You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கி 18 ஆண்டுகள் விமானநிலையத்தில் வாழ்ந்தவர் மரணம்
18 ஆண்டுகள் பாரிஸ் விமானநிலையத்தில் வசித்த இரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி மரணமடைந்தார்.
பல நாடுகளில் குடியேற்ற பிரச்னையில் சிக்கிய நிலையில், கடந்த 1988ஆம் ஆண்டு ரோஸி சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் ஒரு சிறிய பகுதியை மெஹ்ரான் கரிமி நாசேரி தனது இல்லமாக்கினார்.
2004 ஆம் ஆண்டு டாம் ஹாங்க்ஸ் நடித்த ‘தி டெர்மினல்’ திரைப்படம் இவருடைய அனுபவத்தை மையமாக வைத்து உருவானது.
மெஹ்ரான் கரிமி நாசேரிக்கு ஃபிரான்ஸில் வாழ்வதற்கான உரிமை வழங்கப்பட்டுவிட்ட போதிலும் சில வாரங்களுக்கு முன்பு அவர் மீண்டும் விமான நிலையத்திற்கு வந்ததாகவும், தற்போது இயற்கையாக அவர் மரணமடைந்ததாகவும் விமான நிலையை அதிகாரிகள் ஏஎஃப்பி செய்து முகமையிடம் தெரிவித்தனர்.
1945ஆம் ஆண்டு இரானிய மாகாணமான குசெஸ்தானில் பிறந்த நாசேரி, தனது தாயை தேடி ஐரோப்பாவிற்கு முதன்முதலில் சென்றார்.
சரியான குடியேற்ற ஆவணங்கள் இல்லாததால் பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட அவர், சில ஆண்டுகள் பெல்ஜியத்தில் வாழ்ந்தார். அங்கிருந்து ஃபிரான்ஸ் சென்ற நாசேரி, அங்கு விமான நிலையத்தின் 2F முனையத்தை தன்னுடைய இல்லமாக்கினார்.
அங்கு தன்னுடைய வாழ்க்கை குறித்து நோட்டுகளில் எழுதியும், புத்தகங்கள் மற்றும் நாளிதழ்கள் வாசித்தும் நாட்களைக் கழித்தார்.
அவரது கதை சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததோடு, பிரபல இயக்குநர் ஸ்டீபன் ஸ்பீல்பர்க்கின் கவனத்தையும் ஈர்த்தது. அவர் இயக்கத்தில் ஹாங்க்ஸ் மற்றும் கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ் நடிப்பில் தி டெர்மினல் திரைப்படம் வெளியானது.
அப்படம் வெளியானதும் அவரிடம் பேட்டியெடுக்க பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஒரு கட்டத்தில் தன்னை சர் ஆல்ஃபிரட் என்று அழைத்துக்கொண்ட அவர், ஒரு நாளுக்கு 6 நேர்காணல்கள் வரை கொடுத்ததாக ஃபிரான்ஸின் உள்ளூர் நாளிதழ் செய்தி கூறுகிறது.
1999ஆம் ஆண்டு அகதி அந்தஸ்தும், ஃபிரான்ஸில் தங்குவதற்கான உரிமையும் வழங்கப்பட்ட போதிலும், நோய் வாய்ப்பட்டு கடந்த 2006ஆம் ஆண்டு வரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வரை விமான நிலையத்திலேயே அவர் தங்கியிருந்தார். பின்னர் திரைப்படத்திற்காக கிடைத்த பணம் மூலம் விடுதியில் தங்கி காலத்தை கழித்ததாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது.
சில வாரங்களுக்கு முன்பு விமான நிலையத்திற்கு மீண்டும் வந்த நாசேரி, இறக்கும் வரை அங்கிருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அவருடைய உடைமையில் சில ஆயிரம் யூரோக்கள் இருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்