கட்டளை கூறுகிறது.
மசூதி அமையவுள்ள நிலத்தில் மருத்துவமனை மற்றும் சமுதாய சமையலறை கட்டுவதற்கும் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. ஆனால், இப்போதைக்கு அனைத்தும் காகிதத்தில் மட்டுமே உள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு