You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இரான் போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை - வெடிக்கும் மக்கள் எழுச்சி
- எழுதியவர், டேவிட் கிரிட்டென்
- பதவி, பிபிசி நியூஸ்
இரானில் சமீபத்தில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட 4 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“கடவுளுக்கு எதிரான பகைமை” காட்டியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது.
பெயர் கூறப்படாத “கலவரக்காரர்களில்” ஒருவர் தனது காரைக் கொண்டு ஒரு போலீஸ்காரரை தாக்கிக் கொன்றதாக தெஹ்ரானில் உள்ள புரட்சிகர நீதிமன்றம் கூறியுள்ளதாக நீதித்துறையின் மிசான் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இரண்டாவதாக ஒருவர் கத்தி மற்றும் துப்பாக்கி வைத்திருந்தார். மூன்றாவது நபர் போக்குவரத்தைத் தடுப்பதற்கு “அச்சுறுத்தலை” ஏற்படுத்தினார்.
நான்காவது நபர் கத்தியால் தாக்கியதாக செவ்வாய்க்கிழமை பிற்பகுதியில் மிசான் அறிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை முதல் ஐந்து மரண தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் மரண தண்டனைகளைக் கண்டித்துள்ளனர். அவை நியாயமற்ற விசாரனைகளின் முடிவுகள் என்று கூறியுள்ளனர்.
“போராட்டக்காரர்கள் விசாரணையின்போது வழக்கறிஞர்களை அணுக முடியாது. அவர்கள் தவறான வாக்குமூலங்களை வழங்குவதற்காக உடல் மற்றும் மன சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பிறகு அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்களுக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது” என்று நார்வேவை தளமாகக் கொண்டு இயங்கும் இரான் மனித உரிமைகள் இயக்குநரான மஹ்மூத்த் அமிரி-மொகத்தம் ஏஎஃப்பி செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து நபர்களின் அடையாளத்தை நீதித்துறை வெளியிடவில்லை என்றாலும், அவர்களுடைய குற்றச்சாட்டுகள் பற்றிய தகவல்கள், அவர்கள் முகமது கோபட்லூ, மனுச்சேர் மெஹ்மான் நவாஸ், மஹான் செதரத் மதனி, முகமது பொரோஹானி, சஹந்த் நூர்முகமது-சாதே ஆகியோராக இருக்கலாம் என்று மனித உரிமை ஆர்வலர்கள் நம்புவதற்கு வழிவகுத்ததாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் தெரிவித்தது.
இரானின் ஷரியா அடிப்படையிலான சட்ட அமைப்பின் கீழ், மரண தண்டனை விதிக்கப்படக்கூடிய “கடவுளுக்கு எதிரான பகை” மற்றும் “பூமியில் செய்யும் ஊழல்” போன்றவற்றோடு சேர்த்து பாதுகாப்பு தொடர்பான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 21 பேரில் அவர்களும் இருந்தனர்.
இரானின் தலைவர்கள் வெளிநாட்டு ஆதரவு “கலவரங்கள்” என்று சித்தரித்த பாதுகாப்புப் படைகளின் ஒடுக்குமுறையில் குறைந்தது 348 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர், 15,900 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று இரானுக்கு வெளியே செயல்பட்டு வரும் மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA தெரிவித்துள்ளது.
ஹிஜாப் அணிவது தொடர்பான கடுமையான விதிகளை மீறியதாகக் கூறி அறநெறி போலீசாரால் காவலில் வைக்கப்பட்டிருந்த மாசா அமினி என்ற 22 வயது பெண் மூன்று மாதங்களுக்கு முன்பு காவலில் மரணமடைந்த பிறகு, மதகுரு ஆட்சிக்கு எதிராகப் பெண்கள் தலைமையிலான போராட்டங்கள் வெடித்தன.
செவ்வாய்க்கிழமையன்று தொடங்கிய புதிய பதற்றத்துக்கு மத்தியில், 12 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து நீதித்துறையின் மரண தண்டனை அறிவிப்புகள் வந்துள்ளன.
2019ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, திடீர் எரிபொருள் விலையேற்றத்தால் கோபம் கொண்ட இரான் மக்கள் பெரிய நாடு தழுவிய போராட்டங்களை மேற்கொண்டனர். அதன் நினைவாக மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்களை மேற்கொள்வதற்கு மனித உரிமை ஆர்வலர்கள் அழைப்பு விடுத்தனர்.
செவ்வாய்க்கிழமையன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகள், தெஹ்ரான் மற்றும் பிற முக்கிய நகரங்களில் “சர்வாதிகாரிக்கு மரணம்” உட்பட, உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக முழக்கங்களை எழுப்புவதைக் காட்டியது.
தலைநகரில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில், அயதுல்லா கமேனி “வீழ்த்தப்படுவார்” என்று ஒரு கூட்டம் கூச்சலிட்டது, போராட்டக்காரர்கள் ஒரு மேடையில் தலையை மறைக்கும் ஆடையைத் தீ வைத்து எரித்தனர்.
ஒரு மெட்ரோ நிலையத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு காணொளியில் ரயில் பெட்டிக்குள் அதிகாரிகள் மக்களை அடிப்பதைக் காட்டுகிறது. மூன்றாவதாக இன்னொரு காணொளியில், பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும்போது, மக்கள் ஓடுவதையும் கீழே விழுவதையும் காண முடிந்தது.
புதன்கிழமை இரவு, தென்மேற்கு நகரமான ஐசேவில் உள்ள சந்தையில் எதிர்ப்பாளர்கள், காவல்துறை அதிகாரிகள் மீது ஆயுதம் ஏந்திய “பயங்கரவாத நபர்கள்” துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குறைந்தபட்சம் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. உயிரிழந்தவர்களில் மூன்று ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு பெண் குழந்தை அடங்குவதாக குசெஸ்தான் மாகாணத்தின் துணை ஆளுநர் தெரிவித்தார்.
செயல்பாட்டாளர் அமைப்பான '1500தஸ்விர்', ஐசேவில் அதிக எண்ணிக்கையிலான உயிரிழப்புகள் பற்றிய அறிக்கைகளைப் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினர் 10 வயது சிறுவனைக் கொன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. சில போராட்டக்காரர்கள் நகரிலுள்ள செமினரிக்கு தீ வைப்பதைக் காட்டுவதாகக் கூறிய காணொளியையும் வெளியிட்டது.
முன்னதாக, குர்திஷ் மனித உரிமைகள் குழுவான ஹெங்காவ், மாசா அமினியின் சொந்த மாகாணமான குர்திஸ்தானில் அமைந்துள்ள வடமேற்கு நகரமான கம்யரனில், பாதுகாப்புப் படையினரால் ஓர் ஆண் எதிர்ப்பாளர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவித்தது.
செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் நேரடி துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மற்றொரு நபருடைய வீட்டின் அருகே அவர் நின்று கொண்டிருந்தார் என்று கூறியது. அதோடு மேலும் இருவர், அருகிலுள்ள சனந்தாஜ் நகரிலும் கொல்லப்பட்டனர் எனவும் ஹெங்காவ் தெரிவித்தது.
நார்வேவை தளமாகக் கொண்ட ஹெங்காவ், செவ்வாய்க்கிழமை இரவு அண்டை நாடான மேற்கு அசர்பைஜானில் உள்ள புகான் நகரத்தின் கட்டுப்பாட்டை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றியதாகவும் கூறினார்.
செவ்வாய்க்கிழமையன்று புகான், கம்யரனில் “கலவரக்காரர்கள்” இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் ஒரு கர்னல் உட்பட இரு உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையால் கட்டுப்படுத்தப்படும் துணை ராணுவ பாசிஜ் எதிர்ப்புப் படையில் உறுப்பினராக இருந்த ஒரு மதகுரு, தெற்கு நகரமான ஷிராஸில் பாட்டில் குண்டுகளால் தாக்கியதில் உயிரிழந்தார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
போராட்டங்கள் தொடக்கியதிலிருந்து இதுவரை 38 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மனித உரிமை ஆர்வலர்கள் செய்தி நிறுவனமான HRANA, 43 பேர் உயிரிழந்துள்ளனர் எனக் கூறுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்